வெள்ளி, 30 செப்டம்பர், 2011

'ழ'

தமிழுக்கே உரிய எழுத்து, சொல் எனலாம். தமிழர்களில் எத்தனை பேர் ழ வை சரியாக உச்சரிக்கிறார்கள்?
ஒரு  ஐம்பது விழுக்காடு தமிழர்கள் கூட 'ழ' சரியாக உச்சரிப்பது கிடையாது.

பள்ளிகளில் தமிழாசிரியர்களில் பலபேர் இன்னமும் 'வாளப்பளம்' கேஸ்தான். இதற்காக  நாம் வெட்கப்படவேண்டும். தமிழ் மொழியின் அழகே
'ழ' உச்சரிப்பில்தான் இருக்கிறது. குழந்தைகளுக்கு இப்போதே 'ழ; உச்சரிப்பை
சரியாகச்சொல்ல கற்றுக்கொடுக்க வேண்டும்.

அன்று தமிழ் சினிமாவில் நடித்த எல்லோருமே 'ழ வை அழகாக உச்சரிப்பார்கள். நாடகப்பயிற்சி அவர்களுக்கு உச்சரிப்பு செம்மையைக்கொடுத்தது. தெலுங்கை தாய் மொழியாகக்கொண்ட ரங்காராவ், நாகையா, அஞ்சலிதேவி, சாவித்திரி போன்ற பலர் தமிழை அழகாக உச்சரித்தார்கள். ஏன்? பாடகர்களில்  பி.சுசீலா, எஸ்.ஜானகி, எஸ்.பி.பி.
போன்றோரின் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு அருமையாக இருக்கும்.

அவர்களும் தெலுங்கை தாய் மொழியாகக்கொண்டவர்கள்தான். எனில் தமிழர்களாகிய நம்மில் பலபேர் தமிழ் உச்சரிப்பில் அக்கறை கொள்வதில்லை. 'ழ' உச்சரிப்பு மட்டுமல்ல. வல்லினம், மெல்லின உச்சரிப்புக்கள் கூட சரியாக இருப்பதில்லை. இளைய தலைமுறையினரில்
பலபேர் 'ல' வுக்கும் 'ள' வுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார்கள்.

ஒரு மொழியின் சுகமே அழகான உச்சரிப்பில்தான் இருக்கிறது. உங்களுக்குத்தெரியுமா? மலையாளிகள் அவர்களின் மொழியை மிக அழகாகக்  கையாள்வார்கள். குறிப்பாக 'ழ' வை அனைத்து தரப்பு
மக்களும் சரியாக உச்சரிப்பார்கள். சிறு குழந்தைகள் உட்பட.

நம்மவர்களுக்கு உச்சரிப்பு ஒரு விஷயமே அல்ல. நாம் சிந்திக்க வேண்டும்.
நம் மொழியை நாமே அலட்சியப்படுத்தக்கூடாது.

'செந்தமிழும் நாப்பழக்கம்' 


வியாழன், 29 செப்டம்பர், 2011

adimai

அடிமைத்தனம் யாருக்குமே பிடிக்காது. அடிமை என்ற சொல்லே வெறுக்கத்தக்கது. அன்புக்கு அடிமை என்பது சரியா? பின்னாளில் பல இன்னல்களை வரவழைக்கும் அது. அன்பை - பகிர்ந்து கொள்ளத்தக்க ஒன்றாக கருதலாமே ஒழிய அடிமைப்படுத்தும் விதமாக நினைக்கக்கூடாது.

அன்பு ஆசையின் அடிப்படையில் எழுவது என்று சிலர் கூறுகிறார்கள்.
ஆசை + அன்பு = அடிமை.

எந்த விஷயத்தின் மீதும் ஆசை ஏற்படும்போதும் கூடவே அன்பும் ஏற்படும். அது கடைசியில் கண்மூடித்தனமான அடிமை உணர்வில் கொண்டு சேர்த்துவிடும்.

அது இல்லாமல் அல் அவள், அவன் இல்லாமல் வாழவே முடியாது என்ற
நிலைமையில் மனது தானாகவே அடிமைப்பட்டு விடும்.

இன்றைய இளைஞர்கள் சினிமா நடிகர்கள் மீது வைத்திருப்பது அன்பா? ஆசையா?

கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்வது சூடம் காட்டுவது, அலகு குத்துவது,
வெறி பிடித்தாற்போல் துள்ளுவது இதெல்லாம் எந்த ரகத்தில் சேர்த்தி?

நடிகர்களின் நடிப்பை ரசிப்பதுடன் நிறுத்திக்கொள்ளவேண்டும்.
அவர்கள் சொல்வதில் செய்து காட்டுவதில் நல்லவிஷயங்கள் இருந்தால்
ஏற்றுக்கொள்வதில் தவறில்லை.

ஆனால் கண்மூடித்தனமாக துள்ளாட்டம் போடுவது அடிமைத்தனத்தில்தான் கொண்டு சேர்க்கும். அது அவர்களின் வாழ்க்கையையே பாதிக்கும்.
புரிந்து கொண்டால் நல்லது .

திங்கள், 26 செப்டம்பர், 2011

தாமிரபரணி: vettiyobhanishath 2

தாமிரபரணி: vettiyobhanishath 2: மீண்டும் வேட்டி புராணம். வேட்டி தென்னிந்தியாவுக்கு உரித்தானது என்றாலும் தமிழகம், கேரளம், கர்நாடகா இம்மூன்று மாநிலங்களில்தான் அதிகமாக உபயோகி...

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

வேட்டியோபநிஷத் 2

மீண்டும் வேட்டி புராணம். வேட்டி தென்னிந்தியாவுக்கு உரித்தானது என்றாலும் தமிழகம், கேரளம், கர்நாடகா இம்மூன்று மாநிலங்களில்தான் அதிகமாக  உபயோகிக்கின்றனர். ஆந்திராவில் கூடுதலும் பஞ்சக்கச்சம் முறைதான்.
அன்று தமிழ் சினிமாவில் எம்ஜியார் வேட்டி கட்டி நடித்த படங்கள் கருப்பு வெள்ளையில் அதிகம் என்றாலும் கலருக்கு மாறியபின் சற்று குறைவே எனலாம். ஏதோ தங்கச்சி, அம்மா என்று வீட்டில் பாசமுடன் பழகும்போது வேட்டியில் இருக்கும் அவர், அடுத்து காதலியை பார்க்கும்போதும், அதற்கு அடுத்த சண்டைக்காட்சிகளுக்கும் பாண்டுக்கு மாறியிருப்பார்.
மலையாளப்படங்களில் அனைத்து ஹீரோக்களும் அன்று வேட்டியில்தான்
உலா வருவார்கள். பான்ட் அபூர்வம்தான்.
வேட்டி கட்டிய ஹீரோக்கள் வயல் வெளியிலோ நதிக்கரையிலோ ஹீரோயினுடன் யேசுதாஸ் குரலில் பாடியபடியே செல்லும் காட்சிகள்
முக்கால்வாசி எல்லாப்படங்களிலும் இருக்கும்.
பிரேம் நசீர், மது போன்ற பல ஹீரோக்கள் ஜெயபாரதியுடன் பாடிச்செல்லும் காட்சிகள் நிறையவே இடம் பெறும்.
இந்த இடத்தில் ஜெயபாரதியைப்பற்றி ஒரு வார்த்தை.
தன்னுடன் நடிக்கும் எல்லா ஹீரோக்களுடனும் காதல் காட்சிகளில் ஜெயபாரதி மிக அழகாக இழைந்து இணைந்து மிக நெருக்கமாக நடிப்பார்.
அவர் கண்களிலும் முகத்திலும்  தெரியும் அந்த காதல்காம உணர்ச்சியை இன்று வரை வேறு எந்த நடிகையும் காட்டியதாக நினைவில்லை .
படம் பார்க்கும் ஒவ்வொரு ஆண் மகனையும் 'நட்டு' வனாராக்கும் திறமை
அவர் ஏற்றிருந்த கதாபத்திரங்களுக்கு இருந்தது.
வாடகைக்கு ஒரு ஹ்ருதயம், ரதிநிர்வேதம் போன்ற பல படங்கள் இதற்கு உதாரணம்.
படம் பார்த்து வெளியே வரும் ஒவ்வொருத்தனும் பேய் அறைஞ்சா மாதிரி
வெளியே வருவான். இரண்டு மூன்று நாட்களுக்கு ஒன்றுமே ஓடாது. கூடவே 
வரும்.
அன்று மலையாளத்தில் வேட்டி கட்டிய கதை, கதாபத்திரங்களுக்கு இணையாக 
ஜெயபாரதியின் பாத்திர அமைப்பும் அருமையாக இருந்தன.
இன்றும்  மோகன்லால் மம்மூட்டி போன்ற நடிகர்கள் வேட்டி கட்டும் கதா பாத்திரங்களில் நிறையவே நடிக்கிறார்கள்.
புது முக நாயகர்களான ப்ரித்விராஜ் திலீப் போன்ற இளைய தலைமுறை
நடிகர்களும் வேட்டியுடன் வரும் கேரக்டர்கள் நிறையவே பண்ணுகிறார்கள்.
தமிழில்தான் வேட்டிக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான பாத்திர அமைப்பு அவர்களுக்கு ஏற்படவில்லையோ அல்லது அவர்களுக்கு பிடிக்கவில்லையோ தெரியவில்லை.
கேரளாவில் இன்றும் இளைய தலைமுறைகள் வேட்டி உடுத்துகிறார்கள்.
அவர்களுக்கு அது பிடித்தமானதும் கூட.
இன்றைய தமிழக இளைஞர்கள் வேட்டியை கை விடாமல் இருந்தால் சரி.
சூப்பர் ஸ்டார் சொல்வது போல் 'நாங்க பழக வந்திருக்கோம்' என்று சொல்லிக்கொண்டே வேட்டியுடன் பழகுங்கள்
பழகினால் பிடித்துவிடும்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

வேட்டியோபநிஷத்

 வேட்டியோபாநிஷத் இதுதான் தலைப்பு
வேட்டி கட்டுவது என்பதையே இன்றைய இளைஞர்கள் மறந்து விட்டார்கள். வெளியே முழுப்பான்ட்  வீட்டில் முக்காப்பான்ட். இதுதான் நிலைமை.

வேட்டி என்பது ஆண்களின் அழகான உடை. தென்னிந்தியாவின் தனிப்பட்ட ஆடை எனலாம். தமிழ் திரைப்படங்களில் முன்பு வேட்டி கட்டும் கதாபாத்திரங்கள் நிறைய வந்தன.

குறிப்பாக சிவாஜி வேட்டி கட்டி நடிக்கும் படங்கள். எனக்குத்தெரிந்து வேட்டி கட்டி நடித்த கதா நாயகர்களில் சிவாஜி மாதிரி அழகாக நடித்தவர்கள் யாருமே இல்லை எனலாம்.

அவர் வேட்டி கட்டி நடந்து வரும் அழகே தனி. நானெல்லாம் வேட்டி கட்ட
கற்றுக்கொண்டதே சிவாஜியைப்பார்த்துத்தான்-ஏகலைவன் மாதிரி.
கருப்பு-வெள்ளை படங்களாகட்டும், கலராகட்டும்-அசத்தியிருப்பார்.

தில்லானா மோகனாம்பாள், சவாலே சமாளி, பாரத விலாஸ் போன்ற பல படங்கள் உதாரணம். வேட்டியையும் நடிக்க வைக்கும் திறமை அவருக்கே உரியது.

அப்படி ஒரு கலை நயத்தோடு வேட்டி கட்டுவார். தழையத்தழைய வேட்டி
கட்டும் அவருடைய பாணி மிகவும் ரசிக்கக்கூடிய ஒன்று.

இன்றைய கால கட்டத்தில் வேட்டி, வசதி இல்லாத ஒன்றாக இருக்கலாம்.
எனில் ஒன்று . வார இறுதி நாட்களில் வேட்டி கட்டிக்கொண்டு கோவிலுக்கோ உறவினர் வீட்டுக்கோ உங்களின் இளம்  மனைவியுடன் செல்லுங்கள். "பாத்தியா லட்ச்ச லட்சமா சம்பாதிக்கிறான் இந்த சின்ன வயசிலேயே வீடு கார் எல்லாம் வாங்கிட்டான். இருந்தாலும் வேட்டி கட்டிக்கிட்டு எவ்வளவு சிம்பிளா இருக்கான், பாத்தியா" என்று உறவினர்கள்
உங்களைப்பாராட்டலாம்.

காதலிக்கும் இளைஞர்கள் சிம்பிளாக வேட்டி கட்டிக்கொண்டு வளைய வாருங்கள். உங்கள் காதலியின் அபிமானத்தைப்பெறலாம்.

எல்லாவற்றையும் விட வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு பீச் பக்கம் காலாற நடந்து செல்லுங்கள். காற்றின் 'எல்லையில்லா' சஞ்சாரத்தை
இதமாக உணரலாம்.

திங்கள், 19 செப்டம்பர், 2011

எளிமை

எளிமை ஒரு நிம்மதியான விஷயம். தன் எளிமையால் உலகையே தன் பக்கம் ஈர்த்தவர் காந்திஜி. சூர்யன் அஸ்தமிக்காத ராஜ்ஜியம் என கொக்கரித்த வெள்ளைக்காரர்கள் எளிமையே உருவான காந்தியிடம் தோற்றுப்போனார்கள்.

அட்டன்பரோவின் காந்தி சினிமாவில் ஒரு காட்சி. குற்றம் சாட்டப்பட்ட காந்தி நீதிமன்றத்துக்குள் நுழைவார். கூண்டில் ஏறப்போகும் அவரைக்கண்டு
நீதிபதி மரியாதையுடன் எழுந்து நிற்பார். அதைப்பார்த்து அனைவரும் எழுந்து நிற்பார்கள்.

இது காந்தின் எளிமைக்கு கிடைத்த மரியாதை. ஏன்? அதற்கு முன்பு எளிமைக்கு மரியாதை இல்லையா?

புத்தனும், ஆதி சங்கரனும் ஏசுவும் மற்ற ஆன்மீகத்தலைவர்களும், எளிமையை போதித்தவர்கள் தான்.

எனினும் உலக அளவில் எளிமைக்கு காந்தியால் தான் மரியாதை கிடைத்தது.

பணம் பண்ணும் இன்றைய அவசர உலகம் எளிமையை மறுக்கிறது.
வாழ்வின் வசதிகளில் திகட்டத்திகட்ட சுகம் தேடி அலைகிறது.

தேவை இருக்கிறதோ  இல்லையோ எல்லாவற்றையும் வாங்கி வீட்டில் அடுக்கி விடவேண்டும். வீடு முழுவதும் குளிரூட்டப்படவேண்டும்.

ரயில் பயணங்களில் கூட குளிரூட்டப்பட்ட பெட்டிதான் வேண்டும்.
பிழைப்புக்காக பட்டணம் வருவோர் காசு பணம் நிறைய பார்த்தவுடன்,
கிராமத்தின் குல தெய்வ பூஜைக்கு சென்றாலும் அங்கு தங்குவதற்கு
குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதிதான் தேடுகிறார்கள்.

கேட்டால் அப்படியே பழகிவிட்டோம் என்கிறார்கள்.

வெயிலைப்பழகு, மழையைப்பழகு , இயற்கையான குளிர் காற்றைப்பழகு.

இவை ஆரோக்கியத்தை தரும். நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

இயற்கையோடு பழகினால் எளிமையைச்சொல்லித்தரும்.
இயல்பான வாழ்க்கையைச்சொல்லித்தரும்.






நதி

நதி என்பது உலகின் உயிரோட்டம். உலகம் தொடங்கிய நாள் முதல் நதிக்கரை வாழ்வுதான் நாகரீகத்தின் துவக்கம். வாழ்வாதாரத்தின் உணவு உற்பத்தி நதிக்கரையை சுற்றித்தான் இருந்தது, இருக்கிறது, 
நதியைப்பாதுகாக்கும் கடமை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது.
அதற்கான உறுதி மொழியை நினைவில் கொள்வது நல்லது.

மண்ணின் செழிப்பு, மக்களின் செழிப்பு. அதற்குத்துணை அரவணைத்துச்செல்லும் நதியே.