சனி, 1 டிசம்பர், 2012

பின்னோக்கி...........

அடிக்கடி கொஞ்சம் பின்னோக்கிச் செல்வது சுகமே!
நிகழ்வுகளில் கனவு மட்டுமே இதம்.
இப்போது கிடைத்ததை விட முன்பு 
உறுத்திய முட்கள் இன்று 
மலர்களெனத் தோன்றும்!

பழைய உறவுகள் இளமைத் தோழமைகள்-
இன்றளவும் சாகா வரம் பெற்று
பின் தொடரும் - நினைவில் மட்டும்!

மானிட இலக்கியத்தில் ஒவ்வொரு
அத்தியாயமும் புலம்பல் சுவையே!

நிரப்பப் படாத தாள்கள் மெதுவாக
முதுமையின் கைப்பிடித்து -
பின்னோக்கிப் பார்த்தவாறே.............







ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

மலை

மலைப்பான விஷயங்கள் வாழ்வில் பலமுறை நடக்கும்.
மலைகளைக் காணும்போதெல்லாம் மலைத்திருக்கிறேன் பலமுறை. அதன் அழகு, கம்பீரம் அமைதி என்னை மலைக்க வைத்திருக்கின்றன.இன்னமும்.
உண்மையில் மலைகள் மனிதனின் இயற்கையான வாழ்வுக்கு பெருமளவு துணை புரிகின்றன. காற்றையும் மேகங்களையும் தடுத்து மழை பொழிவிப்பதில் பெரும்பங்காற்றுகின்றன!

 இந்த மலைகளைத்தான் இன்று உடைத்து கிரானைட் கற்களாக்கி பண மலைகளை உருவாக்குகிறார்கள் பண முதலைகள்.
இதற்கு அரசு அதிகாரிகளும் துணை போவதாகக் கேள்வி!

என்று மனிதன் பிழைப்புக்காக கிராம வாழ்வைத் தொலைத்தானோ அன்றே இயற்கை வளங்களையும் கொஞ்சங் கொஞ்சமாகத் தொலைக்கத் தலைப்பட்டு விட்டான்.அவனுக்குத் தேவை செயற்கைச் சுகங்கள். அதை அடைய அதிக பணம் தேவை. அதற்கு இயற்கையைக் கொன்றாவது அவன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும்! ஆடம்பர வாழ்க்கை, துரித உணவு, குளிர்பதன சிற்றூர்தி, வெளிநாட்டு மோகம், எங்கு போவதாக இருந்தாலும்
முதுகில் ஏசியைச் சுமந்து செல்ல வேண்டும். இதற்கெல்லாம் சில பேருக்கு
எந்த வழியிலாவது பணம் ஈட்ட வேண்டும்.
உண்மையில் இப்படிப் பட்டவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு சொத்தைச் சேர்த்து வைக்கவில்லை. நஞ்சைத்தான் சேர்த்து வைக்கிறார்கள்.

இயற்கையை ஒதுக்கி வாழும் இப்படிப் பட்ட வாழ்வில் அவர்கள் வாரிசுகளை
நாளை இயற்கையே ஒதுக்கிவிடும். அதற்கு பெரும் விலை கொடுக்கும் நாள் வெகு தூரத்திலில்லை!





ஞாயிறு, 8 ஜூலை, 2012

புரிந்தபோது...

பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் - என்னை
ஆழமாகக் காதலித்ததாக ஒரு உண்மையைச் சொன்னாள் அவள்.

நான் அன்று போல் இன்றும் வெளிக்காட்டாமல்
மௌனமாகவே......

அவள் கையில் இருந்த குழந்தை என்னிடம் தாவியது.
கேட்டபோது நவின்றாள்.

--- பேரனாம்.........


புதன், 13 ஜூன், 2012

ஆங்காங்கிலம்

அந்த மொழியை இணைப்பு மொழி என்கிறார்கள்
எதை எதை இணைக்க என்றுதான் தெரியவில்லை

அந்த மொழியை இங்கே கொண்டு வந்தவர்கள் -
பிரித்தாளும் பிரித்தானியச் சூழ்ச்சியைத்தானே
விதைத்தார்கள்

கற்றுக்கொண்டவர்கள் தங்களை உயர்நிலை வேந்தனாகக் -
காட்டிக் கொண்டார்கள்
திகைத்து நின்றவனை பாமரன் என்றழைத்து -
பிரித்துப் பார்த்தார்கள்.
எதை எதை இணைத்தார்கள் என்று இன்னும்
தெரியவில்லை

பிரித்துப் பேதம் பார்க்கும் ஒரு மொழியை - இணைப்பு மொழி
என்பதன் நோக்கம் என்னவென்றே இன்னமும் -
புரியவேயில்லை!அ

சனி, 9 ஜூன், 2012

குழப்பம்

பேரமைதி எது என்று தெரியவில்லை - மிக
அதிக ஓசையின் நடுவே இருப்பதா பேரமைதி?

நாக்கைக் கிழிக்கும் சுவை எப்படியிருக்கும்
என்று தெரியவில்லை - சுவையறியா மையப்புள்ளியிலா அது?

மையிருட்டின் ஆழமும் விளங்கவில்லை - பேரொளியின்
உச்ச நிலை தாக்கமா அது?

வெறுப்பின் தீவீரமும், காதலின் முள் வேதனையும் -அன்பின்
மூர்க்கமும் எதிரெதிர் குணங்களாகத்தான் என்றுமே
வெளிப்படுகின்றன!


வெள்ளி, 8 ஜூன், 2012

மனம்

என்னவெல்லாம் சொல்கிறது இந்த மனசு
நினத்தால் பாவம் என்கிறது - நினைக்காவிட்டால்
ஏக்கம் என்கிறது

தானே எடுக்கும் முடிவுகள் என்றுமே பாரம்தான்
என்கிறது.

சரி! சொல்லித்தான் தாயேன் என்றால்-
அது என் வேலை அல்ல என்கிறது!

எனக்குரிய வேலை விமர்சனம் மட்டுமே என்றபடியே -
தூங்கச் சொன்றது அது.

நான் கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டேயிருந்தேன்
என் வேலை அதுவேயென!

புதன், 23 மே, 2012

தவிர்க்க முடியாதது

காரணங்கள் காரணமின்றியே அலைக்கழிக்கும்!
ஈர்ப்பு - இது ஒன்றுதான் பிரதானம்!
விஷயங்கள் தாக்கும்போது எண்ணங்கள் ஓய்வெடுப்பதில்லை!
விளைவுகளைப் பற்றி யோசிக்கவும் நேரமில்லை!

தனக்குள் சுரப்பதை வெளிக்கொணர முயற்சி தேவையேயில்லை!
உந்துதலே பல்லக்குத் தூக்கும்!

தாக்கப்படும்போது தடுப்பது அறிவீனம் - தானே கிடைப்பதை
தள்ளி விடுவதும் பலவீனம்!
தொடங்கியபின் தோரணம் கட்டுவதே சுகம்!


ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

வெளிநாடு

திரைகடலோடி திரவியம் தேடு. நல்ல விஷயம்தான்.அப்படித்தேடாதவர்கள்
தேட இயலாதவர்கள், என்ன பாவம் செய்தார்கள்? சமூகத்தில் அவர்களை கீழான பார்வையோடு அளப்பவர்களை என்ன செய்வது? முக்கியமாக கல்யாணச் சந்தையில். அதிலும் பெண்ணைப் பெற்றவர்கள் தனக்கு வரும் மாப்பிள்ளை கண்டிப்பாக வெளிநாட்டில் வேலை செய்பவராக இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதுதான் வேடிக்கை. கை நிறைய சம்பாதிக்கும் உள்ளூர் மாப்பிள்ளை இவர்களைப் பொறுத்தவரை சொத்தைதான். வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைத்தால் அவர்களுக்கும் வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைக்குமே! பிறகு கொம்பு முளைத்த தலையோடு சொந்தக்காரர்களிடம் சொல்லிச்சொல்லி கும்மியடிக்கலாமே என்ற தணியாத ஆசைதான்!

உள்ளூர் மாப்பிள்ளையை ஒதுக்குவதன் மூலம் ஒருவேளை வேறுபல இனிமையான, நிம்மதியான வாழ்க்கை சந்தர்ப்பங்களை உங்கள் பெண்ணுக்கு கிடைக்க விடாமல் நீங்கள் தடுக்கிறீர்கள் என்பதுதான் உண்மை!

http://subramanian-thamirabharani.blogspot.com/

சனி, 3 மார்ச், 2012

தொடர்பு

ஒன்றுக்கொன்று தொடர்பான விஷயங்கள்தான் நம்மிடையே
இரத்தத்தில் ஆரம்பித்து இலக்கியம் வரை.

பசியிலிருந்து உணவுவரை
இருளிலிருந்து விடியல்வரை - எனினும்

நிரந்தரமில்லாதவைக்குத்தான் அடித்துக்கொள்கிறோம்
கடைசிவரை.

http://subramanian-thamirabharani.blogspot.com/

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

உரிமை

உழைப்பதைப் பற்றி கவலையில்லை
வேலை நிறுத்தம் ஒன்றே எங்கள் உரிமை

நாட்டின் நலம்/யாருக்கு வேண்டும் அது
சரி உன் குடும்ப நலம்-அது பாட்டுக்கு நடக்கும்!

எப்படி?

அதை கட்சி பார்த்துக்கொள்ளும்
அது உனக்கு- மற்றவர்களின் நிலை?

அது எங்களுக்கு விஷயமில்லை-மேலும் அது
அவர்களின் கவலை.

நீங்கள் வேலை செய்ய விட்டால்தானே?
-நாங்கள் கட்சித் தலைமைக்கு கட்டுப்படுகிறோம்

இப்படியே போனால் மக்களின் அன்றாட வாழ்வு?
நாங்கள் கட்சிக்காக வாழ்கிறோம்

சரி! இதற்கு என்னதான் முடிவு?
-வேலை நிறுத்தம் வாழ்க!

http://subramanian-thamirabharani.blogspot.com/


திங்கள், 20 பிப்ரவரி, 2012

நினைவலைகள்

விடுபட்டுப்போன உறவின் உயிர்த்துடிப்பை
நேற்று உணர முடிந்தது

அத்தனை அலைஓசைகளுக்கு மத்தியிலும்
தனியாக வந்து செவிப்பறையைத்
தட்டிய குரல்

நலம் விசாரிக்கத் தோன்றவில்லை-
நலமாகத் தோன்றியதால்

சுற்றிவளைத்துப் பேசினாலும்
மையக்கருத்தென்னமோ-
நாம் மட்டுமே

சூழ்நிலைத் தாக்கத்தால் வேறுபட்டிருந்தாலும்
காலவெள்ளம் கரைசேர்த்தது

-இனி ஒன்றாகிவிடுவோம் என்ற
நம்பிக்கையின் மிச்சத்துடன்--

http://subramanian-thamirabharani.blogspot.com/
20-02-2012   11.45pm

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

எழுத்தாளுமைகள்

கல்கி - வாசிப்பின் ஆரம்ப காலத்தில் என்னை மிகவும் கவர்ந்தவர் கல்கி.

அந்த சின்ன வயதிலேயே பொன்னியின் செல்வன் என்னை அந்த அளவுக்கு ஆக்கிரமித்திருந்தான். அன்று நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாக நினைவு. ஈடுபாடு என்னவோ வந்தியத்தேவனிடம்தான். அன்று அந்தப் புதினத்தைப் படித்துக் கொண்டிருந்தவர்கள் அனைவருமே சரித்திர காலத்தில்தான் உழன்றார்கள்.
உண்மையைச் சொல்லப்போனால் நிகழ்காலமே யாருக்கும் பிடிக்கவில்லை. அப்படி ஒரு ஈர்ப்பு பொன்னியின் செல்வனில்.

பின்னர் தேடல் முழுவதும் சரித்திரக்கதைகளாகவே இருந்தன. அப்படித்தான் கல்கிக்குப் பிறகு சாண்டில்யன் நுழைந்தார். அது வேறு ஒரு உலகம். அவரின் புதினங்களில் என்னைக் கவர்ந்தது யவனராணி. கல்கியின் அனைத்துப் படைப்புகளையும் ஒர் சுற்று சுற்றி விட்டுத்தான், சாண்டில்யனிடம் வந்தேன். கொஞ்ச நாட்கள் அவருடன் சுற்றிவிட்டுத் திரும்பினால் அதோ வருகிறார் சுஜாதா.

நவீன உலகத்துக்கு அத்தனை வாசகர்களையும் சடுதியில் அழைத்துச் சென்றவர் அவர். கடைசி வரை அத்தனை பேரையும் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்.

பிறகு ஜெயகாந்தன், அரு. ராமநாதன்,நா.பார்த்தசாரதி,கிவா,லா.சா.ராமாமிருதம், இந்திரா பா.சாரதி, கோவி, அசோகமித்திரன், பாலமுருகன் இன்னும் விடுபட்ட பலபேர்களுடனும் அளவளாவிக் கொண்டிருக்கும்போது விடிவெள்ளி போல தென்பட்டார் தி. ஜானகிராமன்.

ஆற்றொழுக்கு போல மனதை தடவிவிடுவது போல ஒரு எழுத்து அவருடையது. அவரின் அம்மா வந்தாளில் விழுந்தவன்தான். இன்னமும் அவரின் எழுத்தாளுமையிலிருந்து நான் மீளவேயில்லை. மீளவும் விரும்பவில்லை. எத்தனை மீள் வாசிப்பு நடத்தியும் அதன் புதுமை குறைவதேயில்லை. அவரின் சிறுகதைகளுக்காக ஒரு தனிக்கட்டுரையே எழுதலாம்

புதுமைப்பித்தனின் எழுத்தாளுமைக்கும் ஒரு தனி வசீகரம் உண்டு.

விடுபட்ட எழுத்தாளுமைகள் நிறைய உண்டு.

முத்தாய்ப்பாக சு.ரா.     ஜே.ஜே. சில குறிப்புகள், ஒரு புளியமரத்தின் கதை,
மற்றும் அவரின் சிறுகதைகள்,கட்டுரைகள்--அனைத்தும் கல்வெட்டுக்கள்.

http://subramanian-thamirabharani.blogspot.com/
date 15/01/2012    01-35p.m

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

தாமிரபரணி

தாமிரபரணியை நான் மிகவும் நேசிக்கிறேன்
என் சொந்த ஊரான கல்லிடையை அரவணைத்துச்செல்லும் நதி அது.

பொதிகையில் உற்பத்தியாகி பாபநாசம், விகேபுரம்வழி, அம்பை-கல்லிடையூடாகப் பாய்ந்து, வீரவநல்லூர், சேரன்மாதேவி,நெல்லை கடந்து
கருங்குளம், ஸ்ரீ வைகுண்டம் தாண்டி கடலை அடைகிறது.

செல்லும் வழியெல்லாம் பசுமையை விதைத்து வளம் பெறச்செய்கிறது


கல்லிடை என் பாட்டனார், தகப்பனார் ஊர்.

கருங்குளம் என் தாயாரின் ஊர்.

தாமிரபரணியின் தண்ணீர் குடித்து வளர்ந்தவர்கள்

என் உடம்பில் ஓடுவது தாமிரபரணி ரத்தம்

நான் மட்டுமல்ல, தாமிரபரணி நதிக்கரையில் பிறந்து வளர்ந்த
அனைத்து மக்களும் அப்படித்தான்.

காவேரியை சொந்தம் கண்டாட ஒருவர், இப்போது பெரியாரை சொந்தம் கொண்டாட வேறொருவர். எனில்,

தமிழகத்திலேயே உற்பத்தியாகி தமிழ் மண்ணிலேயே ஓடி,
தமிழ் நாட்டு கடலில் கலக்கும் ஒரே நதி தாமிரபரணி என்பேன்.

இன்றும் எழுபதுகளை கடந்த முதியவர்கள் கூட அதிகாலை தாமிரபரணியில்
குளிப்பதைக்காணலாம்.

அவர்களின் ஆரோக்கியமே அதுதான். மூலிகையின் அம்சங்களுடன்
மருத்துவ குணம் கலந்து பாய்ந்து வரும்  நதி அது.

நதிக்கரை வாழ்வு அற்புதமானது. அங்கு  வாழ்பவர்கள் வரம் வாங்கி
வந்தவர்கள்.

நதியை நேசிப்பவன், நாட்டை, மக்களை நேசிப்பவன், மொழியை நேசிப்பவன்

நெல்லை வாழ் தமிழ் மக்களே உங்கள் தாமிரபரணியை யாரும் மாசு
படுத்த அனுமதிக்காதீர்கள்.

உங்கள் உடம்பில் உயிர் ஓடுவதே தாமிரபரணி தண்ணீரால்தான்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

http://subramanian-thamirabharani.blogspot.com/

01/01/2012   11.22pm