சனி, 8 அக்டோபர், 2011

Indian Rupee

இது மிகச்சமீபத்தில் கேரளாவில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் மலையாளப்படம். ப்ரித்விராஜ், திலகன் போன்றோர் நடித்திருக்கிறார்கள்.
இயக்கம்- ரஞ்சித். இவர்தான் முதன்முதலாக ப்ரித்விராஜை அறிமுகப்படுத்தி
'நந்தனம்' என்ற வெற்றிப்படத்தைக்கொடுத்தவர் .

இந்தியன் ருப்பீ மிக, மிக, மிக சாதாரணப்படம். ப்ரித்விராஜ்ஜும். நண்பரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் நடத்துகிறார்கள் . கோழிக்கோடு நகரத்தில் ஒரு பழைய கட்டிடத்தின் மூலையில் சிறிய அறைதான் அலுவலகம். ப்ரித்விராஜுக்கு வீட்டில் அம்மா, திருமண வயதில் ஒரு தங்கை. தங்களின் மேல்கை புரோக்கர்களின் கீழ் அவ்வப்போது தகவல் கொடுத்து சிறிய கமிஷன் வாங்கி பிழைப்பை ஓட்டுகிறார்கள் பிரித்வியும், நண்பனும்.

என்றாவது ஒரு நாள் ரியல் எஸ்டேட்  பிசினசில் பெரிய ஆளாக வேண்டும் என்ற கனவோடு காலம் தள்ளுகிறார்கள்.

தன் காதலியின் நண்பியான ஒரு  பணக்கார பெண்மணி, தனது  கடல் போன்ற
எஸ்டேட் ஐ  விற்க விரும்புகிறார் என்று கேள்விப்பட்டு அவரிடமிருந்து விற்பனை அதிகாரத்தை கையெழுத்திட்டு வாங்குகிறார் ப்ரித்வி. வேறு புரோக்கர்கள் தலையிடாமல் இருக்க இந்த ஏற்பாடு.  திலகன் தன் வீட்டை விற்றுத்தரும்படி ப்ரித்வியை சமீபிக்க, மேல்கை   புரோக்கர்களிடமிருந்து
அட்வான்ஸ் வாங்கி திலகனிடம் கொடுக்கிறார் ப்ரித்வி. விஷயம் கேள்விப்பட்டு வெளிநாட்டிலிருந்து வரும் திலகனின் மகன், அதை தடுத்து நிறுத்தி
'வீடு என் பேரில் இருக்கிறது. அதை விற்க திலகனுக்கு  உரிமை இல்லை' என்று கூறி, தகப்பனையும் வீட்டை விட்டு துரத்தி விடுகிறான். ஏற்கனவே
மனைவியை இழந்தவர் திலகன். வில்லங்கமான இந்த ஏற்பாட்டினால்
மேல் கை புரோக்கர்களின் கேலிக்கு ஆளாகிறார் ப்ரித்வி.

சுற்றித்திரியும் திலகன் ஒரு முறை ப்ரித்வியைப்பார்க்க அவர் வீட்டிற்கு வருகிறார். அவரை வரவேற்கும் ப்ரித்வியின் தங்கை களைப்படைந்திருக்கும் அவரின் பசிக்கு உணவளிக்கிறாள். அன்றுதான் அவளைப்பெண் பார்க்க வருகிறார்கள். பொறுப்புடன் நடக்க வேண்டிய ப்ரித்வி பணமில்லாத காரணத்தால் மாப்பிள்ளை வீட்டாரை நேரிட பயந்து
மொபைலையும் சுவிட்ச் ஆப் பண்ணி நகரத்தில் சுற்றி நடக்கிறார்.
வரும் மாப்பிள்ளை வீட்டாரிடம் திலகன்  சாதுர்யமாகப்பேசி சீதனம் வாங்க வேண்டும் என்ற அவர்களின் மன நிலையை மாற்றி எடுக்கிறார். ' பசியுடன் வரும் மனிதனுக்கு அவன் கேளாமலே குறிப்பறிந்து உணவளிக்கும் இந்தப்பெண், உனக்கு மனைவியாக வர நீ மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும், என்று திலகன் இருவரையும் வாழ்த்துகிறார் .

விஷயத்தைக்கேள்விப்படும் ப்ரித்வி நெகிழ்ந்து, திலகனை தன் அலுவகத்திலேயே தங்க வைக்கிறார். இதற்கிடையில் 
விற்பனை அதிகாரத்தை கொடுத்த எஸ்டேட் பெண்மணி அந்த இடத்தை 
வேறு யாருக்கோ விற்றுவிட்டார் என்று கேள்விப்படும் ப்ரித்வி செய்வதறியாது திகைக்க 
திலகன் கொடுக்கும் 'தில்லாலங்கடி ' யோசனையால் அந்த எஸ்டேட் பெண்மணியிடமிருந்து 25 லட்சம் நஷ்ட ஈடு வாங்கிவிடுகிறார் .

முதன் முதலாக வாழ்க்கையில் அவ்வளவு பணத்தைப்பார்த்த ப்ரித்வி திலகனிடம் 
பெரு மதிப்புக்கொள்கிறார். இருந்தும் ஒரு குற்ற உணர்ச்சி. காதலியின் நண்பியை ஏமாற்றி விட்டோமே என்று. ஆறுதல் கூறும் திலகன் 
'நாணம் கெட்டு பணம் உண்டாக்கினால் - உண்டாகும் நாணக்கேட்டை அந்தப்பணமே தீர்த்து விடும்' என்று ஒரு  பழமொழியும் உதிர்க்கிறார் .

இப்போது 25 லட்சம் கையில். மேல்கை புரோக்கர்களின் உதவி இல்லாமல் 
சொந்தமாக தொழில் நடத்த தீர்மானிக்கிறார் ப்ரித்வி .

நகரத்தில் பெரிய புள்ளியான' பாப்பச்சன்' என்பவர் தனது வியாபார கட்டிடத்தை விற்க இருக்கிறார் என்று கேள்விப்படும் ப்ரித்வி விலை கேட்க அவர் ஒண்ணேகால் கோடி என்கிறார்.
விஷயம் 'லீக்காக' மேல்கை புரோக்கர்கள் ஒரு பார்ட்டியை கொண்டு வருகிறார்கள். அவர்களிட கறாராக பேசும் பாப்பச்சன் இன்றே, இப்போதே அட்வான்சாக 25 லட்சம் கேட்கிறார். அன்று sunday என்பதால் அடுத்த நாள்
அட்வான்ஸ் தருவதாக வந்த பார்ட்டி சொல்ல, பாப்பச்சன் பிடிவாதமாக இருக்கிறார். தலையிடும் ப்ரித்வி 25 லட்சத்தை தான் ஏற்பாடு செய்வதாக கூறுகிறார். இதை விரும்பாத மேல்கை புரோக்கர்கள் வந்த பார்ட்டியின்  மனதை கலைத்துவிடுகிறார்கள்.

எனினும் கையிலிருக்கும் 25 லட்சத்தை அட்வான்சாக ப்ரித்வி பாப்பச்சனிடம் கொடுக்கிறார். நானே குறிப்பிட்ட நாளுக்குள் வேறு ஒரு பார்ட்டியை ஏற்பாடு செய்து, டீலிங்கை முடிப்பதாக வாக்கு கொடுக்கிறார்.
குறிப்பிட்ட நாட்களுக்குள் இதை முடிக்காவிட்டால் நீ தந்த அட்வான்ஸ்' ஸ்வாஹா '
பாப்பச்சன்.

அப்படி  இப்படி என்று 50 லட்சத்தை ஏற்பாடு  செய்துவிடும் ப்ரித்வி மீதி  50
லட்சத்திற்கு என்ன செய்வது என்று திணறும் நேரத்தில் ஒரு வளைகுடா வாழ் நண்பனிடம் உதவி கேட்கிறான். தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லும் நண்பன் வேறு ஒரு யோசனை சொல்கிறான். 'உன்னிடம் இருக்கும் 50 லட்சத்தை நான் சொல்லும் நம்பிக்கையான ஆளிடம் கொடு. அவன் இரட்டிப்பாக ஒரு கோடி தருவான்' என்கிறான் . 

திகைக்கும் ப்ரித்வி 'கள்ள நோட்டா' என்று மிரள்கிறார். 'கவலைப்படாதே அனைத்தும் வெளி நாட்டில் அச்சடிக்கப்படுபவை. யாராலும் கண்டு பிடிக்க முடியாது' என்கிறான்.

அறைக்கு வரும் ப்ரித்வி இந்த  யோசனையை கூட இருப்பவர்களிடம் சொல்ல 'அவர்கள் தடுக்கிறார்கள்'
வேண்டாம் இந்த விஷப்பரீட்சை என்று எச்சரிக்கிறார்கள். 'நான் ரிஸ்க் எடுக்க தயாராகிவிட்டேன். எனக்கு பணக்காரனாக வேண்டும் என்று உறுதியாக கூறுகிறார்.

சொன்னபடி ஒரு கோடியை சாக்கில் கட்டி பாப்பச்சனிடம் சேர்க்கும் ப்ரித்வி 
எண்ணி கொள்ளும்படி சொல்லிவிட்டு பத்திரத்தையும் வாங்கி வந்து விடுகிறார். கொஞ்ச நேரத்தில் பாப்பச்சனிடம் இருந்து போன் வருகிறது.
தந்த பணத்தில் ஒரே ஒரு ஆயிரம் குறைகிறது என்று.
அவ்வளவுதானே அதை நான் தந்துவிடுகிறேன் என்று சொல்லும் ப்ரித்வி
நிம்மதி பெரு மூச்சு விடுகிறார்.

காணாமல் போன அந்த ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு போலீசிடம் சிக்குகிறது.

ப்ரித்வி சிக்கினாரா? மீண்டாரா என்பது க்ளைமாக்ஸ்.

தொடரும்
,  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக