'ழ'
தமிழுக்கே உரிய எழுத்து, சொல் எனலாம். தமிழர்களில் எத்தனை பேர் ழ வை சரியாக உச்சரிக்கிறார்கள்?
ஒரு ஐம்பது விழுக்காடு தமிழர்கள் கூட 'ழ' சரியாக உச்சரிப்பது கிடையாது.
பள்ளிகளில் தமிழாசிரியர்களில் பலபேர் இன்னமும் 'வாளப்பளம்' கேஸ்தான். இதற்காக நாம் வெட்கப்படவேண்டும். தமிழ் மொழியின் அழகே
'ழ' உச்சரிப்பில்தான் இருக்கிறது. குழந்தைகளுக்கு இப்போதே 'ழ; உச்சரிப்பை
சரியாகச்சொல்ல கற்றுக்கொடுக்க வேண்டும்.
அன்று தமிழ் சினிமாவில் நடித்த எல்லோருமே 'ழ வை அழகாக உச்சரிப்பார்கள். நாடகப்பயிற்சி அவர்களுக்கு உச்சரிப்பு செம்மையைக்கொடுத்தது. தெலுங்கை தாய் மொழியாகக்கொண்ட ரங்காராவ், நாகையா, அஞ்சலிதேவி, சாவித்திரி போன்ற பலர் தமிழை அழகாக உச்சரித்தார்கள். ஏன்? பாடகர்களில் பி.சுசீலா, எஸ்.ஜானகி, எஸ்.பி.பி.
போன்றோரின் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு அருமையாக இருக்கும்.
அவர்களும் தெலுங்கை தாய் மொழியாகக்கொண்டவர்கள்தான். எனில் தமிழர்களாகிய நம்மில் பலபேர் தமிழ் உச்சரிப்பில் அக்கறை கொள்வதில்லை. 'ழ' உச்சரிப்பு மட்டுமல்ல. வல்லினம், மெல்லின உச்சரிப்புக்கள் கூட சரியாக இருப்பதில்லை. இளைய தலைமுறையினரில்
பலபேர் 'ல' வுக்கும் 'ள' வுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார்கள்.
ஒரு மொழியின் சுகமே அழகான உச்சரிப்பில்தான் இருக்கிறது. உங்களுக்குத்தெரியுமா? மலையாளிகள் அவர்களின் மொழியை மிக அழகாகக் கையாள்வார்கள். குறிப்பாக 'ழ' வை அனைத்து தரப்பு
மக்களும் சரியாக உச்சரிப்பார்கள். சிறு குழந்தைகள் உட்பட.
நம்மவர்களுக்கு உச்சரிப்பு ஒரு விஷயமே அல்ல. நாம் சிந்திக்க வேண்டும்.
நம் மொழியை நாமே அலட்சியப்படுத்தக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக