செவ்வாய், 31 மே, 2016

நவ ரசம்

ஒவ்வொரு கணமும்
உரசிச் செல்லும்
பயங்கள் -
ஏதோ ஒரு விதத்தில்

உள்ளிலும் வெளியிலுமாய்
சுற்றித் திரிவதொன்றே என
கண் கட்டும்

ஆற்றொணா நினைவழுத்தல்கள்
தொக்கி நிற்பதும் - வேற்றுணர்வின்றி
வேராய் ஓடுவதும் நாராசமெனினும்

அது ஏனோ நவரசமும் கலந்தது!

சனி, 28 மே, 2016

அப்படித்தான்.....

பின் தொடர்வதெல்லாம்
பின்னலாகத்தான் தோன்றும்

எதற்கும் கலங்காத உள்ளம்
என்பது நடிப்பன்றி
வேறொன்றுமில்லை

நிறைவு என்பது 
நாள் பட்டுப் போகும்போது
சோர்ந்துவிடும் ஒன்று

விரைவில் தீர்மானிக்கப்படலாம்
அரைமனதாகத்தான்
செயலாற்ற வேண்டுமென்று

தொடங்கும்போதே
தப்பித்துக் கொள்ளும்
எண்ணமே மேலோங்கும்
எதிலும்!

வெள்ளி, 27 மே, 2016

அது அவ்வாறு

அவ்வாறு இருப்பது மட்டுமே
அவ்வாறான காரணங்களைத்
தோற்றுவிக்கிறது

பாதைகள் முடிவில்லாமல்
சென்றாலும் பயணங்கள்
என்றாவது முடிந்துதான்
தீரவேண்டும்

விரக்தி எதிலும்
ஒட்டுவதில்லை

தெரிந்து ஒன்றும்
செய்யப்போவதில்லை
தெரிவது மட்டுமே

தீர்வுமில்லை

அப்படியே நகரட்டும்
வாழ்க்கையின்
நிகழ்வுகள்

மாற்றங்கள் தானே
மாறிக் கொள்ளும்

அவ்வாறான காரணமும்
அவ்வாறே!

வியாழன், 26 மே, 2016

ஒன்றுமில்லை

ஒன்றுமில்லை -

எதுவும் நடந்து
முடிந்தபின்

அன்றன்றைக்கு
நடப்பதும்

பின்
ஒன்றுமில்லை

என்றுமில்லை -
எப்போவாவதுதான்
என்பதன் உத்தேசமும்

ஏனோ
ஒன்றுமில்லை

சரி! வேறொன்று
மில்லையே என்றாலும்

எனக்கொன்றுமில்லை!



வெற்றிடம்

வெற்றிடம்


வேறு வேறு இடமும்
வெற்றிடமே

இடம் மாறினால் மனதில்
முதலில் வருவது
வெற்றிடமே

வேறிடம் பார்த்துச்
செல்வதும் வெற்றிடம்
தேடியே

அமைதி வேண்டுமெனில்
உள்ளத்தில் வரவேண்டியதும்

அதே வெற்றிடமே!