வெள்ளி, 17 ஜூன், 2016

இணக்கம்

பிணக்கத்துக்கு முன்னால்
இருந்தது

பின்னால் தானே வருவது
அல்லது வரவழைப்பது

பிணக்கத்துக்குப் பின்
வரும் இணக்கம் -
சுணக்கமின்றி கிடைப்பது

இணக்கத்துக்காகத்தான்
வணக்கமே!

ஞாயிறு, 12 ஜூன், 2016

சம்மதம்

சில நேரங்களில் மட்டுமே
சம்மதம் முழுமையாகிறது

மிதமான சம்மதம் மட்டுமே
பல கருத்துக்களில்....

திணிக்கப்படும் சம்மதம்
மதம் பிடிக்க வைத்துவிடுகிறது

எம்மதமாயினும்
சம்மதம் முக்கியம்

முக்கியமான சம்மதம்
எம்மதத்தையும்
காயப்படுத்துவதில்லை

மதமில்லா மனதே
மிதமான பூரண

சம்மதம்!

திங்கள், 6 ஜூன், 2016

இருவர்

பாதிப்பேர் கூத்தாடிகள்
மீதிப்பேர் பார்வையாளர்கள்

அவர்களால் சூழ்ந்த உலகமிது
அபூர்வ சந்தர்ப்பங்களில்
இவை இடம் மாறலாம்

கூத்தாடிகள் பொறுப்பைச்
சுமப்பது போல் நடிப்பவர்கள்

பார்வையாளர்களும் வேடிக்கை
பார்ப்பது போல் நடிப்பவர்கள்

இருவரும் ஏதோ ஒரு விதத்தில்
கூத்தாடிப் பார்வையாளர்களே!


சனி, 4 ஜூன், 2016

நல்ல யோசனை

அத்தனை யோசனைகளும்
ஏதோ ஒரு பேர் தெரியாத
யோசனைக்குள்
புகுந்து விட்டது

அதை மீட்டெடுக்க
மீள் யோசனையின்
சுவடொற்றினேன்

ஒற்றிய சுவடின் யோசனையில்
உதித்ததொரு யோசனை -

இனி யோசனையேயின்றி
இருக்க!



வியாழன், 2 ஜூன், 2016

புரிதல்

எதுவும் புரியாமலிருப்பதே
சுகம்

புரிந்தால் சுமையாகிவிடும்
சுமைகள் புரியாமலிருப்பது
லேசாக இருப்பதின்
துல்லியம்

சுமை அடையாளமல்ல
அது தேவையுமல்ல

இருந்தும் சுமைகளால்
மட்டுமே வடிவமைக்கப்பட்ட
வாழ்க்கை

அதைப் புரிந்து கொள்ளச்
சென்றால் ஏறிக் கொள்ளும்
பாரம்

வெறும் பார்வை
பாரத்துடன்
கட்டமைக்கப் படுவதும்

ஏதோ ஒரு
விதத்தில்
சுமையே!

செவ்வாய், 31 மே, 2016

நவ ரசம்

ஒவ்வொரு கணமும்
உரசிச் செல்லும்
பயங்கள் -
ஏதோ ஒரு விதத்தில்

உள்ளிலும் வெளியிலுமாய்
சுற்றித் திரிவதொன்றே என
கண் கட்டும்

ஆற்றொணா நினைவழுத்தல்கள்
தொக்கி நிற்பதும் - வேற்றுணர்வின்றி
வேராய் ஓடுவதும் நாராசமெனினும்

அது ஏனோ நவரசமும் கலந்தது!

சனி, 28 மே, 2016

அப்படித்தான்.....

பின் தொடர்வதெல்லாம்
பின்னலாகத்தான் தோன்றும்

எதற்கும் கலங்காத உள்ளம்
என்பது நடிப்பன்றி
வேறொன்றுமில்லை

நிறைவு என்பது 
நாள் பட்டுப் போகும்போது
சோர்ந்துவிடும் ஒன்று

விரைவில் தீர்மானிக்கப்படலாம்
அரைமனதாகத்தான்
செயலாற்ற வேண்டுமென்று

தொடங்கும்போதே
தப்பித்துக் கொள்ளும்
எண்ணமே மேலோங்கும்
எதிலும்!