சென்னை பெரம்பூரில் குடியிருந்தபோது அதைச்சுற்றியுள்ள பகுதிகள் புரசை போன்றவை பழக்கமானது. அதற்குமுன்பு கிட்டத்திட்ட எட்டு வருடங்கள் நாங்கள் குடியிருந்தது ஆவடியில்.
ஆவடி. ஏற்கனவே நான் குறிப்பிட்டிருந்தபடி அது ஒரு குட்டி கேரளா. அங்கு இருந்த ஒரே ஒரு தியேட்டர் ராமரத்னா. அது எங்களுக்கு ரொம்பவும் தோஸ்த். வடக்கே வேலை பார்த்த என் தமையனார் ஆவடிக்கு மாற்றல் வாங்கி வந்ததும்,என் பள்ளிப்பருவம் அங்கு கழிந்ததும் நேற்று போல் இருக்கிறது. நான் மிகச்சிறு வயதிலேயே தந்தையை இழந்தவன். தமையனாரின் அரவணைப்பில்தான் வளர்ந்தேன்.
அன்று ராமரத்தினாவில் வாரம் ஒரு படம் மாற்றுவார்கள். ஒரு ஆர்டிஸ்ட்.
ஏகேபி சாமி என்று பெயர். அவர்தான் படம் பேரையெல்லாம் பெரிதாக பானரில் எழுதி கீழே ஏகேபி சாமி என்று கையெழுத்திடுவார்.
நாளை வெள்ளி என்றால் இன்று மாலை அந்த பானர் தட்டியை கீழே இறக்கி படத்தின் பெயரை அழகாக எழுதிக்கொண்டிருப்பார். நாங்கள் சிறுவர்கள் சிலபேர் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம்.
சில படங்களுக்கு போக வேண்டும் என்றால் 'இன்றே கடைசி ' அன்று பார்க்கலாம் என்பார்கள் வீட்டில். காரணம் வியாழக்கிழமை அன்று 'இன்றே கடைசி' என்று போடுவார்கள்.
தமையனார் வடக்கே வேலை பார்த்தவர் என்பதால் ஹிந்தி அவருக்கு நன்றாகத்தெரியும். எனவே ராமரத்னாவில் ஹிந்திப்படம் வந்தால் என்னையும் அழைத்துச்செல்வார் . அப்படிப்பார்த்த படங்கள்தான் ஆயி மிலன் கி பேலா,சூரஜ், பத்தற்கி சனம், அந்தாஸ் ஆராதனா போன்ற பல படங்கள்.
ஆவடியில் ஹிந்திக்காரர்களும். மலையாளிகளும் அதிகம் என்பதால்
ஹிந்தி ,மலையாளப்படங்கள் அங்கு அடிக்கடி வரும்.
மலையாளப்படங்கள் வந்தால் வெள்ளி, சனி ஞாயிறு மட்டும் என்று போடுவார்கள் . கூட்டம் அலை மோதும். நாங்கள் குடியிருந்த பகுதியில் மலையாளிகள் அதிகம் வசித்தார்கள். அவர்களில் பலபேர் தமையனாருடன் வேலை பார்ப்பவர்கள். பிறகென்ன மலையாளப்படங்களுக்கும் கூட்டிச்செல்வார்கள்.
திரையில் படம் ஆரம்பித்து ஒவ்வொரு கதாபாத்திரங்கள் பேசத்தொடங்கும்போதே பார்வையாளர்கள் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். என்ன எழவுக்கு இவர்கள் சிரிக்கிறார்கள் என்றே புரியாது.
அது மட்டுமல்ல படமும் படு ஸ்லோவாக நகருமா? செம கடுப்பாக இருக்கும் எனக்கு.
நான் மிகவும் கிண்டலடிப்பேன். அவர்கள் சிரித்துக்கொண்டே என் கன்னத்தில் தட்டிச்செல்வார்கள்.
அன்று கேரள மக்களுக்கு சென்னை ஒரு வளைகுடா நாடு அல்லது அமெரிக்கா மாதிரி. மலையாளப்படங்களில் கூட
தந்தை பாத்திரங்களில் நடிப்பவர்கள் 'அவன் அங்கு மதிராசிலா ' என்று பெருமையாகச்சொல்வார்கள்
கதா பாத்திரங்கள் பெரும்பாலும் சென்னையில் வேலை பார்த்து ஊருக்கு பணம் அனுப்புவது போல் காட்சியமைப்பு இருக்கும்.
குடியிருந்த கோவில், எங்க மாமா, தில்லானா மோகனாம்பாள், அடிமைப்பெண், சொர்க்கம் அன்னை வேளாங்கண்ணி, நான், பட்டணத்தில் பூதம், இன்னும் பல கருப்பு வெள்ளைப்படங்கள் ராமரத்னாவில் பார்த்தவை.
பக்திப்படங்களான சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, போன்ற படங்களும்
அங்கு பார்த்தவைதான்.
பட்டணத்தில் பூதம் படத்தில் கே.ஆர் விஜயா நீச்சல் உடையில் வருகிறார்
என்பதற்காக முதலில் வீட்டில் சம்மதிக்கவில்லை. பிறகு பல பேர் அது குழந்தைகளுக்கான மாஜிக் படம் என்று யாரோ சொன்னதன் பேரில் அழைத்துச்சென்றார்கள்.
அதில் சீ பூம்பா என்னும் பூதம் தினசரியில் படம் பார்த்துக்கொண்டிருக்கும்.
பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடல் காட்சி அந்த பேப்பரில் ஓடிக்கொண்டிருக்கும். அடுத்த பக்கத்தில் எங்க வீட்டுப்பிள்ளை விளம்பரம்.
அதிலும் சீ பூம்பா என்று விரலைச்சுழட்டி நான் ஆணையிட்டால் என்ற
பாடலை காண்பிக்கும்.
அன்று ஆச்சரியப்பட வைத்த அந்தக்காட்சி இன்று சீ பூம்பா என்று விரலைச்சுழட்டினால் யு டியுபில் தெரிகிறது. அதே பாட்டு, அதே காட்சி.
இன்று ராமரத்னா இருக்கிறதா என்று தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக