வெள்ளி, 23 செப்டம்பர், 2011

வேட்டியோபநிஷத்

 வேட்டியோபாநிஷத் இதுதான் தலைப்பு
வேட்டி கட்டுவது என்பதையே இன்றைய இளைஞர்கள் மறந்து விட்டார்கள். வெளியே முழுப்பான்ட்  வீட்டில் முக்காப்பான்ட். இதுதான் நிலைமை.

வேட்டி என்பது ஆண்களின் அழகான உடை. தென்னிந்தியாவின் தனிப்பட்ட ஆடை எனலாம். தமிழ் திரைப்படங்களில் முன்பு வேட்டி கட்டும் கதாபாத்திரங்கள் நிறைய வந்தன.

குறிப்பாக சிவாஜி வேட்டி கட்டி நடிக்கும் படங்கள். எனக்குத்தெரிந்து வேட்டி கட்டி நடித்த கதா நாயகர்களில் சிவாஜி மாதிரி அழகாக நடித்தவர்கள் யாருமே இல்லை எனலாம்.

அவர் வேட்டி கட்டி நடந்து வரும் அழகே தனி. நானெல்லாம் வேட்டி கட்ட
கற்றுக்கொண்டதே சிவாஜியைப்பார்த்துத்தான்-ஏகலைவன் மாதிரி.
கருப்பு-வெள்ளை படங்களாகட்டும், கலராகட்டும்-அசத்தியிருப்பார்.

தில்லானா மோகனாம்பாள், சவாலே சமாளி, பாரத விலாஸ் போன்ற பல படங்கள் உதாரணம். வேட்டியையும் நடிக்க வைக்கும் திறமை அவருக்கே உரியது.

அப்படி ஒரு கலை நயத்தோடு வேட்டி கட்டுவார். தழையத்தழைய வேட்டி
கட்டும் அவருடைய பாணி மிகவும் ரசிக்கக்கூடிய ஒன்று.

இன்றைய கால கட்டத்தில் வேட்டி, வசதி இல்லாத ஒன்றாக இருக்கலாம்.
எனில் ஒன்று . வார இறுதி நாட்களில் வேட்டி கட்டிக்கொண்டு கோவிலுக்கோ உறவினர் வீட்டுக்கோ உங்களின் இளம்  மனைவியுடன் செல்லுங்கள். "பாத்தியா லட்ச்ச லட்சமா சம்பாதிக்கிறான் இந்த சின்ன வயசிலேயே வீடு கார் எல்லாம் வாங்கிட்டான். இருந்தாலும் வேட்டி கட்டிக்கிட்டு எவ்வளவு சிம்பிளா இருக்கான், பாத்தியா" என்று உறவினர்கள்
உங்களைப்பாராட்டலாம்.

காதலிக்கும் இளைஞர்கள் சிம்பிளாக வேட்டி கட்டிக்கொண்டு வளைய வாருங்கள். உங்கள் காதலியின் அபிமானத்தைப்பெறலாம்.

எல்லாவற்றையும் விட வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு பீச் பக்கம் காலாற நடந்து செல்லுங்கள். காற்றின் 'எல்லையில்லா' சஞ்சாரத்தை
இதமாக உணரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக