வெள்ளி, 30 டிசம்பர், 2011

கல் தெய்வங்கள்

கல் தெய்வங்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்

அவை அசையாச்
சொத்துக்கள்

முட்டினாலும்
மோதினாலும்
அழுதாலும்
கனியாது

திட்டினாலும்
அடித்தாலும்
இரங்காது

சுனாமி புயல்
வந்து அழிந்தாலும்
அழியாது

குற்ற உணர்ச்சியால்
மன்னிப்பு கேட்டாலும்
கிடைக்காது

தப்பித் தவறி
நன்மை நிகழ்ந்து
கண்ணீர் மல்க
நன்றி கூறினாலும்
ஏற்காது

ஊட்டினாலும்
உண்ணாது

கொடுத்தாலும்
வாங்காது

வெறுத்தாலும்
விடாது

இருந்தும்
கல் தெய்வங்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்

அவை அசையாச்
சொத்துக்கள்


சனி, 17 டிசம்பர், 2011

ஒன்றுமில்லை

ஒன்றுமில்லை

கூடங்குளமானாலும்
முல்லைப்பெரியாரானாலும்

2 ஜி ஆனாலும்
வரப்போகும்
3 ஜி 4 ஜி 5 ஜியானாலும்

பெத்த

ஊழலேயானாலும்
தமிழ் மக்களின்
உறவே போனாலும்

எப்போதும்
ஆட்சியாளர்களுக்கு

ஒன்றுமில்லை

http://subramanian-thamirabharani.blogspot.com/

18/12/2011   1pm

வெள்ளி, 9 டிசம்பர், 2011

இணைப்பு

இணைப்பு

ஒன்றோடுன்று இணைவது சுகம்


நாடுகள் இணைவதும் பலம்
புல்லுருவிகள்
தடையிடாவிட்டால்

இணைப்பு அறிவை வளர்க்கும்
பெருமளவில்
புரிந்து கொண்டால்

நதியிணைப்பு தாகம் தீர்க்கும்
பின்
பசியைப்போக்கும்
தலை முறைகளாய்

நாடாள்பவர் இணைந்தால்
மக்கள் நலம்

மேலும் சொல்வதற்கு
ஒன்றுமில்லை

ஒன்றோடொன்று இணைவது சுகம்


09/12/2011  6.55pm

செவ்வாய், 6 டிசம்பர், 2011

அணை - கட்டு

அணை - கட்டு

முல்லைப்பெரியார் பிரச்சனையை இந்த அளவுக்கு பெரிதாக்கியதே கேரள
அமைச்சர்களும், ஊடகங்களும் தான்.

செய்தி ஊடகங்களின் சமீபத்திய போக்கும் அப்படித்தான் இருக்கின்றன.
அரை மணி நேர செய்தி வாசிப்பில் 25 நிமிடங்கள் அணைக்கட்டைப்பற்றியே இருக்கின்றன.

முதலில் இம்மாதிரியான பயமுறுத்தல் நடவடிக்கைகளுக்கு அணை - கட்டவேண்டும். சுமுகமான தீர்வுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி யோசித்து இரு மாநில மக்களுக்கும் தேவையான
நன்மைகள் கிடைக்கும்படிச்செய்ய வேண்டும்.

அதை விடுத்து வன்முறையை கட்டவிழ்த்து விடுவது போன்ற அறிக்கைகளுக்கும், செய்தி வாசிப்புகளுக்கும் அணை - கட்டுவதுதான்
சிறந்தது என்று தோன்றுகிறது.

6/12/2011  7-11pm.

http://subramanian-thamirabharani.blogspot.com/

சனி, 26 நவம்பர், 2011

பயம்

பயம்

அத்துடன் அலட்சியம். இரு மாநிலங்களுக்கிடையேயான புரிதலில்லாத
ஒரு விஷயமாக முல்லைப்பெரியார் பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறது.

சமீப காலமாக அடிக்கடி உண்டாகும் சிறு சிறு பூமி அதிர்வுகள், எப்போது
பெரிதாகுமோ என்று கவலைப்படும் கேரளம். தண்ணீர் கிடைக்காதோ
என்று ஆதங்கப்படும் தமிழகம்.

பழைய அணைக்கட்டின் பலவீனம் - அது எங்காவது பூமி அதிர்வினால்
உடைந்தால் பல லட்சம் உயிர்கள் பலியாகுமே என்ற கேரளத்தின்
கவலையில் நியாயமில்லை என்று சொல்ல முடியாது.

அதே நேரத்தில் புதிய அணைக்கட்டு நிர்மாணித்தால் தங்களுக்கு தண்ணீர்
கிடைக்காமல் போய்விடுமோ என்ற தமிழகத்தின் சந்தேகத்தையும்
குறை கூற முடியாது.

உடனடியாக மத்திய அரசு இரு மாநில முதல்வர்களையும், மற்றும்
முதன்மையான பொறியியல் வல்லுனர்களையும் அவர்களோடு
உன்னத நீதிமான்களையும் சேர்த்து போர்க்கால அடிப்படையில்
ஆலோசனை நடத்த வேண்டும்.

காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லாமல் திறந்த மனதுடன் மக்களின்
நலனுக்காக (நம் இந்திய மக்கள் ) என்ற நினைப்புடன் பேச்சு
வார்த்தை நடத்தவேண்டும்.

கண்டிப்பாக ஒரு நல்ல முடிவு கிடைக்கும். மக்களின் பயத்தையும்
சந்தேகத்தையும் போக்குவது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

என் பூமி, என் தண்ணீர், என்றெல்லாம் வித்தியாசம் பார்க்காமல்
நம் மக்களின் வாழ்வு என்ற  எண்ணத்துடன் செயல் பட்டால்
நிச்சயமாக ஒரு விடிவு கிடைக்கும்.

அரசியல் உள் நோக்கம் எல்லாம் தேவையேயில்லை. மக்களிடம் வித்தியாசம் பார்க்காமல் அவர்களுக்காக நல்லதைச்செய்யும்
அரசியல்வாதிகளுக்கு என்றும் தோல்வியில்லை.

முதலில் நம் இந்திய மக்கள் என்ற நினைப்பு வரவேண்டும். மாநிலப்பிரிவினைகள் நமக்குள் தேவையில்லை.

பயம், சந்தேகமில்லாத வாழ்க்கை, மக்களுக்கு இதற்கான அடித்தளம் அமைய
இரு மாநில முதல்வர்களும் முயன்றால் அது சரித்திரத்தில் ஒரு பொன்
எழுத்துக்களாக பொறிக்கப்படும்.

http://subramanian-thamirabharani.blogspot.com/

Date 27/11/2011 - 1.11pm



வெள்ளி, 25 நவம்பர், 2011

Dam 999

வெறும் மொக்கைப்படம்.

கொஞ்ச நாள் வெளி நாட்டில் வாழ்ந்தால் அரை நிக்கர் போட்டுக்கொண்டு
ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் பண்ணிப்பணம்  பார்க்கலாம் என்ற ஆசை
போலிருக்கிறது இயக்குனருக்கு. லோக்கல் சினிமா ரேஞ்சுக்கு கூட
படத்தின் தரம் உயரவில்லை.

திரைக்கதையில் ஆயிரம் ஓட்டைகள். தமிழ், ஹிந்தி  நடிக நடிகர்களுடன்
ஒரு சில வெள்ளைக்காரர்களும் இருந்தால் ஹாலிவுட் தரம் கிடைத்து
விடும் என்று தப்புக்கணக்கு போட்டு, இயக்குனர் சூடு போட்டுக்கொண்டதுதான் மிச்சம்.

கேரளாவின் உள் கிராமத்தில் உள்ளவர்களும், பரம்பரையாக குடியிருப்பவர்களும் ஆங்கிலத்திலேயே  பேசிக்கொள்வது சரியான காமெடி.
நடு நடுவே ஒரு ஹிந்திப்பாடல் ஒரு தாலாட்டுப்பாடல் மலையாளத்தில்-
என்றெல்லாம் இடைச்செருகல் வேறு. சகிக்கவில்லை.

ஜோசியத்தை நம்பி காதலித்த பெண் கைவிட எங்கோ அலைந்து திரிந்து
ஒரு திருமணத்தில் பிறந்த பையனுடன் தன் காதலியின் கிராமத்துக்கே
வரும் இளைஞன், தன் காதலியைக்கண்டு மீண்டும் காதலை புதுப்பிக்க
நினைப்பதும், பின்னர் வரும் சில காட்சி அமைப்புகளும் என இடைவேளை
வரை படம் ஜவ்வுகிறது.

அணையை உடைப்பதற்கென ஒரு அரசியல்வாதியின் பொறுப்பற்ற
வில்லத்தனம். இது ஒரு குறியீடு.

அணை உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து வரும் காட்சி அமைப்புகளின்
கிராபிக்ஸ் சரியான பல்லிளிப்பு. இதற்கா 50 கோடி செலவானது?

3D யாம். நம்பமுடியவில்லை கண்ணாடியை கழட்டிவிட்டு பார்த்தாலும்
படம் அதைவிட பளிச்சென்று இருக்கிறது. 30 வருடங்களுக்கு முன்
பார்த்த மை டியர் குட்டிச்சாத்தான் இதை விட நல்ல 3D effect கொடுத்ததாக
நினைவு.

மொத்தத்தில் படம் ஒட்டவில்லை. பார்த்தவர்களே வாஷ் அவுட் பண்ணிவிட்டார்கள்.


http://subramanian-thamirabharani.blogspot.com/
.

சனி, 12 நவம்பர், 2011

KF

கிங் பிஷரின் தலைவர் மல்லையா நெருக்கடியில் இருக்கிறாராம்.
உதவச்சொல்லி பிரதமரிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

கண்டிப்பாக பிரதமர் உதவுவார் என்றே தோன்றுகிறது. கார்ப்பரேட்
முதலைகளை காங்கிரஸ் என்றுமே கை விட்டதில்லை. முதலில்
மறுப்பது போல் நாடகமாடி வேறு பிரச்சனைகளுக்கு மக்களை திசை திருப்பி சத்தமேயில்லாமல் காரியத்தை முடித்து விடுவார்கள்.

கோடிக்கணக்கான பணத்தில் புரளும் மல்லையாவின் உதவி அடுத்த
தேர்தலுக்கு கண்டிப்பாகத்தேவைப்படுமே.

அதற்காகவாவது காங்கிரஸ் தலைமை இப்போதைய நெருக்கடியிலிருந்து
மீள மல்லையாவிற்கு உதவி செய்யும். சாதாரண மக்களின் துன்பங்களைக்கண்டு முகத்தை திருப்பிச்செல்லும் பிரதமர், மல்லையா
போன்ற முதலைகள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார்.

இந்த உதவி மட்டும் மல்லையாவிற்கு கிடைத்துவிட்டால் இதையே ஒரு
உதாரணமாகக்கொண்டு அம்பானி போன்ற கார்பரேட் பெரு முதலைகள்
நாளையே ஒரு நீளமான நஷ்டக்கணக்கை காண்பித்து அரசின்
உதவியைக்கோரும் நிலைமையும் வரலாம்.

எதையும் தாங்கும் இதயம்தான் இந்திய மக்களுக்கு உண்டே!!!

சனி, 5 நவம்பர், 2011

வானுயர 3

மீண்டும் பெட்ரோல் விலை உயர்வு. பயந்தது போலவே காரியங்கள் நடந்து
கொண்டிருக்கின்றன. நிதியமைச்சர் 'இதில் சர்க்கார் ஒன்றும் செய்ய இயலாது. நஷ்டத்தைக்குறைக்க எண்ணெய் கம்பனிகள் எடுக்கும் முடிவு'
என்கிறார். பிரதமரோ பிரான்சில் இருந்துகொண்டே 'இது தவிர்க்கமுடியாதது. டீசல்,  சமையல்எரிவாயு போன்றவைகளின் விலை
கட்டுப்பாட்டையும் சர்க்கார் கைவிட யோசிப்பதாகவும். மக்கள் இதை புரிந்து 
கொள்ளவேண்டும் என்றும் பிரதமர் முன் ஜாமீன் எடுத்திருக்கிறார்.

மேல் மட்டத்திலேயே புழங்கும் அமைச்சர்கள், பிரதமர் பார்வையில் நாடு 
சுபிட்சமாகத்தான் இருக்கிறது. குடியிருக்கும் வீடு ஏசி , பறக்கும் விமானம் ஏசி,
பயணிக்கும் கார் ஏசி, கிட்டும் சம்பளம் அப்படியே வங்கிக்கணக்கில், செலவுகள் 
மொத்தம் மக்களின் வரிப்பணத்தில். ஏன் பேசமாட்டார்கள் ?

நாட்டில் முக்கால் விழுக்காடு மக்கள் விலையேற்றத்தால் விழி பிதுங்கி 
வழியறியாது நிற்க வரிப்பணத்தில் சுக ஜீவிதம்  நடத்தும் மந்திரிகள், விலையேற்றத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டுமாம்-சொல்கிறார்கள்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்திய பெரும் முதலைகளின் கருப்புப்பணத்தை
வெளிக்கொணர்ந்தாலே போதும். பெரும்பாலான பிரச்சனைகளுக்கு
தீர்வு காணலாம். ஆனால் செய்ய மாட்டார்கள். காரணம் பண முதலைகளின் உதவி  காங்கிரஸ் அரசுக்குத்தேவை.

நமது பிரதமர் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. அவ்வப்போது
வெளிநாடு செல்வது. போய் வந்த விஷயங்களை பள்ளி சென்றுவந்த
குழந்தைகள் அன்று என்ன நடந்தது என்று அம்மாவிடம் சொல்லுமே,
அதே போல் சோனியாஜி இடம் சொல்வது, கிரிக்கெட்டில் அம்பயர்,
நாலு ரன் எடுத்தால் இடமும் வலமும் காட்டுவது போல் கையை ஆட்டுவது , சோனியாஜியின் முகம் கோணாமல் நடப்பது 
இவையெல்லாம் தான் இவர் வேலை.

மற்றபடி மக்களை பிழியும் விலைவாசி ஏற்றம் எல்லாம் பிரதமருக்கு ஒரு 
பொருட்டே அல்ல.

பழகச்சொல்கிறார். மிகச்சிறந்த பொருளாதார மேதை, மக்கள் விலையேற்றத்தை புரிந்து சகித்து கொள்ளச்சொல்கிறார்.

சகித்துக்கொள்ளத்தானே மக்கள்.

சுகித்து வாழத்தானே மந்திரிகள்.





மெல்ல தமிழன் இனி

மெல்ல தமிழன் இனி


பிரதமரின் பத்திரிகையாளர்களின் கூட்டம். எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மேடையில் காபினட் அமைச்சர்கள் எல்லோருமே ஆஜர். நிருபர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏதாவது பிரச்சனையா?
சிலபேர் தைரியமாக அமைச்சர்களிடம் கேட்டபோது 'பொறுமை பொறுமை
இதோ பிரதமர் வந்துவிடுவார்' என்றனர் .

பிரதமர் வந்ததும் நிருபர்களுக்குள் பரபரப்பு தோன்றியது. பிரதமர் முகத்திலிருந்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

'நண்பர்களே நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம்' பிரதமர்
உரையை துவங்கியதும் நிருபர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்தது.
'என்ன சார் ஏதாவது அந்நிய நாட்டு படைஎடுப்பா? அல்லது வேறு ஏதாவது'
நிருபர்கள் சாரமாரியாக கேள்விகள் கேட்கவும், பிரதமர் 'ச்சே ச்சே அதெல்லாம் ஒன்றுமில்லை. அப்படியே இருந்தாலும் நாம் சமாளித்து விடுவோம். இது மிகவும் முக்கியமான விஷயம். சொல்கிறேன்' என்றவர்
'நாங்கள் காபினட் அமைச்சர்கள் மூன்று நாட்களாக சரியாக
சாப்பிடவில்லை, தூங்கவில்லை. மிகவும் கவலையாக இருக்கிறோம்.
நம்ம சோனியாஜி வீட்டிலும் அவருடைய சித்தப்பாஜி வீட்டிலும் பைப்
லைன் உடைந்து தண்ணீர் வரவில்லை. நாங்கள் மூன்று நாட்கள்
எங்கிருந்தெல்லாமோ ஆட்களை வரவழைத்து சரி செய்ய முயன்றும்
ஒன்றும் நடக்கவில்லை. சோனியாஜி கடுங்கோபத்தில் இருக்கிறார்.'

நிருபர்கள் சிரித்தனர். பிரதமர் கோபத்துடன் 'இது சிரிக்க வேண்டிய விஷயமல்ல. எங்கள் நிலைமையில் நீங்கள் இருந்து பார்க்கவேண்டும்.
நாடு எவ்வளவு பெரிய பிரச்சனையில் இருக்கிறது என்று அப்போதுதான்
உங்களுக்கு புரியும்'.

நிருபர்கள் மீண்டும் பலமாகச்சிரிக்க பிரதமர் கடுங்கோபத்துடன் 'நிறுத்துங்கள் சிரிக்காதீர்கள். இதோ பார்த்தீர்களா என்று ஒரு பேப்பரை
தூக்கி காட்டி 'இது பைப் லைனை சரியாக்க முப்படைகளையும் அழைக்கும் ஆர்டர். ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.'

இப்போது நிருபர்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

சிரிப்பொலி அடங்க ரொம்ப நேரமாயிற்று. பிரதமர் தொடர்ந்தார். நண்பர்களே கேளுங்கள் நாங்கள் இப்படி ஒரு தீர்மானத்தில் இருக்கும்
போதுதான் நண்பர் ராஜபக்ஷேயிடமிருந்து ஒரு தகவல் வந்தது.'

இப்போது நிருபர்கள் அமைதியாகிவிட்டனர். நமது சோனியாஜியின் மனதை
குளிர்விக்கவும், இலங்கை தமிழர்களின் மறு வாழ்வுக்கும் சேர்த்து ஒரு
ஐடியா ராஜபக்ஷே கூறியிருக்கிறார். அதை விளக்குகிறேன்.

'இலங்கையிலிருந்து ஒரு மிகப்பெரிய பைப் லைன் சோனியாஜியின் வீடு வரை நிர்மாணிக்கப்படும். அந்த பைப் லைன் வழியாக இலங்கை தமிழர்களின் ரத்தம் பம்ப் பண்ணி, நவீன தொழில் நுட்ப உதவியுடன்
தண்ணீராக மாற்றி அவரின் வாட்டர் டாங்கில் சேமிக்கப்படும்.
ரத்தம் தங்கு தடையில்லாமல் கிடைக்க இலங்கை தமிழர்களுக்கு
சத்தான ஆகாரம் வழங்கப்படும். அவர்களுக்கு உடுக்க உடை  இருக்க
வசதியான வீடு இப்படி பல உதவிகள் இந்தியாவே செய்யும்.

ஒரே நேரத்தில் சோனியாஜியின் மனமும் குளிரும். நண்பர் ராஜபக்சேயின்
உறவும் பலப்படும். சோனியாஜி 'பழசை' நினைத்து அடிக்கடி ஆவேசம் 
கொள்வதும் குறையும்.

அது மட்டுமல்ல உங்கள் தமிழகத்தின் செம்மொழித்தலைவர் இதற்கு ஒப்புதலும் 
அளித்துள்ளார் . அவரே அவருடைய தொலைக்காட்சியில் இது பற்றிய 
அறிவிப்பும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். 'தமிழர்களே, தமிழர்களே என்னைத்தூக்கி கடலில் போடுங்கள். நான் பைப் லைனாக மாறி 
அன்னை சோனியா அவர்களின் வீட்டுக்கு இலங்கை தமிழர்களின் ரத்தத்தை 
கொண்டு செல்கிறேன். தமிழர்களின் மறுவாழ்வுக்கு நானும் என்னாலான 
சிறிய உதவியை செய்தேன் என்று நாளை சரித்திரம் சொல்லட்டும்' 

பிரதமர் தொடர்ந்தார் 'இதற்கு கைமாறாக ராஜபக்சேவுக்கு ஒரு சிறு உதவியை இந்தியா செய்ய வேண்டும். அது வேறு ஒன்றுமில்லை
தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க போகும்போது இலங்கை படையினர் தினமும் இரண்டே இரண்டு மீனவர்களை மட்டும் சுட்டு கொல்வார்கள். அதற்கான ஒத்துழைப்பை மட்டும் நாம் கொடுத்தால் போதும். மேலும் தமிழர்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு
எதுவும் தேவையில்லை. எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும்
பெற்றுக்கொள்ளலாம். ஒரு 'குறிப்பிட்ட' வயது வரை அரசாங்கமே
அவர்களது பராமரிப்பை ஏற்றுக்கொள்ளும்'

நிருபர்கள் விக்கித்து நிற்க  'சரி எல்லோரும் பசியாக இருப்பீர்கள். உங்களுக்காக 'இத்தலி, சட்னி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வயிறு
நிறைய சாப்பிடுங்கள். உங்களுக்கு தெரியுமா சோனியாஜி மிகவும்
விரும்புவது தமிழ்நாட்டின் இந்த 'இத்தலி' சட்னி தான். அந்த வகையில் 
தமிழர்கள் கொடுத்து  வைத்தவர்கள். 





திங்கள், 24 அக்டோபர், 2011

black & white

கருப்பு வெள்ளை

இம்மாதிரி பழைய படங்களில் ஒரு உயிரோட்டம் இருப்பதென்னவோ நிஜம். இப்போது பார்த்தாலும் அது உறைக்கிறது.

குறிப்பாக சிவாஜியின் படங்கள். எம்ஜியாரின் சில குறிப்பிட்ட படங்கள்.

என் தங்கை என்னும் படத்தில் எம்ஜியார் தங்கையின் உடலைத்தோளில்
சுமந்தபடி கடலை நோக்கிச்செல்லும் கடைசிக்காட்சி இருக்கிறதே....

பார்த்தால் பசி தீரும் படத்தில் லேசாக ஊனமான ஒருகாலால் சிவாஜி
நடந்து வரும் ஒவ்வொரு காட்சியும்....

இவைகள் சின்ன உதாரணம் மட்டும்.

பாலச்சந்தரின் அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை படங்களில்
படம் நெடுக ஒரு சோகம், பயம் பின் தொடர முக்கிய காரணமே
கருப்பு வெள்ளையின் ஒளிப்பதிவுதான்.

கருப்பு வெள்ளை ஒளிப்பதிவில் அன்றைய நாயகிகள் அழகாகவே
காட்சியளித்தார்கள்.

சில படங்களின் கதையின் ஆழம் கருப்பு வெள்ளை ஒளிப்பதிவில்
நன்றாகவே ஒளிர்ந்தது.

அது போல் அன்றைய நடிகர்களின் பண்பட்ட நடிப்பும் கருப்பு வெள்ளை
படங்களில் மிகச்சிறப்பாகவே இருந்தன.

மயாபசாரில் தந்திரக்காட்சிகள் சிறப்பாக அமைந்ததின் காரணமும்
க.வெ ஒளிப்பதிவுதான்

சின்னத்திரையில் வரும் இது போன்ற க.வெ படங்கள் இப்பவும்
ரசிக்கக்கூடிய ஒரு அனுபவம்.




வெள்ளி, 21 அக்டோபர், 2011

தப்பும் சரியும்

தப்பும் 'சரி'யும்

நான் செய்தால் தப்பில்லை
நீ செய்தால் சரியில்லை

அமெரிக்கா செய்தால் தப்பில்லை
மற்ற நாடுகள் செய்தால் சரியில்லை

கம்யுனிஸ்ட் செய்தால் தப்பில்லை
காங்கிரஸ் செய்தால் சரியில்லை

திமுக செய்தால் தப்பில்லை
அதிமுக செய்தால் சரியில்லை

மற்ற நாடுகள் செய்தால் தப்பில்லை
அமெரிக்கா செய்தால் சரியில்லை

காங்கிரஸ் செய்தால் தப்பில்லை
கம்யுனிஸ்ட் செய்தால்  சரியில்லை

அதிமுக செய்தால் தப்பில்லை 
திமுக செய்தால் சரியில்லை 

ஆண் செய்தால் தப்பில்லை 
பெண் செய்தால் சரியில்லை 

நீ செய்தால் தப்பில்லை 
நான் செய்தால் சரியில்லை 

பெண் செய்தால் தப்பில்லை 
ஆண் செய்தால் சரியில்லை 

ஆக மொத்தம்  total

எதுவும் தப்பில்லை 
எதுவும் சரியில்லை 


ஞாயிறு, 16 அக்டோபர், 2011

நப்பாசை

நப்பாசை


அரசியல் சொல்கிறது
தலைவனை, தலைவியை
பின்பற்று என்று 

ஆன்மிகம் சொல்கிறது 
ஆண்டவனை 
பின்பற்று என்று 

மனைவி ஆணையிடுகிறாள் 
என்னை மட்டுமே 
பற்று என்று 

தாய் கண்டிக்கிறாள் 
அவளை 
பற்றாதே என்று 

ஆசைகள் இழுக்கின்றன 
என்னையே பற்றி 
வாழ் என்று 

கம்பெனி சொல்கிறது 
என்னைப்பற்றாவிட்டால் 
உனக்கேது வாழ்வு என்று 

முதியோர் சொன்னது 
'பற்றுக பற்றற்றான் பற்றினை 
அப்பற்றினை பற்று விடற்கு' என்று 

'ஆசை அறுமின்கள் ஆசையறுமின்கள் 
ஈசனோடாயினும் 
ஆசையறுமின்கள்'

என்றோ சித்தர் சொன்னது 
இன்னமும் புத்தியில் 
ஏறவில்லை. 

சனி, 15 அக்டோபர், 2011

வானுயர 2

பொருளாதார நிபுணர், ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைமை அதிகாரி,
தற்போது நாட்டின் தலைமைப்  பொறுப்பில் இருப்பவர் என்று அழைக்கப்படும் மன்மோகன் சிங்.

முன்னாள் நிதியமைச்சர், தற்போது பாதுகாப்பு? அமைச்சர், பொருளாதார
நிபுணர் என்றும் அழைக்கப்படும் சிதம்பரம்.

தற்போதைய நிதி அமைச்சரும், பொருளாதார நிபுணருமான பிரணாப்
முகர்ஜி.

இந்த மும்மூர்த்திகளின் கண்காணிப்பிலும் நாட்டின் பொருளாதாரம்
ஏனோ தானோ என்றுதான் இருக்கிறது.

விலைவாசி உயர்வு, பங்கு சந்தைகளின் சரிவு, தெலுங்கானா மற்றும்
ஊழல் பிரச்சனைகள் எதுவும் மகிழ்ச்சியைத்தருவதாக இல்லை.

2 ஜி பிரச்சனை பற்றி கேட்டால் பிரதமர் 'எனக்கு சோனியா 'ஜி', ராகுல்'ஜி' -
இந்த '2 ஜி' க்களை மட்டும்தான் தெரியும் என்கிறார்'

மேற்கொண்டு ஏதாவது கேட்டால் 'எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. நான் 
வெளியூரு ' என்று நழுவி விடுகிறார்.

எங்கோ சொந்த ஊரில் மணியடித்து பூஜை நடத்திகொண்டிருந்த பாவம்
பிரணாப் முகர்ஜி எல்லாம் 'பராசக்தியின்' லீலை என்றபடியே உள்ளூரில்
நடக்கின்ற சம்பவத்துக்கு வெளிநாட்டில் போய் மீட்டிங்கில் இருக்கும்
பிரதமரிடம் விளக்கம் சொல்கிறார்.

நம்ம ஊரு சிதம்பரம் 'இனிமேல் சத்தமில்லாத. அதிகம் வீர்யமில்லாத, ஏதோ நகம் மட்டும் பேந்து போறாப்புல பட்டாசை வெடிக்கச்சொல்லி
தீவிரவாதிகளிடம் கேட்டுக்கொள்ளப்போவதாகக்  கேள்வி.

ஒரு படத்தில் கவுண்டமணி கள்ளக்காதலியை பார்க்க அவள் வீட்டுக்கு வருவார்.
திடீரென அவள் கணவன் வந்துவிட கவுண்டமணி பயந்து பரண் மேல் ஏறி 
ஒளிந்து கொள்வார். வந்த கணவனிடம் அவள் 'என்னங்க அரிசி இல்ல, பருப்பு இல்ல என்று ஒவ்வொரு குறையாக சொல்ல 
'எல்லாம் மேலே இருக்கறவன் பார்த்துப்பான்' என்று கணவன் சொல்ல 
கவுண்டமணி கடுப்படைந்து 'யோவ் எல்லாம் மேல இருக்கறவன் பார்த்துப்பான்,
பார்த்துப்பான்னா நீ எதுக்குயா அவளை கொஞ்சிக்கிட்டுருக்கே'!!!

நம் மும்மூர்த்திகளும் 'எல்லாம் மேலே இருக்கறவன் பார்த்துப்பான்'
என்னும் மன நிலையில்தான் இருக்கிறார்கள் போலிருக்கிறது.











Sneha Veedu

சிநேக வீடு

மோகன்லாலின் சமீபத்திய மலையாளப்படம்.
சத்யன் அந்திக்காடின் இயக்கம்.

ஒரு சிறு கதை போன்ற இந்தப்படத்தின் கதையை ஒருசில வரிகளில்
அடக்கி விடலாம்.

பாலக்காடு கிராமத்தில் விவசாயம் செய்து அம்மாவுடன் நிம்மதியாக
வாழும் முதிர் காளையாக ஊரை வலம் வரும் மோகன்லால்.

விவசாயப்பணிகள் முடிந்து நண்பர்களுடன்  தன் பழைய சென்னை
வாழ்க்கையில் பல பெண்கள் தன்னையே சுற்றி வந்த கதைகளை ' பீலா' 
விட்டுக்கொண்டும், அவர்களுக்கு மத்தியில் ஹீரோவாக தன்னை முன் 
நிறுத்தி பல கலை நிகழ்சிகளை நடத்தியும் நேரம் போக்கும் லால் இரவில் 
நேரம் கழித்துதான் வீடு திரும்புவார் .

அப்படி ஒரு முறை வீட்டிற்கு வரும்போது வீடு இருளடைந்து கிடக்கிறது.
வாசலில் ஒரு 15 வயது பையன் உட்கார்ந்திருக்கிறான் . ஒன்றும் புரியாமல் 
உள்ளே செல்லும்  மோகன்லால்  அம்மா கோபமாக உட்கார்ந்திருப்பதைக்கண்டு காரணம் கேட்க, வாசலில் உட்கார்ந்திருக்கும்
பையன் தன்னை அப்பா என்று குறிப்பிட்டான் என்பதைக்கேட்டு அதிர்ச்சி
அடைகிறார்.
கல்யாணம் ஆகாத தனக்கு எப்படி மகன் என்று குழம்ப, லாலின் 'பீலா'
கதைகளை கேட்டுப்பழகிய ஊரார் சந்தேகிக்கின்றனர் .

அம்மாவும் தன்னை சந்தேகிப்பதைக்கண்டு , வெகுண்ட மோகன்லால் அந்த 
பையனை ஊரை விட்டு அனுப்ப பல முயற்சிகளும் செய்கிறார் .
ஆனால் அம்மாவுக்கு அது பிடிக்காமல் அவனை பேரனாக ஏற்றுக்கொள்கிறார் .
தன் மீது இருக்கும் களங்கத்தை போக்க சென்னைக்கு , அந்தப்பையனின் 
வேர்களைத்தேடிச்
செல்கிறார் மோகன்லால்.

சென்னையில் பழைய நண்பரைக்கண்டு பிடித்து விஷயத்திச்சொல்ல,
நண்பரோ, தான்தான் பையனிடம் மோகன்லாலின் பழைய போட்டோவைக்கொடுத்து , இவர்தான் உன் அப்பா என்று சொல்லி அனுப்பியதாகவும் சொல்கிறார்.

இனி flash back


படப்பிடிப்புக்காக துணை நடிகைகளை சப்ளை செய்யும் நண்பர் தவறான
உறவால் தாய்மை அடையும் ஒரு துணை நடிகைக்கு அடைக்கலம்
கொடுக்கிறார். அவரின்  உதவியோடு மகனை பள்ளி இறுதி வரை
படிக்க வைக்கிறாள் துணை நடிகை. ஒரு முறை படப்பிடிப்பில்
விபத்துக்கு ஆளாகி நடிகை இறக்க, இதைக்கேள்விப்படும் பையன்
மனமுடைந்து தற்கொலைக்கு முயல்கிறான்

அதை தடுக்கும் நண்பர் ' நீ அநாதை இல்லை. உனக்கொரு அப்பா இருக்கிறார். நீ அவரிடம் போ. என்று சொல்லி மோகன்லாலின் போட்டோவையும்  விலாசத்தையும் கொடுத்து விடுகிறார்

திகைக்கும் மோகன்லால் 'என் போட்டோவை கொடுத்து அவனை அனுப்பி
ஏன் என் நிம்மதியை கெடுத்தீர்கள் என்று கேட்க ' அவன் சின்னப்பையன்
தற்கொலை செய்யத்துணிந்த அவனுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்க
இதைத்தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை என்கிறார் நண்பர் .

சரி ஊருக்கு வந்து என் அம்மாவிடம் உண்மையை கூறுங்கள் என்று
அவரை அம்மாவிடம் அழைத்து வருகிறார் லால் .

இங்கு வந்தால் பையனைக்காணவில்லை. அம்மாவிடம் கேட்டபோது '
உனக்கு அவனை பிடிக்கவில்லை என்று மனம் நொந்து கிளம்பி  விட்டான்
என்கிறாள்.

நண்பருடன் ஸ்டேஷனுக்கு வந்து பார்க்கும் லால் பையன் தனியாக 
உட்கார்ந்திருப்பதைக்கண்டு சட்டென்று தோன்றும் ஒரு உணர்ச்சிப்பெருக்கோடு 
பையனை கட்டி அணைத்து 'நீ நீ என் மகன்தான்' என்று விதும்பலோடு
கூறுகிறார். இருவர் கண்களும் கலங்குகின்றன.

சாதாரண  கதை. தெளிவான இயக்கம்.

இசை இளையராஜா. பாடல்கள் எல்லாமே முத்து.

சிம்பிளான நிறைவான படம்.









  


வெள்ளி, 14 அக்டோபர், 2011

Rape-O

இப்படித்தான் அழைக்கத் தோன்றுகிறது இதை.

பண வீக்கம் கூடும்போது ரிசர்வ் வங்கி மேலாளர்களில் சிலர் சொட்டைத்
தலை பளீரிட முகமெல்லாம் பல்லாக, வட்டி விகித்தத்தை கால் சதவீதம்
கூட்டிவிட்டு காலாற நடந்து, ஏசி காரில் ஏறி போயே விடுவார்கள்.

Repoரிவர்ஸ் repo என்று கூறப் படும் வங்கிகளின்- பணப் பரிமாற்றங்களின் 
வட்டி விகிதக்கூடுதல், வீட்டுக் கடன், வாகனக் கடன், கோமணக் கடன் என்று
வாங்கிய  சாதாரண மக்களின் தலையில் தான் விழுகிறது.

கேட்டால் மற்ற வங்கிகள் சொல்வது 'ரிசர்வ் வங்கி எங்களை ரேப்பினால்
நாங்கள் வாடிக்கையாளர்கள் மீது தான் ரேப்ப முடியும்'. என்று.

சமீபத்தில் ஒரு தனியார் வங்கி வாடிக்கையாளர் முணு முணுத்துக் கொண்டே சொன்னது ' என்ர பணத்த என்ர காலால நடந்து வந்து என்ர
கணக்குல கட்டறதுக்கு சார்ஜ் கொடுக்கணுமாம்'.

மேலாளரிடம் கேட்டபோது ' இதுவும் அந்த 'ரேப்போ' வட்டி விகித கணக்கு
தான் சார். ஒரு மாதத்தில் 5 தடவை மட்டும் தான் சொந்த சேமிப்பு
கணக்கில் பணம் கட்ட அனுமதி. அதற்கு மேல் கட்ட வேண்டும் என்றால்
தனி சார்ஜ் கொடுக்க வேண்டும். ரிசர்வ் வங்கி இப்படி வட்டி விகிதத்தை 
கூட்டி கொண்டே சென்றால் நாங்கள் எங்கு போவது? சமாளிக்க வேண்டாமா ?
கூடிய விரைவில் எல்லா வங்கிகளும் எங்கள் வழியை பின்பற்றும்,
பாருங்கள்' என்றார்.

அதென்னவோ எல்லா வியாழக்கிழமையும் இந்த மாதிரி கால் சதவீதம்
பயமுறுத்தல்   தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.






ஞாயிறு, 9 அக்டோபர், 2011

தெளிவு

தெளிவு


எந்த ஒரு புரிதலும்
நம்மை அடைய
எடுத்துக்கொள்ளும் நேரம்
முழுமையானது

நமக்கான நேரம் கட்டமைக்கப்படின்
அதுவே துல்லிய தியான கட்டம்

எனினும்-
விடுபட்ட சிறகடி பதற்றங்கள்
மீண்டும் மீண்டும்
அலைக்கழிக்க முடிவில்
புரிதலே இல்லை.

யோகம்

யோகம்

அடிமேல் அடிவாங்கி
நம்பிக்கையின்மையின் விளிம்பில்
வீழ்ந்தாலும் 
சின்ன முனகலாய்
'காப்பாற்று' என்று
பிரார்த்தித்து தொலைக்க
வேண்டியிருக்கிறது.

சனி, 8 அக்டோபர், 2011

Indian Rupee 2

'தொடரும்' என்று போட்டதால் படத்தின் சஸ்பென்ஸ் அவிழ்க்கப்படும் என்று நினைக்கவேண்டாம். வழக்கம்போல் வெள்ளித்திரையில் காண்க.
 நான் சொல்ல வந்தது வேறு.

படம் முழுவதும் ப்ரித்விராஜ் கதா பாத்திரத்திற்குத்தகுந்தாற்போல் வேட்டி,
சட்டையுடன் உலா வருகிறார். கோழிக்கோட்டின் நகர ஆளுமைக்கு  ஏற்ப
அவர் பேசும் வசனங்களில், ஹலாக், ஹமுக்கே போன்ற முஸ்லிம் மக்கள்
அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தைகள் இடம் பெறுகின்றன  அவரை ஹிந்து
குடும்ப பின்னணியில் காண்பித்தாலும், இது ஒரு இயல்பான காட்சியாக 
காண்பிக்கப்படுகிறது. 

கோழிக்கோடு முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதி . பெரும்பாலோர் NRI 
என்று அழைக்கப்படும் வெளி நாடு வாழ் மக்கள்.

நோட்டு இரட்டிப்பு என்று அழைக்கப்படும் கள்ள நோட்டு பரிமாற்றத்தை 
ப்ரித்வியின் வளைகுடா வாழ் நண்பன் 'தப்பித்தால் தப்பில்லை ' எனும் ரீதியில் 
நியாயப்படுத்துகிறான். 'ஒரே ஒரு முறை செய்தால் போதும் பின்னர் உனக்கு 
யோகம்தான்' இந்த கோழிக்கோடு நகரத்தில் எத்தனையோ பேர் இதைச்செய்கிறார்கள்.
உனக்கென்ன பயம்' என்று உசுப்பேற்றி விடுகிறான்.

அந்த ஒரு க்ஷணத்தில் மனப்பிறழ்வுக்கு உட்படும் ப்ரித்வி துணிந்துவிடுகிறார்.
கள்ளநோட்டை வாங்குவதற்காக ப்ரித்வி செல்லும் இடம் ஒரு கல்யாண வீடு. வீட்டின் மேல் தளத்தில் ஒரு கும்பலே கள்ளநோட்டை 
கட்டுக்கட்டாக எண்ணி அடுக்கி வைத்துக்கொண்டிருக்கிறது. அந்த வீட்டில் கல்யாணம் 
இரவு நேரத்தில் நடப்பதாக காட்டப்படுகிறது.

இந்தியாவின் பொருளாதாரத்தையே சீர் குலைக்கும் இந்த மாபியா கும்பல் 
இங்கேயே இயங்கிக்கொடிருப்பதை இயக்குனர் பட்டவர்த்தனமாக 
வெளிக்காட்டுகிறார். காட்சியின் இயல்பு அந்த அளவுக்கு நம்பகத்தன்மை
கொண்டிருக்கிறது.

படத்தில் மசாலாவின் நெடி துளி  கூட இல்லை. இரண்டு பாடல்கள்.
அதுவும் போகிற போக்கில். திலகனுக்கென்று ஒரு கிளைக்கதை போகிறது.
அவரின் கதாபாத்திரத்தின் வலிமைக்காக. உறுத்தாத காமிரா.

இந்தப்படத்தை சுறா, வெடி, தல, வால் இவர்களை வைத்து தமிழில்  எடுத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்த்தேன். ....'சுத்தம்'.

.



Indian Rupee

இது மிகச்சமீபத்தில் கேரளாவில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் மலையாளப்படம். ப்ரித்விராஜ், திலகன் போன்றோர் நடித்திருக்கிறார்கள்.
இயக்கம்- ரஞ்சித். இவர்தான் முதன்முதலாக ப்ரித்விராஜை அறிமுகப்படுத்தி
'நந்தனம்' என்ற வெற்றிப்படத்தைக்கொடுத்தவர் .

இந்தியன் ருப்பீ மிக, மிக, மிக சாதாரணப்படம். ப்ரித்விராஜ்ஜும். நண்பரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் நடத்துகிறார்கள் . கோழிக்கோடு நகரத்தில் ஒரு பழைய கட்டிடத்தின் மூலையில் சிறிய அறைதான் அலுவலகம். ப்ரித்விராஜுக்கு வீட்டில் அம்மா, திருமண வயதில் ஒரு தங்கை. தங்களின் மேல்கை புரோக்கர்களின் கீழ் அவ்வப்போது தகவல் கொடுத்து சிறிய கமிஷன் வாங்கி பிழைப்பை ஓட்டுகிறார்கள் பிரித்வியும், நண்பனும்.

என்றாவது ஒரு நாள் ரியல் எஸ்டேட்  பிசினசில் பெரிய ஆளாக வேண்டும் என்ற கனவோடு காலம் தள்ளுகிறார்கள்.

தன் காதலியின் நண்பியான ஒரு  பணக்கார பெண்மணி, தனது  கடல் போன்ற
எஸ்டேட் ஐ  விற்க விரும்புகிறார் என்று கேள்விப்பட்டு அவரிடமிருந்து விற்பனை அதிகாரத்தை கையெழுத்திட்டு வாங்குகிறார் ப்ரித்வி. வேறு புரோக்கர்கள் தலையிடாமல் இருக்க இந்த ஏற்பாடு.  திலகன் தன் வீட்டை விற்றுத்தரும்படி ப்ரித்வியை சமீபிக்க, மேல்கை   புரோக்கர்களிடமிருந்து
அட்வான்ஸ் வாங்கி திலகனிடம் கொடுக்கிறார் ப்ரித்வி. விஷயம் கேள்விப்பட்டு வெளிநாட்டிலிருந்து வரும் திலகனின் மகன், அதை தடுத்து நிறுத்தி
'வீடு என் பேரில் இருக்கிறது. அதை விற்க திலகனுக்கு  உரிமை இல்லை' என்று கூறி, தகப்பனையும் வீட்டை விட்டு துரத்தி விடுகிறான். ஏற்கனவே
மனைவியை இழந்தவர் திலகன். வில்லங்கமான இந்த ஏற்பாட்டினால்
மேல் கை புரோக்கர்களின் கேலிக்கு ஆளாகிறார் ப்ரித்வி.

சுற்றித்திரியும் திலகன் ஒரு முறை ப்ரித்வியைப்பார்க்க அவர் வீட்டிற்கு வருகிறார். அவரை வரவேற்கும் ப்ரித்வியின் தங்கை களைப்படைந்திருக்கும் அவரின் பசிக்கு உணவளிக்கிறாள். அன்றுதான் அவளைப்பெண் பார்க்க வருகிறார்கள். பொறுப்புடன் நடக்க வேண்டிய ப்ரித்வி பணமில்லாத காரணத்தால் மாப்பிள்ளை வீட்டாரை நேரிட பயந்து
மொபைலையும் சுவிட்ச் ஆப் பண்ணி நகரத்தில் சுற்றி நடக்கிறார்.
வரும் மாப்பிள்ளை வீட்டாரிடம் திலகன்  சாதுர்யமாகப்பேசி சீதனம் வாங்க வேண்டும் என்ற அவர்களின் மன நிலையை மாற்றி எடுக்கிறார். ' பசியுடன் வரும் மனிதனுக்கு அவன் கேளாமலே குறிப்பறிந்து உணவளிக்கும் இந்தப்பெண், உனக்கு மனைவியாக வர நீ மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும், என்று திலகன் இருவரையும் வாழ்த்துகிறார் .

விஷயத்தைக்கேள்விப்படும் ப்ரித்வி நெகிழ்ந்து, திலகனை தன் அலுவகத்திலேயே தங்க வைக்கிறார். இதற்கிடையில் 
விற்பனை அதிகாரத்தை கொடுத்த எஸ்டேட் பெண்மணி அந்த இடத்தை 
வேறு யாருக்கோ விற்றுவிட்டார் என்று கேள்விப்படும் ப்ரித்வி செய்வதறியாது திகைக்க 
திலகன் கொடுக்கும் 'தில்லாலங்கடி ' யோசனையால் அந்த எஸ்டேட் பெண்மணியிடமிருந்து 25 லட்சம் நஷ்ட ஈடு வாங்கிவிடுகிறார் .

முதன் முதலாக வாழ்க்கையில் அவ்வளவு பணத்தைப்பார்த்த ப்ரித்வி திலகனிடம் 
பெரு மதிப்புக்கொள்கிறார். இருந்தும் ஒரு குற்ற உணர்ச்சி. காதலியின் நண்பியை ஏமாற்றி விட்டோமே என்று. ஆறுதல் கூறும் திலகன் 
'நாணம் கெட்டு பணம் உண்டாக்கினால் - உண்டாகும் நாணக்கேட்டை அந்தப்பணமே தீர்த்து விடும்' என்று ஒரு  பழமொழியும் உதிர்க்கிறார் .

இப்போது 25 லட்சம் கையில். மேல்கை புரோக்கர்களின் உதவி இல்லாமல் 
சொந்தமாக தொழில் நடத்த தீர்மானிக்கிறார் ப்ரித்வி .

நகரத்தில் பெரிய புள்ளியான' பாப்பச்சன்' என்பவர் தனது வியாபார கட்டிடத்தை விற்க இருக்கிறார் என்று கேள்விப்படும் ப்ரித்வி விலை கேட்க அவர் ஒண்ணேகால் கோடி என்கிறார்.
விஷயம் 'லீக்காக' மேல்கை புரோக்கர்கள் ஒரு பார்ட்டியை கொண்டு வருகிறார்கள். அவர்களிட கறாராக பேசும் பாப்பச்சன் இன்றே, இப்போதே அட்வான்சாக 25 லட்சம் கேட்கிறார். அன்று sunday என்பதால் அடுத்த நாள்
அட்வான்ஸ் தருவதாக வந்த பார்ட்டி சொல்ல, பாப்பச்சன் பிடிவாதமாக இருக்கிறார். தலையிடும் ப்ரித்வி 25 லட்சத்தை தான் ஏற்பாடு செய்வதாக கூறுகிறார். இதை விரும்பாத மேல்கை புரோக்கர்கள் வந்த பார்ட்டியின்  மனதை கலைத்துவிடுகிறார்கள்.

எனினும் கையிலிருக்கும் 25 லட்சத்தை அட்வான்சாக ப்ரித்வி பாப்பச்சனிடம் கொடுக்கிறார். நானே குறிப்பிட்ட நாளுக்குள் வேறு ஒரு பார்ட்டியை ஏற்பாடு செய்து, டீலிங்கை முடிப்பதாக வாக்கு கொடுக்கிறார்.
குறிப்பிட்ட நாட்களுக்குள் இதை முடிக்காவிட்டால் நீ தந்த அட்வான்ஸ்' ஸ்வாஹா '
பாப்பச்சன்.

அப்படி  இப்படி என்று 50 லட்சத்தை ஏற்பாடு  செய்துவிடும் ப்ரித்வி மீதி  50
லட்சத்திற்கு என்ன செய்வது என்று திணறும் நேரத்தில் ஒரு வளைகுடா வாழ் நண்பனிடம் உதவி கேட்கிறான். தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லும் நண்பன் வேறு ஒரு யோசனை சொல்கிறான். 'உன்னிடம் இருக்கும் 50 லட்சத்தை நான் சொல்லும் நம்பிக்கையான ஆளிடம் கொடு. அவன் இரட்டிப்பாக ஒரு கோடி தருவான்' என்கிறான் . 

திகைக்கும் ப்ரித்வி 'கள்ள நோட்டா' என்று மிரள்கிறார். 'கவலைப்படாதே அனைத்தும் வெளி நாட்டில் அச்சடிக்கப்படுபவை. யாராலும் கண்டு பிடிக்க முடியாது' என்கிறான்.

அறைக்கு வரும் ப்ரித்வி இந்த  யோசனையை கூட இருப்பவர்களிடம் சொல்ல 'அவர்கள் தடுக்கிறார்கள்'
வேண்டாம் இந்த விஷப்பரீட்சை என்று எச்சரிக்கிறார்கள். 'நான் ரிஸ்க் எடுக்க தயாராகிவிட்டேன். எனக்கு பணக்காரனாக வேண்டும் என்று உறுதியாக கூறுகிறார்.

சொன்னபடி ஒரு கோடியை சாக்கில் கட்டி பாப்பச்சனிடம் சேர்க்கும் ப்ரித்வி 
எண்ணி கொள்ளும்படி சொல்லிவிட்டு பத்திரத்தையும் வாங்கி வந்து விடுகிறார். கொஞ்ச நேரத்தில் பாப்பச்சனிடம் இருந்து போன் வருகிறது.
தந்த பணத்தில் ஒரே ஒரு ஆயிரம் குறைகிறது என்று.
அவ்வளவுதானே அதை நான் தந்துவிடுகிறேன் என்று சொல்லும் ப்ரித்வி
நிம்மதி பெரு மூச்சு விடுகிறார்.

காணாமல் போன அந்த ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு போலீசிடம் சிக்குகிறது.

ப்ரித்வி சிக்கினாரா? மீண்டாரா என்பது க்ளைமாக்ஸ்.

தொடரும்
,  

வியாழன், 6 அக்டோபர், 2011

வானுயர

விண்ணைத்தொடும் விலைவாசியைபபற்றி மத்திய அரசுக்கு எந்தக்கவலையும் இல்லை. எண்ணெய் கம்பெனிகளை கொழுக்கவைக்க வேண்டும் என்பது மட்டும் தான் அரசின் திட்டம் போலும்.

நடுத்தர வர்க்கத்தின் முதுகெலும்பை விட்டேனா பார் என்பது போன்ற செயல்கள்தான்  இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. அரசு பணியாளர்களுக்கு கவலை இல்லை. அவர்களுக்கு அரசு, அகவிலைப்படி, பஞ்சப்படி, மஞ்சப்பொடி, என்று  ஏதாவது கொடுத்து அமுக்கி விடுவார்கள்.

அவர்களும் 'விலை ஏறினால் எங்களுக்கு  கவலை இல்லைப்பா. கவர்ன்மென்ட் எங்களுக்கு 'மஞ்சப்பொடி' கொடுக்கும் என்ற ரீதியில் சமாதானமாகி விடுவார்கள். மேல் தட்டு மக்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். அரசே அவர்கள் கையில்.

அமைச்சர்களுக்கும், எம்பிக்களுக்கும் எம் எல் ஏக்களுக்கும் அனைத்துமே
இலவசமாகக்கிடைத்து விடுகின்றன. எனவே கவலை இல்லை.

போதாக்குறைக்கு அவர்களே மீட்டிங் போட்டு சம்பளத்தை கூட்டிக்கொள்வார்கள்.

மற்ற துறைகளில் உள்ள மக்களின் கதி? அதோ கதிதான்.

ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும்.



செவ்வாய், 4 அக்டோபர், 2011

CHENNAI A FLASH BACK 4

சென்னை பெரம்பூரில் குடியிருந்தபோது அதைச்சுற்றியுள்ள பகுதிகள் புரசை போன்றவை பழக்கமானது. அதற்குமுன்பு கிட்டத்திட்ட எட்டு வருடங்கள் நாங்கள் குடியிருந்தது ஆவடியில்.

ஆவடி. ஏற்கனவே நான் குறிப்பிட்டிருந்தபடி அது ஒரு குட்டி கேரளா. அங்கு இருந்த ஒரே ஒரு தியேட்டர் ராமரத்னா. அது எங்களுக்கு ரொம்பவும் தோஸ்த். வடக்கே வேலை பார்த்த என் தமையனார் ஆவடிக்கு மாற்றல் வாங்கி வந்ததும்,என் பள்ளிப்பருவம் அங்கு கழிந்ததும் நேற்று போல் இருக்கிறது. நான் மிகச்சிறு வயதிலேயே தந்தையை இழந்தவன். தமையனாரின் அரவணைப்பில்தான் வளர்ந்தேன்.

அன்று ராமரத்தினாவில் வாரம் ஒரு படம் மாற்றுவார்கள். ஒரு ஆர்டிஸ்ட்.
ஏகேபி சாமி என்று பெயர். அவர்தான் படம் பேரையெல்லாம் பெரிதாக பானரில் எழுதி கீழே ஏகேபி  சாமி என்று கையெழுத்திடுவார்.

நாளை வெள்ளி என்றால் இன்று மாலை அந்த பானர் தட்டியை கீழே இறக்கி படத்தின் பெயரை அழகாக எழுதிக்கொண்டிருப்பார். நாங்கள் சிறுவர்கள் சிலபேர் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம்.

சில  படங்களுக்கு போக வேண்டும் என்றால் 'இன்றே கடைசி ' அன்று பார்க்கலாம் என்பார்கள் வீட்டில். காரணம் வியாழக்கிழமை அன்று 'இன்றே கடைசி' என்று போடுவார்கள்.

தமையனார் வடக்கே வேலை பார்த்தவர் என்பதால் ஹிந்தி அவருக்கு நன்றாகத்தெரியும். எனவே ராமரத்னாவில் ஹிந்திப்படம் வந்தால் என்னையும் அழைத்துச்செல்வார் . அப்படிப்பார்த்த படங்கள்தான் ஆயி  மிலன் கி பேலா,சூரஜ், பத்தற்கி சனம், அந்தாஸ் ஆராதனா போன்ற பல படங்கள்.

ஆவடியில் ஹிந்திக்காரர்களும். மலையாளிகளும் அதிகம் என்பதால்
ஹிந்தி ,மலையாளப்படங்கள் அங்கு அடிக்கடி வரும்.

மலையாளப்படங்கள் வந்தால் வெள்ளி, சனி ஞாயிறு மட்டும் என்று போடுவார்கள் . கூட்டம் அலை மோதும். நாங்கள் குடியிருந்த பகுதியில் மலையாளிகள் அதிகம் வசித்தார்கள். அவர்களில் பலபேர் தமையனாருடன் வேலை பார்ப்பவர்கள். பிறகென்ன மலையாளப்படங்களுக்கும் கூட்டிச்செல்வார்கள்.

திரையில் படம் ஆரம்பித்து ஒவ்வொரு கதாபாத்திரங்கள் பேசத்தொடங்கும்போதே பார்வையாளர்கள் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். என்ன எழவுக்கு இவர்கள் சிரிக்கிறார்கள் என்றே புரியாது.
அது மட்டுமல்ல படமும் படு ஸ்லோவாக நகருமா? செம கடுப்பாக இருக்கும் எனக்கு.

நான் மிகவும் கிண்டலடிப்பேன். அவர்கள் சிரித்துக்கொண்டே என் கன்னத்தில் தட்டிச்செல்வார்கள்.

அன்று கேரள மக்களுக்கு சென்னை ஒரு வளைகுடா நாடு அல்லது அமெரிக்கா மாதிரி. மலையாளப்படங்களில் கூட 
தந்தை பாத்திரங்களில் நடிப்பவர்கள் 'அவன்  அங்கு  மதிராசிலா ' என்று பெருமையாகச்சொல்வார்கள் 

கதா பாத்திரங்கள் பெரும்பாலும் சென்னையில் வேலை பார்த்து ஊருக்கு பணம் அனுப்புவது போல் காட்சியமைப்பு இருக்கும்.  

குடியிருந்த கோவில், எங்க மாமா, தில்லானா மோகனாம்பாள், அடிமைப்பெண், சொர்க்கம் அன்னை வேளாங்கண்ணி, நான், பட்டணத்தில் பூதம், இன்னும் பல கருப்பு வெள்ளைப்படங்கள் ராமரத்னாவில் பார்த்தவை.
பக்திப்படங்களான சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, போன்ற படங்களும்
அங்கு பார்த்தவைதான்.

பட்டணத்தில் பூதம் படத்தில் கே.ஆர் விஜயா நீச்சல் உடையில் வருகிறார்
என்பதற்காக முதலில் வீட்டில் சம்மதிக்கவில்லை. பிறகு பல பேர் அது குழந்தைகளுக்கான மாஜிக் படம்  என்று யாரோ சொன்னதன் பேரில் அழைத்துச்சென்றார்கள்.

அதில் சீ பூம்பா என்னும் பூதம் தினசரியில் படம் பார்த்துக்கொண்டிருக்கும்.
பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடல் காட்சி அந்த பேப்பரில் ஓடிக்கொண்டிருக்கும். அடுத்த பக்கத்தில் எங்க வீட்டுப்பிள்ளை விளம்பரம்.
அதிலும் சீ பூம்பா என்று விரலைச்சுழட்டி நான் ஆணையிட்டால் என்ற
பாடலை காண்பிக்கும்.

அன்று ஆச்சரியப்பட வைத்த அந்தக்காட்சி இன்று சீ பூம்பா என்று விரலைச்சுழட்டினால் யு டியுபில் தெரிகிறது. அதே பாட்டு, அதே காட்சி.

இன்று ராமரத்னா இருக்கிறதா என்று  தெரியவில்லை.


CHENNAI A FLASH BACK 3

சென்னையின் 70 காலகட்டங்களில் சாலைகளில் சிவப்பு நிற பேருந்துகள்தான். கொளுத்தும் வெயிலில் அவை ஊர்ந்து செல்லும் அழகே தனி. கட்டணங்களும் 5 காசு 10 காசு என்றெல்லாம் இருக்கும். 1 காசுக்கு மிட்டாய் எல்லாம் கிடைக்கும். ஏசி இல்லாத தியேட்டர்களில் குறைந்த கட்டணமே 40 காசுகள்தான். அடுத்து 80 பைசா, 1.25, 1.60, பால்கனி 2/-.

சென்னையில் அன்று புதிய படங்கள் ரிலீசாவது குறைவான தியேட்டர்களில்தான்.
சிவாஜி  படமென்றால் சாந்தி, கிரௌன், புவநேஸ்வரியில்தான். மற்ற தியேட்டர்களில்
பழைய படங்கள்தான் ஓடும். புரசையைச்சுற்றி மேகலா, சரவணா, பாலாஜி,
மகாலட்சுமி ,சரஸ்வதி போன்ற தியேட்டர்கள் இருந்தன. இப்போது உண்டா என்று 
தெரியவில்லை.

ஒரு முறை பாலாஜியில் பாலும் பழமும் பார்த்துக்கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம் இப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கும்.
திரையில் சிவாஜியின் இரண்டாவது மனைவியாக வரும்  சௌகார் ஜானகி,
தன் கணவன்  தன்னை அலட்சியப்படுத்துகிறானே என்ற வேதனையில் அழுதுகொண்டே ஆவேசமாக வசனங்களை உணர்ச்சிகரமாகப்பேசிக்கொண்டிருப்பார். எனது முன்னிருக்கையில் இருந்த
ஒரு பையன் ' இந்தம்மா பார்ரா சாமான் போடலேன்னு அயுவுது'.

அரங்கமே அதிர்ந்தது. அந்தக்காட்சியமைப்பை அவன் புரிந்து வெளிப்படுத்தியதை எல்லோருமே ரசித்தார்கள்.

சில நேரங்களில் இந்தமாதிரி 'ஆடியன்ஸ் கமெண்ட்ஸ். சூழ்நிலையை உற்சாகமாக்கிவிடும்

புறநகர் பகுதிகளில் அன்று ஒரே  காட்சியில் இரண்டு திரைப்படங்கள் என்றெல்லாம் திரையிட்டார்கள். ஒன்று எம்ஜிஆர் அல்லது சிவாஜியின் பழைய கருப்பு வெள்ளைப்படம். மற்றது அன்றைய சமீபத்திய முத்துராமன், ஜெய்சங்கர் போன்றோரின் புதிய படம். எம்ஜியார், சிவாஜியின் பழைய படங்களே மூன்று மணி நேரத்துக்குமேல் ஓடும். பின்னர் இரண்டரை மணி நேரத்துக்கு மேல் ஓடும் இந்தப்படம் வேறு. இருந்தும் மக்கள் சலிப்பில்லாமல் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். பிறகு மக்களின் உடல் நலம் கருதி அரசு அதை தடை செய்தது என்று நினைக்கிறேன்.

இனி அடுத்த பதிவில்...

என் ப்ளாக் விலாசம் http://subramanian-thamirabharani.blogspot.com/




திங்கள், 3 அக்டோபர், 2011

CHENNAI A FLASH BACK 2

சீட்டுக்கு நம்பர் போட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர வைப்பதும் புதிது.
பெரிய வெள்ளித்திரை 70 mm. என்றார்கள். படம் துவங்கியதுமே ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. எதிர்பார்ப்பு ஏமாற்றமளிக்கவில்லை.

ஒப்பனிங்கே அட்டகாசம். அருமையான சவுண்ட் சிஸ்டம். குறிப்பாக எம்ஜியாரின் சண்டைக்காட்சிகள். ஒரு காட்சியில் பத்மினியின் குடிசையிலிருந்து பாத்திரங்களை ராமதாஸ் மற்றும் அவரின் கையாட்கள்
வீசியெறிந்து கொண்டிருப்பார்கள். அப்போது ஒரு கை 'டிஷும்' என்று
ராமதாசின் முதுகில் வெட்டும். அந்த 'டிஷும்' சத்தம் எல்லோரையும் தூக்கிவாரிபோட்டது. அன்று dts sound system இல்லாத நேரம்.  இருப்பினும் சரியான நேரத்தில் side box opening பிரமாதமாக இருந்தது.

குறிப்பாக climax இல் எம்ஜியாரின் சுருள் கத்தி வீச்சு. கியூங் கியூங் என்று தியேட்டர் முழுவதும் அலையடித்து மக்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியது.

படம் முடிந்து ஒவ்வொருவரும் தியேட்டரை பற்றித்தான் அதிகமாகப் பேசினார்கள். அதுபோல் கழிப்பறை. அவ்வளவு சுத்தம். நீட்டாக இருந்தது.
உலகம் சுற்றும் வாலிபன் படமும் தேவி பாரடைசில்தான் ரிலீசானது.
ஒரு நாள் காலை நேரம். பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தபோது 6.30 மணி இருக்கும். ஒரு நீண்ட வரிசை தேவி தியேட்டரிலிருந்து ஆரம்பித்து
சாந்தி தியேட்டரையும் தாண்டி அண்ணா ரவுண்டானாவையும் சுற்றி
கிழக்கு பக்கமாக பாரகன் தியேட்டர் வரை நீண்டிருந்தது.

ஆங்கிலப்படங்களுக்கு நான் செல்ல ஆரம்பித்தது meccanna's  gold படம் பார்த்த
பிறகுதான். அதன் ஆரம்பமே அட்டகாசமாக இருக்கும். அதிலும் கிரிகிரி பெக்கும் ஒரு வயதானவனும் போடும் துப்பாக்கி சண்டை. தியேட்டர் பூராவும் கியூங் கியூங் என்று சுழலும் துப்பாக்கியின் சத்தம்- சான்சே இல்லை. இன்று வரை அப்படி ஒரு அனுபவத்தை எந்தப்படமும் தந்ததில்லை

இத்தனை வருடங்கள் ஆகியும் அன்றைய ஆங்கிலப்படங்களின் தரத்தைக்கூட இன்றைய தமிழ் படங்களால் எட்டமுடியவில்லையே என்று
வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

பேப்பர் புரட்டும் சத்தம் கூட ஆங்கிலப்படங்களில் அன்று மிகத்துல்லியமாக பதிவு செய்திருப்பார்கள். இன்றோ ஏகப்பட்ட முன்னேற்றங்கள் இருந்தும் சொதப்பலாக. மொக்கையாகத்தான் இருக்கிறது. சமீபத்திய எந்திரனும் கூட அப்படித்தான்.

தேவி குழுமத்தில் எனக்கு பிடித்தது தேவி பாலாதான். நேரே படி இறங்கி கீழே சென்றால் வெகு கச்சிதமாக ஒரு தியேட்டர். முன்னாள் இருப்பவர்களின் தலை மறைக்காதபடி சீட்டுகளின் அமைப்பு. நல்ல குளிரூட்டம். அங்கு அதிகமாக திரையிடப்பட்டது ஹிந்திப்படங்கள்தான்.
அமிதாப் பச்சன், தர்மேந்திரா போன்ற நடிகர்களின் படங்கள்தான் பெரும்பாலும். பாடல் காட்சிகள் கூடுதலும் காஷ்மீரில் படமாக்கி யிருப்பார்கள். அதன் குளுமையும். தியேட்டரின் ஏசியும் சேர்ந்து ஒரு தனி சுகத்தை கொடுக்கும். பாடல்களும் நன்றாக இருந்த காலகட்டம் அது.

அப்படி ஹிந்தி பாடல்கள் கோலோச்சியிருந்த தமிழகத்தின் மயக்கத்தை சுனாமி போல் வந்த இளையராஜா புரட்டிப்போட்டது வேறு கதை.

காசினோ. ஆங்கிலப்படங்களுக்கேன்றே உள்ள ஒரு தியேட்டர் அது. ஹாலிவுட் நடிகர், நடிகைகளின் போட்டோக்கள் சுவரில் மாட்டி வைத்திருப்பார்கள் அங்கு நான் பார்த்த படங்கள் ten commandment, My name is nobody, client eastwood இன் பல படங்கள்,
Terence Hill அன்று பலராலும் விரும்பப்பட்ட ஒரு ஹீரோ.

DJANGO ஒரு செமித்தியான படம். அதிலும் climax ரொம்ப ஜோராக இருக்கும்

நம்ம ரேஞ்சுக்கு கபாலி காமதேனு மற்றும் புறநகர் தியேட்டர்கள் தான் லாயக்கு என்று தாழ்வு மனப்பான்மையுடன் இருந்த ஒரு காலகட்டத்தில்
தேவி வந்தவுடன் அதுவும் ஆங்கிலப்படங்களின் வருகைக்குப்பின்
ரசிப்புத்தன்மையே மாறியிருந்தது.

மேற்குறிப்பிட்ட கபாலி, காமதேனு, பாரகன் போன்ற தியேட்டர்கள் இப்போது உள்ளதா என்று தெரியவில்லை.

தேவியைப்பற்றி சமீபத்தில் ஜாக்கி சேகர் எழுதிய இடுகைதான் என் நினைவுகளை பின்னோக்கித்தள்ளியது.

இன்னும் விட்டுப்போன பல நினைவுகளுடன் மறுபடியம் சந்திக்கிறேன்.


CHENNAI A FLASH BACK

60-70 து  காலகட்டம்.

அன்று சென்னை இன்றளவுக்கு பரபரப்பு இல்லாதது. எனினும் பாரிஸ் கார்னர். சென்ட்ரல், மவுன்ட் ரோடு லஸ் கார்னர் போன்றவை கொஞ்சம் பரபரப்பாகத்தான் இருந்தன.

சிட்டி லிமிட் என்பது தெற்கு  அடையார்,  வடக்கு  திருவொற்றியூர், மேற்கே பெரம்பூர், கிழக்கு கடல்.

பெரம்பூர் தாண்டி ஆவடி வரை சென்னைக்குள் இருப்பதாச்சொன்னாலும்,
கிராமச்சூழ்நிலைதான்.

அதிலும் ஆவடியை குட்டி கேரளா என்றே அழைப்பார்கள். மரங்கள் அடர்த்தியாக இருந்ததாலும், மலையாளிகள் அதிகமாக வசித்ததாலும்
அந்தப்பெயர்.

tank பாக்டரி போன்ற கம்பெனிகளில் அவர்கள்தான் அதிகம்.
பிறகு பாடியில் உள்ள கம்பெனிகளிலும்.

அன்று ரயில் என்பது கரி எஞ்சின்தான். பள்ளிக்குச்செல்பவர்களும், வேலைக்குச்செல்பவர்களும் என அன்றும் புறநகர் ரயில்களில் கூட்டம் அலை மோதும்.

ஆனால் தாம்பரம் ரூட்டில் மின்சார ரயில்தான்.

சென்னை மவுண்ட் ரோடில் தேவி தியேட்டர் வந்தது 70 களின் ஆரம்பத்தில். (நினைவூட்டலுக்கு ஜாக்கி சேகருக்கு நன்றி)

ரிக்ஷாக்காரன் ரிலீசான நேரம். எல்லோரும் தேவி தியேட்டரைப்பற்றியே
பேசிக்கொண்டிருப்பார்கள். ' படம் பார்த்தா அந்த தியட்டரில் பாக்கணும்
ஒவ்வொரு சீட்டிக்கு பின்னாடியும் சின்னதா ஸ்பீக்கர் வெச்சிருக்கான். அவனவன் அலறராண்டா' என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள்.

தியேட்டரின் முகப்பை பார்த்தவுடனே ' எம்பூட்டு பெருசு 'என்று தோன்றியது. டிக்கட் ரேட்டைப்பார்த்ததும் ஒரு கிலி. அன்று புறநகர் பகுதிகளில் பால்கனியே 2 ரூபாய்தான்.

இங்கு 2.90 மற்றும்  4 ரூபாய் என்றதும் பயமாகத்தான் இருந்தது.

அப்போது ஒரு ரூபாய் இருந்தால் 5 இட்லி ஒரு பெரிய தோசை, ஒரு காபி
என்று சாப்பிட்டாலும் 20 பைசா திருப்பிக்கிடைக்கும்.

அந்த சரிவான பாதையின் வழியே மேலேறிச்செல்லும்போதே சந்தோஷமாக இருந்தது. உள்ளே நுழைந்ததும் பிரமிப்பாகத்தான் இருந்தது.
மங்கிய வெளிச்சம். இதமான குளிர். ( அப்போதுதான் முதன் முதலாக a/c
உணர்கிறேன்)

சீட்டுக்குப்பின்னால் தேடிப்பார்த்தேன். ஸ்பீக்கர் ஒன்றும் இருப்பதாகத்தெரியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தவுடன் புரிந்தது. புள்ளிக்கோலம் போல வட்ட வட்டமாகத்தெரிந்ததுதான் ஸ்பீக்கர் என்றும், நீளமாக கோடு கோடாக போட்டிருந்ததுதான் a/c என்றும் புரிந்தது. (அப்போது எனக்கு வயது 14. )

இதன் அடுத்த பகுதி உடனே

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

'ழ'

தமிழுக்கே உரிய எழுத்து, சொல் எனலாம். தமிழர்களில் எத்தனை பேர் ழ வை சரியாக உச்சரிக்கிறார்கள்?
ஒரு  ஐம்பது விழுக்காடு தமிழர்கள் கூட 'ழ' சரியாக உச்சரிப்பது கிடையாது.

பள்ளிகளில் தமிழாசிரியர்களில் பலபேர் இன்னமும் 'வாளப்பளம்' கேஸ்தான். இதற்காக  நாம் வெட்கப்படவேண்டும். தமிழ் மொழியின் அழகே
'ழ' உச்சரிப்பில்தான் இருக்கிறது. குழந்தைகளுக்கு இப்போதே 'ழ; உச்சரிப்பை
சரியாகச்சொல்ல கற்றுக்கொடுக்க வேண்டும்.

அன்று தமிழ் சினிமாவில் நடித்த எல்லோருமே 'ழ வை அழகாக உச்சரிப்பார்கள். நாடகப்பயிற்சி அவர்களுக்கு உச்சரிப்பு செம்மையைக்கொடுத்தது. தெலுங்கை தாய் மொழியாகக்கொண்ட ரங்காராவ், நாகையா, அஞ்சலிதேவி, சாவித்திரி போன்ற பலர் தமிழை அழகாக உச்சரித்தார்கள். ஏன்? பாடகர்களில்  பி.சுசீலா, எஸ்.ஜானகி, எஸ்.பி.பி.
போன்றோரின் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு அருமையாக இருக்கும்.

அவர்களும் தெலுங்கை தாய் மொழியாகக்கொண்டவர்கள்தான். எனில் தமிழர்களாகிய நம்மில் பலபேர் தமிழ் உச்சரிப்பில் அக்கறை கொள்வதில்லை. 'ழ' உச்சரிப்பு மட்டுமல்ல. வல்லினம், மெல்லின உச்சரிப்புக்கள் கூட சரியாக இருப்பதில்லை. இளைய தலைமுறையினரில்
பலபேர் 'ல' வுக்கும் 'ள' வுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார்கள்.

ஒரு மொழியின் சுகமே அழகான உச்சரிப்பில்தான் இருக்கிறது. உங்களுக்குத்தெரியுமா? மலையாளிகள் அவர்களின் மொழியை மிக அழகாகக்  கையாள்வார்கள். குறிப்பாக 'ழ' வை அனைத்து தரப்பு
மக்களும் சரியாக உச்சரிப்பார்கள். சிறு குழந்தைகள் உட்பட.

நம்மவர்களுக்கு உச்சரிப்பு ஒரு விஷயமே அல்ல. நாம் சிந்திக்க வேண்டும்.
நம் மொழியை நாமே அலட்சியப்படுத்தக்கூடாது.

'செந்தமிழும் நாப்பழக்கம்' 


வியாழன், 29 செப்டம்பர், 2011

adimai

அடிமைத்தனம் யாருக்குமே பிடிக்காது. அடிமை என்ற சொல்லே வெறுக்கத்தக்கது. அன்புக்கு அடிமை என்பது சரியா? பின்னாளில் பல இன்னல்களை வரவழைக்கும் அது. அன்பை - பகிர்ந்து கொள்ளத்தக்க ஒன்றாக கருதலாமே ஒழிய அடிமைப்படுத்தும் விதமாக நினைக்கக்கூடாது.

அன்பு ஆசையின் அடிப்படையில் எழுவது என்று சிலர் கூறுகிறார்கள்.
ஆசை + அன்பு = அடிமை.

எந்த விஷயத்தின் மீதும் ஆசை ஏற்படும்போதும் கூடவே அன்பும் ஏற்படும். அது கடைசியில் கண்மூடித்தனமான அடிமை உணர்வில் கொண்டு சேர்த்துவிடும்.

அது இல்லாமல் அல் அவள், அவன் இல்லாமல் வாழவே முடியாது என்ற
நிலைமையில் மனது தானாகவே அடிமைப்பட்டு விடும்.

இன்றைய இளைஞர்கள் சினிமா நடிகர்கள் மீது வைத்திருப்பது அன்பா? ஆசையா?

கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்வது சூடம் காட்டுவது, அலகு குத்துவது,
வெறி பிடித்தாற்போல் துள்ளுவது இதெல்லாம் எந்த ரகத்தில் சேர்த்தி?

நடிகர்களின் நடிப்பை ரசிப்பதுடன் நிறுத்திக்கொள்ளவேண்டும்.
அவர்கள் சொல்வதில் செய்து காட்டுவதில் நல்லவிஷயங்கள் இருந்தால்
ஏற்றுக்கொள்வதில் தவறில்லை.

ஆனால் கண்மூடித்தனமாக துள்ளாட்டம் போடுவது அடிமைத்தனத்தில்தான் கொண்டு சேர்க்கும். அது அவர்களின் வாழ்க்கையையே பாதிக்கும்.
புரிந்து கொண்டால் நல்லது .

திங்கள், 26 செப்டம்பர், 2011

தாமிரபரணி: vettiyobhanishath 2

தாமிரபரணி: vettiyobhanishath 2: மீண்டும் வேட்டி புராணம். வேட்டி தென்னிந்தியாவுக்கு உரித்தானது என்றாலும் தமிழகம், கேரளம், கர்நாடகா இம்மூன்று மாநிலங்களில்தான் அதிகமாக உபயோகி...

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

வேட்டியோபநிஷத் 2

மீண்டும் வேட்டி புராணம். வேட்டி தென்னிந்தியாவுக்கு உரித்தானது என்றாலும் தமிழகம், கேரளம், கர்நாடகா இம்மூன்று மாநிலங்களில்தான் அதிகமாக  உபயோகிக்கின்றனர். ஆந்திராவில் கூடுதலும் பஞ்சக்கச்சம் முறைதான்.
அன்று தமிழ் சினிமாவில் எம்ஜியார் வேட்டி கட்டி நடித்த படங்கள் கருப்பு வெள்ளையில் அதிகம் என்றாலும் கலருக்கு மாறியபின் சற்று குறைவே எனலாம். ஏதோ தங்கச்சி, அம்மா என்று வீட்டில் பாசமுடன் பழகும்போது வேட்டியில் இருக்கும் அவர், அடுத்து காதலியை பார்க்கும்போதும், அதற்கு அடுத்த சண்டைக்காட்சிகளுக்கும் பாண்டுக்கு மாறியிருப்பார்.
மலையாளப்படங்களில் அனைத்து ஹீரோக்களும் அன்று வேட்டியில்தான்
உலா வருவார்கள். பான்ட் அபூர்வம்தான்.
வேட்டி கட்டிய ஹீரோக்கள் வயல் வெளியிலோ நதிக்கரையிலோ ஹீரோயினுடன் யேசுதாஸ் குரலில் பாடியபடியே செல்லும் காட்சிகள்
முக்கால்வாசி எல்லாப்படங்களிலும் இருக்கும்.
பிரேம் நசீர், மது போன்ற பல ஹீரோக்கள் ஜெயபாரதியுடன் பாடிச்செல்லும் காட்சிகள் நிறையவே இடம் பெறும்.
இந்த இடத்தில் ஜெயபாரதியைப்பற்றி ஒரு வார்த்தை.
தன்னுடன் நடிக்கும் எல்லா ஹீரோக்களுடனும் காதல் காட்சிகளில் ஜெயபாரதி மிக அழகாக இழைந்து இணைந்து மிக நெருக்கமாக நடிப்பார்.
அவர் கண்களிலும் முகத்திலும்  தெரியும் அந்த காதல்காம உணர்ச்சியை இன்று வரை வேறு எந்த நடிகையும் காட்டியதாக நினைவில்லை .
படம் பார்க்கும் ஒவ்வொரு ஆண் மகனையும் 'நட்டு' வனாராக்கும் திறமை
அவர் ஏற்றிருந்த கதாபத்திரங்களுக்கு இருந்தது.
வாடகைக்கு ஒரு ஹ்ருதயம், ரதிநிர்வேதம் போன்ற பல படங்கள் இதற்கு உதாரணம்.
படம் பார்த்து வெளியே வரும் ஒவ்வொருத்தனும் பேய் அறைஞ்சா மாதிரி
வெளியே வருவான். இரண்டு மூன்று நாட்களுக்கு ஒன்றுமே ஓடாது. கூடவே 
வரும்.
அன்று மலையாளத்தில் வேட்டி கட்டிய கதை, கதாபத்திரங்களுக்கு இணையாக 
ஜெயபாரதியின் பாத்திர அமைப்பும் அருமையாக இருந்தன.
இன்றும்  மோகன்லால் மம்மூட்டி போன்ற நடிகர்கள் வேட்டி கட்டும் கதா பாத்திரங்களில் நிறையவே நடிக்கிறார்கள்.
புது முக நாயகர்களான ப்ரித்விராஜ் திலீப் போன்ற இளைய தலைமுறை
நடிகர்களும் வேட்டியுடன் வரும் கேரக்டர்கள் நிறையவே பண்ணுகிறார்கள்.
தமிழில்தான் வேட்டிக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான பாத்திர அமைப்பு அவர்களுக்கு ஏற்படவில்லையோ அல்லது அவர்களுக்கு பிடிக்கவில்லையோ தெரியவில்லை.
கேரளாவில் இன்றும் இளைய தலைமுறைகள் வேட்டி உடுத்துகிறார்கள்.
அவர்களுக்கு அது பிடித்தமானதும் கூட.
இன்றைய தமிழக இளைஞர்கள் வேட்டியை கை விடாமல் இருந்தால் சரி.
சூப்பர் ஸ்டார் சொல்வது போல் 'நாங்க பழக வந்திருக்கோம்' என்று சொல்லிக்கொண்டே வேட்டியுடன் பழகுங்கள்
பழகினால் பிடித்துவிடும்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

வேட்டியோபநிஷத்

 வேட்டியோபாநிஷத் இதுதான் தலைப்பு
வேட்டி கட்டுவது என்பதையே இன்றைய இளைஞர்கள் மறந்து விட்டார்கள். வெளியே முழுப்பான்ட்  வீட்டில் முக்காப்பான்ட். இதுதான் நிலைமை.

வேட்டி என்பது ஆண்களின் அழகான உடை. தென்னிந்தியாவின் தனிப்பட்ட ஆடை எனலாம். தமிழ் திரைப்படங்களில் முன்பு வேட்டி கட்டும் கதாபாத்திரங்கள் நிறைய வந்தன.

குறிப்பாக சிவாஜி வேட்டி கட்டி நடிக்கும் படங்கள். எனக்குத்தெரிந்து வேட்டி கட்டி நடித்த கதா நாயகர்களில் சிவாஜி மாதிரி அழகாக நடித்தவர்கள் யாருமே இல்லை எனலாம்.

அவர் வேட்டி கட்டி நடந்து வரும் அழகே தனி. நானெல்லாம் வேட்டி கட்ட
கற்றுக்கொண்டதே சிவாஜியைப்பார்த்துத்தான்-ஏகலைவன் மாதிரி.
கருப்பு-வெள்ளை படங்களாகட்டும், கலராகட்டும்-அசத்தியிருப்பார்.

தில்லானா மோகனாம்பாள், சவாலே சமாளி, பாரத விலாஸ் போன்ற பல படங்கள் உதாரணம். வேட்டியையும் நடிக்க வைக்கும் திறமை அவருக்கே உரியது.

அப்படி ஒரு கலை நயத்தோடு வேட்டி கட்டுவார். தழையத்தழைய வேட்டி
கட்டும் அவருடைய பாணி மிகவும் ரசிக்கக்கூடிய ஒன்று.

இன்றைய கால கட்டத்தில் வேட்டி, வசதி இல்லாத ஒன்றாக இருக்கலாம்.
எனில் ஒன்று . வார இறுதி நாட்களில் வேட்டி கட்டிக்கொண்டு கோவிலுக்கோ உறவினர் வீட்டுக்கோ உங்களின் இளம்  மனைவியுடன் செல்லுங்கள். "பாத்தியா லட்ச்ச லட்சமா சம்பாதிக்கிறான் இந்த சின்ன வயசிலேயே வீடு கார் எல்லாம் வாங்கிட்டான். இருந்தாலும் வேட்டி கட்டிக்கிட்டு எவ்வளவு சிம்பிளா இருக்கான், பாத்தியா" என்று உறவினர்கள்
உங்களைப்பாராட்டலாம்.

காதலிக்கும் இளைஞர்கள் சிம்பிளாக வேட்டி கட்டிக்கொண்டு வளைய வாருங்கள். உங்கள் காதலியின் அபிமானத்தைப்பெறலாம்.

எல்லாவற்றையும் விட வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு பீச் பக்கம் காலாற நடந்து செல்லுங்கள். காற்றின் 'எல்லையில்லா' சஞ்சாரத்தை
இதமாக உணரலாம்.

திங்கள், 19 செப்டம்பர், 2011

எளிமை

எளிமை ஒரு நிம்மதியான விஷயம். தன் எளிமையால் உலகையே தன் பக்கம் ஈர்த்தவர் காந்திஜி. சூர்யன் அஸ்தமிக்காத ராஜ்ஜியம் என கொக்கரித்த வெள்ளைக்காரர்கள் எளிமையே உருவான காந்தியிடம் தோற்றுப்போனார்கள்.

அட்டன்பரோவின் காந்தி சினிமாவில் ஒரு காட்சி. குற்றம் சாட்டப்பட்ட காந்தி நீதிமன்றத்துக்குள் நுழைவார். கூண்டில் ஏறப்போகும் அவரைக்கண்டு
நீதிபதி மரியாதையுடன் எழுந்து நிற்பார். அதைப்பார்த்து அனைவரும் எழுந்து நிற்பார்கள்.

இது காந்தின் எளிமைக்கு கிடைத்த மரியாதை. ஏன்? அதற்கு முன்பு எளிமைக்கு மரியாதை இல்லையா?

புத்தனும், ஆதி சங்கரனும் ஏசுவும் மற்ற ஆன்மீகத்தலைவர்களும், எளிமையை போதித்தவர்கள் தான்.

எனினும் உலக அளவில் எளிமைக்கு காந்தியால் தான் மரியாதை கிடைத்தது.

பணம் பண்ணும் இன்றைய அவசர உலகம் எளிமையை மறுக்கிறது.
வாழ்வின் வசதிகளில் திகட்டத்திகட்ட சுகம் தேடி அலைகிறது.

தேவை இருக்கிறதோ  இல்லையோ எல்லாவற்றையும் வாங்கி வீட்டில் அடுக்கி விடவேண்டும். வீடு முழுவதும் குளிரூட்டப்படவேண்டும்.

ரயில் பயணங்களில் கூட குளிரூட்டப்பட்ட பெட்டிதான் வேண்டும்.
பிழைப்புக்காக பட்டணம் வருவோர் காசு பணம் நிறைய பார்த்தவுடன்,
கிராமத்தின் குல தெய்வ பூஜைக்கு சென்றாலும் அங்கு தங்குவதற்கு
குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதிதான் தேடுகிறார்கள்.

கேட்டால் அப்படியே பழகிவிட்டோம் என்கிறார்கள்.

வெயிலைப்பழகு, மழையைப்பழகு , இயற்கையான குளிர் காற்றைப்பழகு.

இவை ஆரோக்கியத்தை தரும். நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

இயற்கையோடு பழகினால் எளிமையைச்சொல்லித்தரும்.
இயல்பான வாழ்க்கையைச்சொல்லித்தரும்.






நதி

நதி என்பது உலகின் உயிரோட்டம். உலகம் தொடங்கிய நாள் முதல் நதிக்கரை வாழ்வுதான் நாகரீகத்தின் துவக்கம். வாழ்வாதாரத்தின் உணவு உற்பத்தி நதிக்கரையை சுற்றித்தான் இருந்தது, இருக்கிறது, 
நதியைப்பாதுகாக்கும் கடமை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது.
அதற்கான உறுதி மொழியை நினைவில் கொள்வது நல்லது.

மண்ணின் செழிப்பு, மக்களின் செழிப்பு. அதற்குத்துணை அரவணைத்துச்செல்லும் நதியே.