திங்கள், 19 செப்டம்பர், 2011

எளிமை

எளிமை ஒரு நிம்மதியான விஷயம். தன் எளிமையால் உலகையே தன் பக்கம் ஈர்த்தவர் காந்திஜி. சூர்யன் அஸ்தமிக்காத ராஜ்ஜியம் என கொக்கரித்த வெள்ளைக்காரர்கள் எளிமையே உருவான காந்தியிடம் தோற்றுப்போனார்கள்.

அட்டன்பரோவின் காந்தி சினிமாவில் ஒரு காட்சி. குற்றம் சாட்டப்பட்ட காந்தி நீதிமன்றத்துக்குள் நுழைவார். கூண்டில் ஏறப்போகும் அவரைக்கண்டு
நீதிபதி மரியாதையுடன் எழுந்து நிற்பார். அதைப்பார்த்து அனைவரும் எழுந்து நிற்பார்கள்.

இது காந்தின் எளிமைக்கு கிடைத்த மரியாதை. ஏன்? அதற்கு முன்பு எளிமைக்கு மரியாதை இல்லையா?

புத்தனும், ஆதி சங்கரனும் ஏசுவும் மற்ற ஆன்மீகத்தலைவர்களும், எளிமையை போதித்தவர்கள் தான்.

எனினும் உலக அளவில் எளிமைக்கு காந்தியால் தான் மரியாதை கிடைத்தது.

பணம் பண்ணும் இன்றைய அவசர உலகம் எளிமையை மறுக்கிறது.
வாழ்வின் வசதிகளில் திகட்டத்திகட்ட சுகம் தேடி அலைகிறது.

தேவை இருக்கிறதோ  இல்லையோ எல்லாவற்றையும் வாங்கி வீட்டில் அடுக்கி விடவேண்டும். வீடு முழுவதும் குளிரூட்டப்படவேண்டும்.

ரயில் பயணங்களில் கூட குளிரூட்டப்பட்ட பெட்டிதான் வேண்டும்.
பிழைப்புக்காக பட்டணம் வருவோர் காசு பணம் நிறைய பார்த்தவுடன்,
கிராமத்தின் குல தெய்வ பூஜைக்கு சென்றாலும் அங்கு தங்குவதற்கு
குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதிதான் தேடுகிறார்கள்.

கேட்டால் அப்படியே பழகிவிட்டோம் என்கிறார்கள்.

வெயிலைப்பழகு, மழையைப்பழகு , இயற்கையான குளிர் காற்றைப்பழகு.

இவை ஆரோக்கியத்தை தரும். நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

இயற்கையோடு பழகினால் எளிமையைச்சொல்லித்தரும்.
இயல்பான வாழ்க்கையைச்சொல்லித்தரும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக