திங்கள், 3 அக்டோபர், 2011

CHENNAI A FLASH BACK

60-70 து  காலகட்டம்.

அன்று சென்னை இன்றளவுக்கு பரபரப்பு இல்லாதது. எனினும் பாரிஸ் கார்னர். சென்ட்ரல், மவுன்ட் ரோடு லஸ் கார்னர் போன்றவை கொஞ்சம் பரபரப்பாகத்தான் இருந்தன.

சிட்டி லிமிட் என்பது தெற்கு  அடையார்,  வடக்கு  திருவொற்றியூர், மேற்கே பெரம்பூர், கிழக்கு கடல்.

பெரம்பூர் தாண்டி ஆவடி வரை சென்னைக்குள் இருப்பதாச்சொன்னாலும்,
கிராமச்சூழ்நிலைதான்.

அதிலும் ஆவடியை குட்டி கேரளா என்றே அழைப்பார்கள். மரங்கள் அடர்த்தியாக இருந்ததாலும், மலையாளிகள் அதிகமாக வசித்ததாலும்
அந்தப்பெயர்.

tank பாக்டரி போன்ற கம்பெனிகளில் அவர்கள்தான் அதிகம்.
பிறகு பாடியில் உள்ள கம்பெனிகளிலும்.

அன்று ரயில் என்பது கரி எஞ்சின்தான். பள்ளிக்குச்செல்பவர்களும், வேலைக்குச்செல்பவர்களும் என அன்றும் புறநகர் ரயில்களில் கூட்டம் அலை மோதும்.

ஆனால் தாம்பரம் ரூட்டில் மின்சார ரயில்தான்.

சென்னை மவுண்ட் ரோடில் தேவி தியேட்டர் வந்தது 70 களின் ஆரம்பத்தில். (நினைவூட்டலுக்கு ஜாக்கி சேகருக்கு நன்றி)

ரிக்ஷாக்காரன் ரிலீசான நேரம். எல்லோரும் தேவி தியேட்டரைப்பற்றியே
பேசிக்கொண்டிருப்பார்கள். ' படம் பார்த்தா அந்த தியட்டரில் பாக்கணும்
ஒவ்வொரு சீட்டிக்கு பின்னாடியும் சின்னதா ஸ்பீக்கர் வெச்சிருக்கான். அவனவன் அலறராண்டா' என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள்.

தியேட்டரின் முகப்பை பார்த்தவுடனே ' எம்பூட்டு பெருசு 'என்று தோன்றியது. டிக்கட் ரேட்டைப்பார்த்ததும் ஒரு கிலி. அன்று புறநகர் பகுதிகளில் பால்கனியே 2 ரூபாய்தான்.

இங்கு 2.90 மற்றும்  4 ரூபாய் என்றதும் பயமாகத்தான் இருந்தது.

அப்போது ஒரு ரூபாய் இருந்தால் 5 இட்லி ஒரு பெரிய தோசை, ஒரு காபி
என்று சாப்பிட்டாலும் 20 பைசா திருப்பிக்கிடைக்கும்.

அந்த சரிவான பாதையின் வழியே மேலேறிச்செல்லும்போதே சந்தோஷமாக இருந்தது. உள்ளே நுழைந்ததும் பிரமிப்பாகத்தான் இருந்தது.
மங்கிய வெளிச்சம். இதமான குளிர். ( அப்போதுதான் முதன் முதலாக a/c
உணர்கிறேன்)

சீட்டுக்குப்பின்னால் தேடிப்பார்த்தேன். ஸ்பீக்கர் ஒன்றும் இருப்பதாகத்தெரியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தவுடன் புரிந்தது. புள்ளிக்கோலம் போல வட்ட வட்டமாகத்தெரிந்ததுதான் ஸ்பீக்கர் என்றும், நீளமாக கோடு கோடாக போட்டிருந்ததுதான் a/c என்றும் புரிந்தது. (அப்போது எனக்கு வயது 14. )

இதன் அடுத்த பகுதி உடனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக