thamirabharani லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
thamirabharani லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 மார்ச், 2012

தொடர்பு

ஒன்றுக்கொன்று தொடர்பான விஷயங்கள்தான் நம்மிடையே
இரத்தத்தில் ஆரம்பித்து இலக்கியம் வரை.

பசியிலிருந்து உணவுவரை
இருளிலிருந்து விடியல்வரை - எனினும்

நிரந்தரமில்லாதவைக்குத்தான் அடித்துக்கொள்கிறோம்
கடைசிவரை.

http://subramanian-thamirabharani.blogspot.com/

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

உரிமை

உழைப்பதைப் பற்றி கவலையில்லை
வேலை நிறுத்தம் ஒன்றே எங்கள் உரிமை

நாட்டின் நலம்/யாருக்கு வேண்டும் அது
சரி உன் குடும்ப நலம்-அது பாட்டுக்கு நடக்கும்!

எப்படி?

அதை கட்சி பார்த்துக்கொள்ளும்
அது உனக்கு- மற்றவர்களின் நிலை?

அது எங்களுக்கு விஷயமில்லை-மேலும் அது
அவர்களின் கவலை.

நீங்கள் வேலை செய்ய விட்டால்தானே?
-நாங்கள் கட்சித் தலைமைக்கு கட்டுப்படுகிறோம்

இப்படியே போனால் மக்களின் அன்றாட வாழ்வு?
நாங்கள் கட்சிக்காக வாழ்கிறோம்

சரி! இதற்கு என்னதான் முடிவு?
-வேலை நிறுத்தம் வாழ்க!

http://subramanian-thamirabharani.blogspot.com/


திங்கள், 20 பிப்ரவரி, 2012

நினைவலைகள்

விடுபட்டுப்போன உறவின் உயிர்த்துடிப்பை
நேற்று உணர முடிந்தது

அத்தனை அலைஓசைகளுக்கு மத்தியிலும்
தனியாக வந்து செவிப்பறையைத்
தட்டிய குரல்

நலம் விசாரிக்கத் தோன்றவில்லை-
நலமாகத் தோன்றியதால்

சுற்றிவளைத்துப் பேசினாலும்
மையக்கருத்தென்னமோ-
நாம் மட்டுமே

சூழ்நிலைத் தாக்கத்தால் வேறுபட்டிருந்தாலும்
காலவெள்ளம் கரைசேர்த்தது

-இனி ஒன்றாகிவிடுவோம் என்ற
நம்பிக்கையின் மிச்சத்துடன்--

http://subramanian-thamirabharani.blogspot.com/
20-02-2012   11.45pm

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

எழுத்தாளுமைகள்

கல்கி - வாசிப்பின் ஆரம்ப காலத்தில் என்னை மிகவும் கவர்ந்தவர் கல்கி.

அந்த சின்ன வயதிலேயே பொன்னியின் செல்வன் என்னை அந்த அளவுக்கு ஆக்கிரமித்திருந்தான். அன்று நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாக நினைவு. ஈடுபாடு என்னவோ வந்தியத்தேவனிடம்தான். அன்று அந்தப் புதினத்தைப் படித்துக் கொண்டிருந்தவர்கள் அனைவருமே சரித்திர காலத்தில்தான் உழன்றார்கள்.
உண்மையைச் சொல்லப்போனால் நிகழ்காலமே யாருக்கும் பிடிக்கவில்லை. அப்படி ஒரு ஈர்ப்பு பொன்னியின் செல்வனில்.

பின்னர் தேடல் முழுவதும் சரித்திரக்கதைகளாகவே இருந்தன. அப்படித்தான் கல்கிக்குப் பிறகு சாண்டில்யன் நுழைந்தார். அது வேறு ஒரு உலகம். அவரின் புதினங்களில் என்னைக் கவர்ந்தது யவனராணி. கல்கியின் அனைத்துப் படைப்புகளையும் ஒர் சுற்று சுற்றி விட்டுத்தான், சாண்டில்யனிடம் வந்தேன். கொஞ்ச நாட்கள் அவருடன் சுற்றிவிட்டுத் திரும்பினால் அதோ வருகிறார் சுஜாதா.

நவீன உலகத்துக்கு அத்தனை வாசகர்களையும் சடுதியில் அழைத்துச் சென்றவர் அவர். கடைசி வரை அத்தனை பேரையும் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்.

பிறகு ஜெயகாந்தன், அரு. ராமநாதன்,நா.பார்த்தசாரதி,கிவா,லா.சா.ராமாமிருதம், இந்திரா பா.சாரதி, கோவி, அசோகமித்திரன், பாலமுருகன் இன்னும் விடுபட்ட பலபேர்களுடனும் அளவளாவிக் கொண்டிருக்கும்போது விடிவெள்ளி போல தென்பட்டார் தி. ஜானகிராமன்.

ஆற்றொழுக்கு போல மனதை தடவிவிடுவது போல ஒரு எழுத்து அவருடையது. அவரின் அம்மா வந்தாளில் விழுந்தவன்தான். இன்னமும் அவரின் எழுத்தாளுமையிலிருந்து நான் மீளவேயில்லை. மீளவும் விரும்பவில்லை. எத்தனை மீள் வாசிப்பு நடத்தியும் அதன் புதுமை குறைவதேயில்லை. அவரின் சிறுகதைகளுக்காக ஒரு தனிக்கட்டுரையே எழுதலாம்

புதுமைப்பித்தனின் எழுத்தாளுமைக்கும் ஒரு தனி வசீகரம் உண்டு.

விடுபட்ட எழுத்தாளுமைகள் நிறைய உண்டு.

முத்தாய்ப்பாக சு.ரா.     ஜே.ஜே. சில குறிப்புகள், ஒரு புளியமரத்தின் கதை,
மற்றும் அவரின் சிறுகதைகள்,கட்டுரைகள்--அனைத்தும் கல்வெட்டுக்கள்.

http://subramanian-thamirabharani.blogspot.com/
date 15/01/2012    01-35p.m

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

தாமிரபரணி

தாமிரபரணியை நான் மிகவும் நேசிக்கிறேன்
என் சொந்த ஊரான கல்லிடையை அரவணைத்துச்செல்லும் நதி அது.

பொதிகையில் உற்பத்தியாகி பாபநாசம், விகேபுரம்வழி, அம்பை-கல்லிடையூடாகப் பாய்ந்து, வீரவநல்லூர், சேரன்மாதேவி,நெல்லை கடந்து
கருங்குளம், ஸ்ரீ வைகுண்டம் தாண்டி கடலை அடைகிறது.

செல்லும் வழியெல்லாம் பசுமையை விதைத்து வளம் பெறச்செய்கிறது


கல்லிடை என் பாட்டனார், தகப்பனார் ஊர்.

கருங்குளம் என் தாயாரின் ஊர்.

தாமிரபரணியின் தண்ணீர் குடித்து வளர்ந்தவர்கள்

என் உடம்பில் ஓடுவது தாமிரபரணி ரத்தம்

நான் மட்டுமல்ல, தாமிரபரணி நதிக்கரையில் பிறந்து வளர்ந்த
அனைத்து மக்களும் அப்படித்தான்.

காவேரியை சொந்தம் கண்டாட ஒருவர், இப்போது பெரியாரை சொந்தம் கொண்டாட வேறொருவர். எனில்,

தமிழகத்திலேயே உற்பத்தியாகி தமிழ் மண்ணிலேயே ஓடி,
தமிழ் நாட்டு கடலில் கலக்கும் ஒரே நதி தாமிரபரணி என்பேன்.

இன்றும் எழுபதுகளை கடந்த முதியவர்கள் கூட அதிகாலை தாமிரபரணியில்
குளிப்பதைக்காணலாம்.

அவர்களின் ஆரோக்கியமே அதுதான். மூலிகையின் அம்சங்களுடன்
மருத்துவ குணம் கலந்து பாய்ந்து வரும்  நதி அது.

நதிக்கரை வாழ்வு அற்புதமானது. அங்கு  வாழ்பவர்கள் வரம் வாங்கி
வந்தவர்கள்.

நதியை நேசிப்பவன், நாட்டை, மக்களை நேசிப்பவன், மொழியை நேசிப்பவன்

நெல்லை வாழ் தமிழ் மக்களே உங்கள் தாமிரபரணியை யாரும் மாசு
படுத்த அனுமதிக்காதீர்கள்.

உங்கள் உடம்பில் உயிர் ஓடுவதே தாமிரபரணி தண்ணீரால்தான்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

http://subramanian-thamirabharani.blogspot.com/

01/01/2012   11.22pm






வெள்ளி, 30 டிசம்பர், 2011

கல் தெய்வங்கள்

கல் தெய்வங்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்

அவை அசையாச்
சொத்துக்கள்

முட்டினாலும்
மோதினாலும்
அழுதாலும்
கனியாது

திட்டினாலும்
அடித்தாலும்
இரங்காது

சுனாமி புயல்
வந்து அழிந்தாலும்
அழியாது

குற்ற உணர்ச்சியால்
மன்னிப்பு கேட்டாலும்
கிடைக்காது

தப்பித் தவறி
நன்மை நிகழ்ந்து
கண்ணீர் மல்க
நன்றி கூறினாலும்
ஏற்காது

ஊட்டினாலும்
உண்ணாது

கொடுத்தாலும்
வாங்காது

வெறுத்தாலும்
விடாது

இருந்தும்
கல் தெய்வங்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்

அவை அசையாச்
சொத்துக்கள்


சனி, 17 டிசம்பர், 2011

ஒன்றுமில்லை

ஒன்றுமில்லை

கூடங்குளமானாலும்
முல்லைப்பெரியாரானாலும்

2 ஜி ஆனாலும்
வரப்போகும்
3 ஜி 4 ஜி 5 ஜியானாலும்

பெத்த

ஊழலேயானாலும்
தமிழ் மக்களின்
உறவே போனாலும்

எப்போதும்
ஆட்சியாளர்களுக்கு

ஒன்றுமில்லை

http://subramanian-thamirabharani.blogspot.com/

18/12/2011   1pm

வெள்ளி, 9 டிசம்பர், 2011

இணைப்பு

இணைப்பு

ஒன்றோடுன்று இணைவது சுகம்


நாடுகள் இணைவதும் பலம்
புல்லுருவிகள்
தடையிடாவிட்டால்

இணைப்பு அறிவை வளர்க்கும்
பெருமளவில்
புரிந்து கொண்டால்

நதியிணைப்பு தாகம் தீர்க்கும்
பின்
பசியைப்போக்கும்
தலை முறைகளாய்

நாடாள்பவர் இணைந்தால்
மக்கள் நலம்

மேலும் சொல்வதற்கு
ஒன்றுமில்லை

ஒன்றோடொன்று இணைவது சுகம்


09/12/2011  6.55pm

செவ்வாய், 6 டிசம்பர், 2011

அணை - கட்டு

அணை - கட்டு

முல்லைப்பெரியார் பிரச்சனையை இந்த அளவுக்கு பெரிதாக்கியதே கேரள
அமைச்சர்களும், ஊடகங்களும் தான்.

செய்தி ஊடகங்களின் சமீபத்திய போக்கும் அப்படித்தான் இருக்கின்றன.
அரை மணி நேர செய்தி வாசிப்பில் 25 நிமிடங்கள் அணைக்கட்டைப்பற்றியே இருக்கின்றன.

முதலில் இம்மாதிரியான பயமுறுத்தல் நடவடிக்கைகளுக்கு அணை - கட்டவேண்டும். சுமுகமான தீர்வுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி யோசித்து இரு மாநில மக்களுக்கும் தேவையான
நன்மைகள் கிடைக்கும்படிச்செய்ய வேண்டும்.

அதை விடுத்து வன்முறையை கட்டவிழ்த்து விடுவது போன்ற அறிக்கைகளுக்கும், செய்தி வாசிப்புகளுக்கும் அணை - கட்டுவதுதான்
சிறந்தது என்று தோன்றுகிறது.

6/12/2011  7-11pm.

http://subramanian-thamirabharani.blogspot.com/

சனி, 26 நவம்பர், 2011

பயம்

பயம்

அத்துடன் அலட்சியம். இரு மாநிலங்களுக்கிடையேயான புரிதலில்லாத
ஒரு விஷயமாக முல்லைப்பெரியார் பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறது.

சமீப காலமாக அடிக்கடி உண்டாகும் சிறு சிறு பூமி அதிர்வுகள், எப்போது
பெரிதாகுமோ என்று கவலைப்படும் கேரளம். தண்ணீர் கிடைக்காதோ
என்று ஆதங்கப்படும் தமிழகம்.

பழைய அணைக்கட்டின் பலவீனம் - அது எங்காவது பூமி அதிர்வினால்
உடைந்தால் பல லட்சம் உயிர்கள் பலியாகுமே என்ற கேரளத்தின்
கவலையில் நியாயமில்லை என்று சொல்ல முடியாது.

அதே நேரத்தில் புதிய அணைக்கட்டு நிர்மாணித்தால் தங்களுக்கு தண்ணீர்
கிடைக்காமல் போய்விடுமோ என்ற தமிழகத்தின் சந்தேகத்தையும்
குறை கூற முடியாது.

உடனடியாக மத்திய அரசு இரு மாநில முதல்வர்களையும், மற்றும்
முதன்மையான பொறியியல் வல்லுனர்களையும் அவர்களோடு
உன்னத நீதிமான்களையும் சேர்த்து போர்க்கால அடிப்படையில்
ஆலோசனை நடத்த வேண்டும்.

காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லாமல் திறந்த மனதுடன் மக்களின்
நலனுக்காக (நம் இந்திய மக்கள் ) என்ற நினைப்புடன் பேச்சு
வார்த்தை நடத்தவேண்டும்.

கண்டிப்பாக ஒரு நல்ல முடிவு கிடைக்கும். மக்களின் பயத்தையும்
சந்தேகத்தையும் போக்குவது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

என் பூமி, என் தண்ணீர், என்றெல்லாம் வித்தியாசம் பார்க்காமல்
நம் மக்களின் வாழ்வு என்ற  எண்ணத்துடன் செயல் பட்டால்
நிச்சயமாக ஒரு விடிவு கிடைக்கும்.

அரசியல் உள் நோக்கம் எல்லாம் தேவையேயில்லை. மக்களிடம் வித்தியாசம் பார்க்காமல் அவர்களுக்காக நல்லதைச்செய்யும்
அரசியல்வாதிகளுக்கு என்றும் தோல்வியில்லை.

முதலில் நம் இந்திய மக்கள் என்ற நினைப்பு வரவேண்டும். மாநிலப்பிரிவினைகள் நமக்குள் தேவையில்லை.

பயம், சந்தேகமில்லாத வாழ்க்கை, மக்களுக்கு இதற்கான அடித்தளம் அமைய
இரு மாநில முதல்வர்களும் முயன்றால் அது சரித்திரத்தில் ஒரு பொன்
எழுத்துக்களாக பொறிக்கப்படும்.

http://subramanian-thamirabharani.blogspot.com/

Date 27/11/2011 - 1.11pm



வெள்ளி, 25 நவம்பர், 2011

Dam 999

வெறும் மொக்கைப்படம்.

கொஞ்ச நாள் வெளி நாட்டில் வாழ்ந்தால் அரை நிக்கர் போட்டுக்கொண்டு
ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் பண்ணிப்பணம்  பார்க்கலாம் என்ற ஆசை
போலிருக்கிறது இயக்குனருக்கு. லோக்கல் சினிமா ரேஞ்சுக்கு கூட
படத்தின் தரம் உயரவில்லை.

திரைக்கதையில் ஆயிரம் ஓட்டைகள். தமிழ், ஹிந்தி  நடிக நடிகர்களுடன்
ஒரு சில வெள்ளைக்காரர்களும் இருந்தால் ஹாலிவுட் தரம் கிடைத்து
விடும் என்று தப்புக்கணக்கு போட்டு, இயக்குனர் சூடு போட்டுக்கொண்டதுதான் மிச்சம்.

கேரளாவின் உள் கிராமத்தில் உள்ளவர்களும், பரம்பரையாக குடியிருப்பவர்களும் ஆங்கிலத்திலேயே  பேசிக்கொள்வது சரியான காமெடி.
நடு நடுவே ஒரு ஹிந்திப்பாடல் ஒரு தாலாட்டுப்பாடல் மலையாளத்தில்-
என்றெல்லாம் இடைச்செருகல் வேறு. சகிக்கவில்லை.

ஜோசியத்தை நம்பி காதலித்த பெண் கைவிட எங்கோ அலைந்து திரிந்து
ஒரு திருமணத்தில் பிறந்த பையனுடன் தன் காதலியின் கிராமத்துக்கே
வரும் இளைஞன், தன் காதலியைக்கண்டு மீண்டும் காதலை புதுப்பிக்க
நினைப்பதும், பின்னர் வரும் சில காட்சி அமைப்புகளும் என இடைவேளை
வரை படம் ஜவ்வுகிறது.

அணையை உடைப்பதற்கென ஒரு அரசியல்வாதியின் பொறுப்பற்ற
வில்லத்தனம். இது ஒரு குறியீடு.

அணை உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து வரும் காட்சி அமைப்புகளின்
கிராபிக்ஸ் சரியான பல்லிளிப்பு. இதற்கா 50 கோடி செலவானது?

3D யாம். நம்பமுடியவில்லை கண்ணாடியை கழட்டிவிட்டு பார்த்தாலும்
படம் அதைவிட பளிச்சென்று இருக்கிறது. 30 வருடங்களுக்கு முன்
பார்த்த மை டியர் குட்டிச்சாத்தான் இதை விட நல்ல 3D effect கொடுத்ததாக
நினைவு.

மொத்தத்தில் படம் ஒட்டவில்லை. பார்த்தவர்களே வாஷ் அவுட் பண்ணிவிட்டார்கள்.


http://subramanian-thamirabharani.blogspot.com/
.

சனி, 12 நவம்பர், 2011

KF

கிங் பிஷரின் தலைவர் மல்லையா நெருக்கடியில் இருக்கிறாராம்.
உதவச்சொல்லி பிரதமரிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

கண்டிப்பாக பிரதமர் உதவுவார் என்றே தோன்றுகிறது. கார்ப்பரேட்
முதலைகளை காங்கிரஸ் என்றுமே கை விட்டதில்லை. முதலில்
மறுப்பது போல் நாடகமாடி வேறு பிரச்சனைகளுக்கு மக்களை திசை திருப்பி சத்தமேயில்லாமல் காரியத்தை முடித்து விடுவார்கள்.

கோடிக்கணக்கான பணத்தில் புரளும் மல்லையாவின் உதவி அடுத்த
தேர்தலுக்கு கண்டிப்பாகத்தேவைப்படுமே.

அதற்காகவாவது காங்கிரஸ் தலைமை இப்போதைய நெருக்கடியிலிருந்து
மீள மல்லையாவிற்கு உதவி செய்யும். சாதாரண மக்களின் துன்பங்களைக்கண்டு முகத்தை திருப்பிச்செல்லும் பிரதமர், மல்லையா
போன்ற முதலைகள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார்.

இந்த உதவி மட்டும் மல்லையாவிற்கு கிடைத்துவிட்டால் இதையே ஒரு
உதாரணமாகக்கொண்டு அம்பானி போன்ற கார்பரேட் பெரு முதலைகள்
நாளையே ஒரு நீளமான நஷ்டக்கணக்கை காண்பித்து அரசின்
உதவியைக்கோரும் நிலைமையும் வரலாம்.

எதையும் தாங்கும் இதயம்தான் இந்திய மக்களுக்கு உண்டே!!!

சனி, 5 நவம்பர், 2011

வானுயர 3

மீண்டும் பெட்ரோல் விலை உயர்வு. பயந்தது போலவே காரியங்கள் நடந்து
கொண்டிருக்கின்றன. நிதியமைச்சர் 'இதில் சர்க்கார் ஒன்றும் செய்ய இயலாது. நஷ்டத்தைக்குறைக்க எண்ணெய் கம்பனிகள் எடுக்கும் முடிவு'
என்கிறார். பிரதமரோ பிரான்சில் இருந்துகொண்டே 'இது தவிர்க்கமுடியாதது. டீசல்,  சமையல்எரிவாயு போன்றவைகளின் விலை
கட்டுப்பாட்டையும் சர்க்கார் கைவிட யோசிப்பதாகவும். மக்கள் இதை புரிந்து 
கொள்ளவேண்டும் என்றும் பிரதமர் முன் ஜாமீன் எடுத்திருக்கிறார்.

மேல் மட்டத்திலேயே புழங்கும் அமைச்சர்கள், பிரதமர் பார்வையில் நாடு 
சுபிட்சமாகத்தான் இருக்கிறது. குடியிருக்கும் வீடு ஏசி , பறக்கும் விமானம் ஏசி,
பயணிக்கும் கார் ஏசி, கிட்டும் சம்பளம் அப்படியே வங்கிக்கணக்கில், செலவுகள் 
மொத்தம் மக்களின் வரிப்பணத்தில். ஏன் பேசமாட்டார்கள் ?

நாட்டில் முக்கால் விழுக்காடு மக்கள் விலையேற்றத்தால் விழி பிதுங்கி 
வழியறியாது நிற்க வரிப்பணத்தில் சுக ஜீவிதம்  நடத்தும் மந்திரிகள், விலையேற்றத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டுமாம்-சொல்கிறார்கள்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்திய பெரும் முதலைகளின் கருப்புப்பணத்தை
வெளிக்கொணர்ந்தாலே போதும். பெரும்பாலான பிரச்சனைகளுக்கு
தீர்வு காணலாம். ஆனால் செய்ய மாட்டார்கள். காரணம் பண முதலைகளின் உதவி  காங்கிரஸ் அரசுக்குத்தேவை.

நமது பிரதமர் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. அவ்வப்போது
வெளிநாடு செல்வது. போய் வந்த விஷயங்களை பள்ளி சென்றுவந்த
குழந்தைகள் அன்று என்ன நடந்தது என்று அம்மாவிடம் சொல்லுமே,
அதே போல் சோனியாஜி இடம் சொல்வது, கிரிக்கெட்டில் அம்பயர்,
நாலு ரன் எடுத்தால் இடமும் வலமும் காட்டுவது போல் கையை ஆட்டுவது , சோனியாஜியின் முகம் கோணாமல் நடப்பது 
இவையெல்லாம் தான் இவர் வேலை.

மற்றபடி மக்களை பிழியும் விலைவாசி ஏற்றம் எல்லாம் பிரதமருக்கு ஒரு 
பொருட்டே அல்ல.

பழகச்சொல்கிறார். மிகச்சிறந்த பொருளாதார மேதை, மக்கள் விலையேற்றத்தை புரிந்து சகித்து கொள்ளச்சொல்கிறார்.

சகித்துக்கொள்ளத்தானே மக்கள்.

சுகித்து வாழத்தானே மந்திரிகள்.





மெல்ல தமிழன் இனி

மெல்ல தமிழன் இனி


பிரதமரின் பத்திரிகையாளர்களின் கூட்டம். எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மேடையில் காபினட் அமைச்சர்கள் எல்லோருமே ஆஜர். நிருபர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏதாவது பிரச்சனையா?
சிலபேர் தைரியமாக அமைச்சர்களிடம் கேட்டபோது 'பொறுமை பொறுமை
இதோ பிரதமர் வந்துவிடுவார்' என்றனர் .

பிரதமர் வந்ததும் நிருபர்களுக்குள் பரபரப்பு தோன்றியது. பிரதமர் முகத்திலிருந்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

'நண்பர்களே நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம்' பிரதமர்
உரையை துவங்கியதும் நிருபர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்தது.
'என்ன சார் ஏதாவது அந்நிய நாட்டு படைஎடுப்பா? அல்லது வேறு ஏதாவது'
நிருபர்கள் சாரமாரியாக கேள்விகள் கேட்கவும், பிரதமர் 'ச்சே ச்சே அதெல்லாம் ஒன்றுமில்லை. அப்படியே இருந்தாலும் நாம் சமாளித்து விடுவோம். இது மிகவும் முக்கியமான விஷயம். சொல்கிறேன்' என்றவர்
'நாங்கள் காபினட் அமைச்சர்கள் மூன்று நாட்களாக சரியாக
சாப்பிடவில்லை, தூங்கவில்லை. மிகவும் கவலையாக இருக்கிறோம்.
நம்ம சோனியாஜி வீட்டிலும் அவருடைய சித்தப்பாஜி வீட்டிலும் பைப்
லைன் உடைந்து தண்ணீர் வரவில்லை. நாங்கள் மூன்று நாட்கள்
எங்கிருந்தெல்லாமோ ஆட்களை வரவழைத்து சரி செய்ய முயன்றும்
ஒன்றும் நடக்கவில்லை. சோனியாஜி கடுங்கோபத்தில் இருக்கிறார்.'

நிருபர்கள் சிரித்தனர். பிரதமர் கோபத்துடன் 'இது சிரிக்க வேண்டிய விஷயமல்ல. எங்கள் நிலைமையில் நீங்கள் இருந்து பார்க்கவேண்டும்.
நாடு எவ்வளவு பெரிய பிரச்சனையில் இருக்கிறது என்று அப்போதுதான்
உங்களுக்கு புரியும்'.

நிருபர்கள் மீண்டும் பலமாகச்சிரிக்க பிரதமர் கடுங்கோபத்துடன் 'நிறுத்துங்கள் சிரிக்காதீர்கள். இதோ பார்த்தீர்களா என்று ஒரு பேப்பரை
தூக்கி காட்டி 'இது பைப் லைனை சரியாக்க முப்படைகளையும் அழைக்கும் ஆர்டர். ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.'

இப்போது நிருபர்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

சிரிப்பொலி அடங்க ரொம்ப நேரமாயிற்று. பிரதமர் தொடர்ந்தார். நண்பர்களே கேளுங்கள் நாங்கள் இப்படி ஒரு தீர்மானத்தில் இருக்கும்
போதுதான் நண்பர் ராஜபக்ஷேயிடமிருந்து ஒரு தகவல் வந்தது.'

இப்போது நிருபர்கள் அமைதியாகிவிட்டனர். நமது சோனியாஜியின் மனதை
குளிர்விக்கவும், இலங்கை தமிழர்களின் மறு வாழ்வுக்கும் சேர்த்து ஒரு
ஐடியா ராஜபக்ஷே கூறியிருக்கிறார். அதை விளக்குகிறேன்.

'இலங்கையிலிருந்து ஒரு மிகப்பெரிய பைப் லைன் சோனியாஜியின் வீடு வரை நிர்மாணிக்கப்படும். அந்த பைப் லைன் வழியாக இலங்கை தமிழர்களின் ரத்தம் பம்ப் பண்ணி, நவீன தொழில் நுட்ப உதவியுடன்
தண்ணீராக மாற்றி அவரின் வாட்டர் டாங்கில் சேமிக்கப்படும்.
ரத்தம் தங்கு தடையில்லாமல் கிடைக்க இலங்கை தமிழர்களுக்கு
சத்தான ஆகாரம் வழங்கப்படும். அவர்களுக்கு உடுக்க உடை  இருக்க
வசதியான வீடு இப்படி பல உதவிகள் இந்தியாவே செய்யும்.

ஒரே நேரத்தில் சோனியாஜியின் மனமும் குளிரும். நண்பர் ராஜபக்சேயின்
உறவும் பலப்படும். சோனியாஜி 'பழசை' நினைத்து அடிக்கடி ஆவேசம் 
கொள்வதும் குறையும்.

அது மட்டுமல்ல உங்கள் தமிழகத்தின் செம்மொழித்தலைவர் இதற்கு ஒப்புதலும் 
அளித்துள்ளார் . அவரே அவருடைய தொலைக்காட்சியில் இது பற்றிய 
அறிவிப்பும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். 'தமிழர்களே, தமிழர்களே என்னைத்தூக்கி கடலில் போடுங்கள். நான் பைப் லைனாக மாறி 
அன்னை சோனியா அவர்களின் வீட்டுக்கு இலங்கை தமிழர்களின் ரத்தத்தை 
கொண்டு செல்கிறேன். தமிழர்களின் மறுவாழ்வுக்கு நானும் என்னாலான 
சிறிய உதவியை செய்தேன் என்று நாளை சரித்திரம் சொல்லட்டும்' 

பிரதமர் தொடர்ந்தார் 'இதற்கு கைமாறாக ராஜபக்சேவுக்கு ஒரு சிறு உதவியை இந்தியா செய்ய வேண்டும். அது வேறு ஒன்றுமில்லை
தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க போகும்போது இலங்கை படையினர் தினமும் இரண்டே இரண்டு மீனவர்களை மட்டும் சுட்டு கொல்வார்கள். அதற்கான ஒத்துழைப்பை மட்டும் நாம் கொடுத்தால் போதும். மேலும் தமிழர்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு
எதுவும் தேவையில்லை. எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும்
பெற்றுக்கொள்ளலாம். ஒரு 'குறிப்பிட்ட' வயது வரை அரசாங்கமே
அவர்களது பராமரிப்பை ஏற்றுக்கொள்ளும்'

நிருபர்கள் விக்கித்து நிற்க  'சரி எல்லோரும் பசியாக இருப்பீர்கள். உங்களுக்காக 'இத்தலி, சட்னி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வயிறு
நிறைய சாப்பிடுங்கள். உங்களுக்கு தெரியுமா சோனியாஜி மிகவும்
விரும்புவது தமிழ்நாட்டின் இந்த 'இத்தலி' சட்னி தான். அந்த வகையில் 
தமிழர்கள் கொடுத்து  வைத்தவர்கள். 





திங்கள், 24 அக்டோபர், 2011

black & white

கருப்பு வெள்ளை

இம்மாதிரி பழைய படங்களில் ஒரு உயிரோட்டம் இருப்பதென்னவோ நிஜம். இப்போது பார்த்தாலும் அது உறைக்கிறது.

குறிப்பாக சிவாஜியின் படங்கள். எம்ஜியாரின் சில குறிப்பிட்ட படங்கள்.

என் தங்கை என்னும் படத்தில் எம்ஜியார் தங்கையின் உடலைத்தோளில்
சுமந்தபடி கடலை நோக்கிச்செல்லும் கடைசிக்காட்சி இருக்கிறதே....

பார்த்தால் பசி தீரும் படத்தில் லேசாக ஊனமான ஒருகாலால் சிவாஜி
நடந்து வரும் ஒவ்வொரு காட்சியும்....

இவைகள் சின்ன உதாரணம் மட்டும்.

பாலச்சந்தரின் அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை படங்களில்
படம் நெடுக ஒரு சோகம், பயம் பின் தொடர முக்கிய காரணமே
கருப்பு வெள்ளையின் ஒளிப்பதிவுதான்.

கருப்பு வெள்ளை ஒளிப்பதிவில் அன்றைய நாயகிகள் அழகாகவே
காட்சியளித்தார்கள்.

சில படங்களின் கதையின் ஆழம் கருப்பு வெள்ளை ஒளிப்பதிவில்
நன்றாகவே ஒளிர்ந்தது.

அது போல் அன்றைய நடிகர்களின் பண்பட்ட நடிப்பும் கருப்பு வெள்ளை
படங்களில் மிகச்சிறப்பாகவே இருந்தன.

மயாபசாரில் தந்திரக்காட்சிகள் சிறப்பாக அமைந்ததின் காரணமும்
க.வெ ஒளிப்பதிவுதான்

சின்னத்திரையில் வரும் இது போன்ற க.வெ படங்கள் இப்பவும்
ரசிக்கக்கூடிய ஒரு அனுபவம்.




வெள்ளி, 21 அக்டோபர், 2011

தப்பும் சரியும்

தப்பும் 'சரி'யும்

நான் செய்தால் தப்பில்லை
நீ செய்தால் சரியில்லை

அமெரிக்கா செய்தால் தப்பில்லை
மற்ற நாடுகள் செய்தால் சரியில்லை

கம்யுனிஸ்ட் செய்தால் தப்பில்லை
காங்கிரஸ் செய்தால் சரியில்லை

திமுக செய்தால் தப்பில்லை
அதிமுக செய்தால் சரியில்லை

மற்ற நாடுகள் செய்தால் தப்பில்லை
அமெரிக்கா செய்தால் சரியில்லை

காங்கிரஸ் செய்தால் தப்பில்லை
கம்யுனிஸ்ட் செய்தால்  சரியில்லை

அதிமுக செய்தால் தப்பில்லை 
திமுக செய்தால் சரியில்லை 

ஆண் செய்தால் தப்பில்லை 
பெண் செய்தால் சரியில்லை 

நீ செய்தால் தப்பில்லை 
நான் செய்தால் சரியில்லை 

பெண் செய்தால் தப்பில்லை 
ஆண் செய்தால் சரியில்லை 

ஆக மொத்தம்  total

எதுவும் தப்பில்லை 
எதுவும் சரியில்லை 


ஞாயிறு, 16 அக்டோபர், 2011

நப்பாசை

நப்பாசை


அரசியல் சொல்கிறது
தலைவனை, தலைவியை
பின்பற்று என்று 

ஆன்மிகம் சொல்கிறது 
ஆண்டவனை 
பின்பற்று என்று 

மனைவி ஆணையிடுகிறாள் 
என்னை மட்டுமே 
பற்று என்று 

தாய் கண்டிக்கிறாள் 
அவளை 
பற்றாதே என்று 

ஆசைகள் இழுக்கின்றன 
என்னையே பற்றி 
வாழ் என்று 

கம்பெனி சொல்கிறது 
என்னைப்பற்றாவிட்டால் 
உனக்கேது வாழ்வு என்று 

முதியோர் சொன்னது 
'பற்றுக பற்றற்றான் பற்றினை 
அப்பற்றினை பற்று விடற்கு' என்று 

'ஆசை அறுமின்கள் ஆசையறுமின்கள் 
ஈசனோடாயினும் 
ஆசையறுமின்கள்'

என்றோ சித்தர் சொன்னது 
இன்னமும் புத்தியில் 
ஏறவில்லை. 

சனி, 15 அக்டோபர், 2011

வானுயர 2

பொருளாதார நிபுணர், ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைமை அதிகாரி,
தற்போது நாட்டின் தலைமைப்  பொறுப்பில் இருப்பவர் என்று அழைக்கப்படும் மன்மோகன் சிங்.

முன்னாள் நிதியமைச்சர், தற்போது பாதுகாப்பு? அமைச்சர், பொருளாதார
நிபுணர் என்றும் அழைக்கப்படும் சிதம்பரம்.

தற்போதைய நிதி அமைச்சரும், பொருளாதார நிபுணருமான பிரணாப்
முகர்ஜி.

இந்த மும்மூர்த்திகளின் கண்காணிப்பிலும் நாட்டின் பொருளாதாரம்
ஏனோ தானோ என்றுதான் இருக்கிறது.

விலைவாசி உயர்வு, பங்கு சந்தைகளின் சரிவு, தெலுங்கானா மற்றும்
ஊழல் பிரச்சனைகள் எதுவும் மகிழ்ச்சியைத்தருவதாக இல்லை.

2 ஜி பிரச்சனை பற்றி கேட்டால் பிரதமர் 'எனக்கு சோனியா 'ஜி', ராகுல்'ஜி' -
இந்த '2 ஜி' க்களை மட்டும்தான் தெரியும் என்கிறார்'

மேற்கொண்டு ஏதாவது கேட்டால் 'எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. நான் 
வெளியூரு ' என்று நழுவி விடுகிறார்.

எங்கோ சொந்த ஊரில் மணியடித்து பூஜை நடத்திகொண்டிருந்த பாவம்
பிரணாப் முகர்ஜி எல்லாம் 'பராசக்தியின்' லீலை என்றபடியே உள்ளூரில்
நடக்கின்ற சம்பவத்துக்கு வெளிநாட்டில் போய் மீட்டிங்கில் இருக்கும்
பிரதமரிடம் விளக்கம் சொல்கிறார்.

நம்ம ஊரு சிதம்பரம் 'இனிமேல் சத்தமில்லாத. அதிகம் வீர்யமில்லாத, ஏதோ நகம் மட்டும் பேந்து போறாப்புல பட்டாசை வெடிக்கச்சொல்லி
தீவிரவாதிகளிடம் கேட்டுக்கொள்ளப்போவதாகக்  கேள்வி.

ஒரு படத்தில் கவுண்டமணி கள்ளக்காதலியை பார்க்க அவள் வீட்டுக்கு வருவார்.
திடீரென அவள் கணவன் வந்துவிட கவுண்டமணி பயந்து பரண் மேல் ஏறி 
ஒளிந்து கொள்வார். வந்த கணவனிடம் அவள் 'என்னங்க அரிசி இல்ல, பருப்பு இல்ல என்று ஒவ்வொரு குறையாக சொல்ல 
'எல்லாம் மேலே இருக்கறவன் பார்த்துப்பான்' என்று கணவன் சொல்ல 
கவுண்டமணி கடுப்படைந்து 'யோவ் எல்லாம் மேல இருக்கறவன் பார்த்துப்பான்,
பார்த்துப்பான்னா நீ எதுக்குயா அவளை கொஞ்சிக்கிட்டுருக்கே'!!!

நம் மும்மூர்த்திகளும் 'எல்லாம் மேலே இருக்கறவன் பார்த்துப்பான்'
என்னும் மன நிலையில்தான் இருக்கிறார்கள் போலிருக்கிறது.











Sneha Veedu

சிநேக வீடு

மோகன்லாலின் சமீபத்திய மலையாளப்படம்.
சத்யன் அந்திக்காடின் இயக்கம்.

ஒரு சிறு கதை போன்ற இந்தப்படத்தின் கதையை ஒருசில வரிகளில்
அடக்கி விடலாம்.

பாலக்காடு கிராமத்தில் விவசாயம் செய்து அம்மாவுடன் நிம்மதியாக
வாழும் முதிர் காளையாக ஊரை வலம் வரும் மோகன்லால்.

விவசாயப்பணிகள் முடிந்து நண்பர்களுடன்  தன் பழைய சென்னை
வாழ்க்கையில் பல பெண்கள் தன்னையே சுற்றி வந்த கதைகளை ' பீலா' 
விட்டுக்கொண்டும், அவர்களுக்கு மத்தியில் ஹீரோவாக தன்னை முன் 
நிறுத்தி பல கலை நிகழ்சிகளை நடத்தியும் நேரம் போக்கும் லால் இரவில் 
நேரம் கழித்துதான் வீடு திரும்புவார் .

அப்படி ஒரு முறை வீட்டிற்கு வரும்போது வீடு இருளடைந்து கிடக்கிறது.
வாசலில் ஒரு 15 வயது பையன் உட்கார்ந்திருக்கிறான் . ஒன்றும் புரியாமல் 
உள்ளே செல்லும்  மோகன்லால்  அம்மா கோபமாக உட்கார்ந்திருப்பதைக்கண்டு காரணம் கேட்க, வாசலில் உட்கார்ந்திருக்கும்
பையன் தன்னை அப்பா என்று குறிப்பிட்டான் என்பதைக்கேட்டு அதிர்ச்சி
அடைகிறார்.
கல்யாணம் ஆகாத தனக்கு எப்படி மகன் என்று குழம்ப, லாலின் 'பீலா'
கதைகளை கேட்டுப்பழகிய ஊரார் சந்தேகிக்கின்றனர் .

அம்மாவும் தன்னை சந்தேகிப்பதைக்கண்டு , வெகுண்ட மோகன்லால் அந்த 
பையனை ஊரை விட்டு அனுப்ப பல முயற்சிகளும் செய்கிறார் .
ஆனால் அம்மாவுக்கு அது பிடிக்காமல் அவனை பேரனாக ஏற்றுக்கொள்கிறார் .
தன் மீது இருக்கும் களங்கத்தை போக்க சென்னைக்கு , அந்தப்பையனின் 
வேர்களைத்தேடிச்
செல்கிறார் மோகன்லால்.

சென்னையில் பழைய நண்பரைக்கண்டு பிடித்து விஷயத்திச்சொல்ல,
நண்பரோ, தான்தான் பையனிடம் மோகன்லாலின் பழைய போட்டோவைக்கொடுத்து , இவர்தான் உன் அப்பா என்று சொல்லி அனுப்பியதாகவும் சொல்கிறார்.

இனி flash back


படப்பிடிப்புக்காக துணை நடிகைகளை சப்ளை செய்யும் நண்பர் தவறான
உறவால் தாய்மை அடையும் ஒரு துணை நடிகைக்கு அடைக்கலம்
கொடுக்கிறார். அவரின்  உதவியோடு மகனை பள்ளி இறுதி வரை
படிக்க வைக்கிறாள் துணை நடிகை. ஒரு முறை படப்பிடிப்பில்
விபத்துக்கு ஆளாகி நடிகை இறக்க, இதைக்கேள்விப்படும் பையன்
மனமுடைந்து தற்கொலைக்கு முயல்கிறான்

அதை தடுக்கும் நண்பர் ' நீ அநாதை இல்லை. உனக்கொரு அப்பா இருக்கிறார். நீ அவரிடம் போ. என்று சொல்லி மோகன்லாலின் போட்டோவையும்  விலாசத்தையும் கொடுத்து விடுகிறார்

திகைக்கும் மோகன்லால் 'என் போட்டோவை கொடுத்து அவனை அனுப்பி
ஏன் என் நிம்மதியை கெடுத்தீர்கள் என்று கேட்க ' அவன் சின்னப்பையன்
தற்கொலை செய்யத்துணிந்த அவனுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்க
இதைத்தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை என்கிறார் நண்பர் .

சரி ஊருக்கு வந்து என் அம்மாவிடம் உண்மையை கூறுங்கள் என்று
அவரை அம்மாவிடம் அழைத்து வருகிறார் லால் .

இங்கு வந்தால் பையனைக்காணவில்லை. அம்மாவிடம் கேட்டபோது '
உனக்கு அவனை பிடிக்கவில்லை என்று மனம் நொந்து கிளம்பி  விட்டான்
என்கிறாள்.

நண்பருடன் ஸ்டேஷனுக்கு வந்து பார்க்கும் லால் பையன் தனியாக 
உட்கார்ந்திருப்பதைக்கண்டு சட்டென்று தோன்றும் ஒரு உணர்ச்சிப்பெருக்கோடு 
பையனை கட்டி அணைத்து 'நீ நீ என் மகன்தான்' என்று விதும்பலோடு
கூறுகிறார். இருவர் கண்களும் கலங்குகின்றன.

சாதாரண  கதை. தெளிவான இயக்கம்.

இசை இளையராஜா. பாடல்கள் எல்லாமே முத்து.

சிம்பிளான நிறைவான படம்.









  


வெள்ளி, 14 அக்டோபர், 2011

Rape-O

இப்படித்தான் அழைக்கத் தோன்றுகிறது இதை.

பண வீக்கம் கூடும்போது ரிசர்வ் வங்கி மேலாளர்களில் சிலர் சொட்டைத்
தலை பளீரிட முகமெல்லாம் பல்லாக, வட்டி விகித்தத்தை கால் சதவீதம்
கூட்டிவிட்டு காலாற நடந்து, ஏசி காரில் ஏறி போயே விடுவார்கள்.

Repoரிவர்ஸ் repo என்று கூறப் படும் வங்கிகளின்- பணப் பரிமாற்றங்களின் 
வட்டி விகிதக்கூடுதல், வீட்டுக் கடன், வாகனக் கடன், கோமணக் கடன் என்று
வாங்கிய  சாதாரண மக்களின் தலையில் தான் விழுகிறது.

கேட்டால் மற்ற வங்கிகள் சொல்வது 'ரிசர்வ் வங்கி எங்களை ரேப்பினால்
நாங்கள் வாடிக்கையாளர்கள் மீது தான் ரேப்ப முடியும்'. என்று.

சமீபத்தில் ஒரு தனியார் வங்கி வாடிக்கையாளர் முணு முணுத்துக் கொண்டே சொன்னது ' என்ர பணத்த என்ர காலால நடந்து வந்து என்ர
கணக்குல கட்டறதுக்கு சார்ஜ் கொடுக்கணுமாம்'.

மேலாளரிடம் கேட்டபோது ' இதுவும் அந்த 'ரேப்போ' வட்டி விகித கணக்கு
தான் சார். ஒரு மாதத்தில் 5 தடவை மட்டும் தான் சொந்த சேமிப்பு
கணக்கில் பணம் கட்ட அனுமதி. அதற்கு மேல் கட்ட வேண்டும் என்றால்
தனி சார்ஜ் கொடுக்க வேண்டும். ரிசர்வ் வங்கி இப்படி வட்டி விகிதத்தை 
கூட்டி கொண்டே சென்றால் நாங்கள் எங்கு போவது? சமாளிக்க வேண்டாமா ?
கூடிய விரைவில் எல்லா வங்கிகளும் எங்கள் வழியை பின்பற்றும்,
பாருங்கள்' என்றார்.

அதென்னவோ எல்லா வியாழக்கிழமையும் இந்த மாதிரி கால் சதவீதம்
பயமுறுத்தல்   தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.