வெள்ளி, 30 டிசம்பர், 2011

கல் தெய்வங்கள்

கல் தெய்வங்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்

அவை அசையாச்
சொத்துக்கள்

முட்டினாலும்
மோதினாலும்
அழுதாலும்
கனியாது

திட்டினாலும்
அடித்தாலும்
இரங்காது

சுனாமி புயல்
வந்து அழிந்தாலும்
அழியாது

குற்ற உணர்ச்சியால்
மன்னிப்பு கேட்டாலும்
கிடைக்காது

தப்பித் தவறி
நன்மை நிகழ்ந்து
கண்ணீர் மல்க
நன்றி கூறினாலும்
ஏற்காது

ஊட்டினாலும்
உண்ணாது

கொடுத்தாலும்
வாங்காது

வெறுத்தாலும்
விடாது

இருந்தும்
கல் தெய்வங்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்

அவை அசையாச்
சொத்துக்கள்


சனி, 17 டிசம்பர், 2011

ஒன்றுமில்லை

ஒன்றுமில்லை

கூடங்குளமானாலும்
முல்லைப்பெரியாரானாலும்

2 ஜி ஆனாலும்
வரப்போகும்
3 ஜி 4 ஜி 5 ஜியானாலும்

பெத்த

ஊழலேயானாலும்
தமிழ் மக்களின்
உறவே போனாலும்

எப்போதும்
ஆட்சியாளர்களுக்கு

ஒன்றுமில்லை

http://subramanian-thamirabharani.blogspot.com/

18/12/2011   1pm

வெள்ளி, 9 டிசம்பர், 2011

இணைப்பு

இணைப்பு

ஒன்றோடுன்று இணைவது சுகம்


நாடுகள் இணைவதும் பலம்
புல்லுருவிகள்
தடையிடாவிட்டால்

இணைப்பு அறிவை வளர்க்கும்
பெருமளவில்
புரிந்து கொண்டால்

நதியிணைப்பு தாகம் தீர்க்கும்
பின்
பசியைப்போக்கும்
தலை முறைகளாய்

நாடாள்பவர் இணைந்தால்
மக்கள் நலம்

மேலும் சொல்வதற்கு
ஒன்றுமில்லை

ஒன்றோடொன்று இணைவது சுகம்


09/12/2011  6.55pm

செவ்வாய், 6 டிசம்பர், 2011

அணை - கட்டு

அணை - கட்டு

முல்லைப்பெரியார் பிரச்சனையை இந்த அளவுக்கு பெரிதாக்கியதே கேரள
அமைச்சர்களும், ஊடகங்களும் தான்.

செய்தி ஊடகங்களின் சமீபத்திய போக்கும் அப்படித்தான் இருக்கின்றன.
அரை மணி நேர செய்தி வாசிப்பில் 25 நிமிடங்கள் அணைக்கட்டைப்பற்றியே இருக்கின்றன.

முதலில் இம்மாதிரியான பயமுறுத்தல் நடவடிக்கைகளுக்கு அணை - கட்டவேண்டும். சுமுகமான தீர்வுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி யோசித்து இரு மாநில மக்களுக்கும் தேவையான
நன்மைகள் கிடைக்கும்படிச்செய்ய வேண்டும்.

அதை விடுத்து வன்முறையை கட்டவிழ்த்து விடுவது போன்ற அறிக்கைகளுக்கும், செய்தி வாசிப்புகளுக்கும் அணை - கட்டுவதுதான்
சிறந்தது என்று தோன்றுகிறது.

6/12/2011  7-11pm.

http://subramanian-thamirabharani.blogspot.com/

சனி, 26 நவம்பர், 2011

பயம்

பயம்

அத்துடன் அலட்சியம். இரு மாநிலங்களுக்கிடையேயான புரிதலில்லாத
ஒரு விஷயமாக முல்லைப்பெரியார் பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறது.

சமீப காலமாக அடிக்கடி உண்டாகும் சிறு சிறு பூமி அதிர்வுகள், எப்போது
பெரிதாகுமோ என்று கவலைப்படும் கேரளம். தண்ணீர் கிடைக்காதோ
என்று ஆதங்கப்படும் தமிழகம்.

பழைய அணைக்கட்டின் பலவீனம் - அது எங்காவது பூமி அதிர்வினால்
உடைந்தால் பல லட்சம் உயிர்கள் பலியாகுமே என்ற கேரளத்தின்
கவலையில் நியாயமில்லை என்று சொல்ல முடியாது.

அதே நேரத்தில் புதிய அணைக்கட்டு நிர்மாணித்தால் தங்களுக்கு தண்ணீர்
கிடைக்காமல் போய்விடுமோ என்ற தமிழகத்தின் சந்தேகத்தையும்
குறை கூற முடியாது.

உடனடியாக மத்திய அரசு இரு மாநில முதல்வர்களையும், மற்றும்
முதன்மையான பொறியியல் வல்லுனர்களையும் அவர்களோடு
உன்னத நீதிமான்களையும் சேர்த்து போர்க்கால அடிப்படையில்
ஆலோசனை நடத்த வேண்டும்.

காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லாமல் திறந்த மனதுடன் மக்களின்
நலனுக்காக (நம் இந்திய மக்கள் ) என்ற நினைப்புடன் பேச்சு
வார்த்தை நடத்தவேண்டும்.

கண்டிப்பாக ஒரு நல்ல முடிவு கிடைக்கும். மக்களின் பயத்தையும்
சந்தேகத்தையும் போக்குவது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

என் பூமி, என் தண்ணீர், என்றெல்லாம் வித்தியாசம் பார்க்காமல்
நம் மக்களின் வாழ்வு என்ற  எண்ணத்துடன் செயல் பட்டால்
நிச்சயமாக ஒரு விடிவு கிடைக்கும்.

அரசியல் உள் நோக்கம் எல்லாம் தேவையேயில்லை. மக்களிடம் வித்தியாசம் பார்க்காமல் அவர்களுக்காக நல்லதைச்செய்யும்
அரசியல்வாதிகளுக்கு என்றும் தோல்வியில்லை.

முதலில் நம் இந்திய மக்கள் என்ற நினைப்பு வரவேண்டும். மாநிலப்பிரிவினைகள் நமக்குள் தேவையில்லை.

பயம், சந்தேகமில்லாத வாழ்க்கை, மக்களுக்கு இதற்கான அடித்தளம் அமைய
இரு மாநில முதல்வர்களும் முயன்றால் அது சரித்திரத்தில் ஒரு பொன்
எழுத்துக்களாக பொறிக்கப்படும்.

http://subramanian-thamirabharani.blogspot.com/

Date 27/11/2011 - 1.11pm



வெள்ளி, 25 நவம்பர், 2011

Dam 999

வெறும் மொக்கைப்படம்.

கொஞ்ச நாள் வெளி நாட்டில் வாழ்ந்தால் அரை நிக்கர் போட்டுக்கொண்டு
ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் பண்ணிப்பணம்  பார்க்கலாம் என்ற ஆசை
போலிருக்கிறது இயக்குனருக்கு. லோக்கல் சினிமா ரேஞ்சுக்கு கூட
படத்தின் தரம் உயரவில்லை.

திரைக்கதையில் ஆயிரம் ஓட்டைகள். தமிழ், ஹிந்தி  நடிக நடிகர்களுடன்
ஒரு சில வெள்ளைக்காரர்களும் இருந்தால் ஹாலிவுட் தரம் கிடைத்து
விடும் என்று தப்புக்கணக்கு போட்டு, இயக்குனர் சூடு போட்டுக்கொண்டதுதான் மிச்சம்.

கேரளாவின் உள் கிராமத்தில் உள்ளவர்களும், பரம்பரையாக குடியிருப்பவர்களும் ஆங்கிலத்திலேயே  பேசிக்கொள்வது சரியான காமெடி.
நடு நடுவே ஒரு ஹிந்திப்பாடல் ஒரு தாலாட்டுப்பாடல் மலையாளத்தில்-
என்றெல்லாம் இடைச்செருகல் வேறு. சகிக்கவில்லை.

ஜோசியத்தை நம்பி காதலித்த பெண் கைவிட எங்கோ அலைந்து திரிந்து
ஒரு திருமணத்தில் பிறந்த பையனுடன் தன் காதலியின் கிராமத்துக்கே
வரும் இளைஞன், தன் காதலியைக்கண்டு மீண்டும் காதலை புதுப்பிக்க
நினைப்பதும், பின்னர் வரும் சில காட்சி அமைப்புகளும் என இடைவேளை
வரை படம் ஜவ்வுகிறது.

அணையை உடைப்பதற்கென ஒரு அரசியல்வாதியின் பொறுப்பற்ற
வில்லத்தனம். இது ஒரு குறியீடு.

அணை உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து வரும் காட்சி அமைப்புகளின்
கிராபிக்ஸ் சரியான பல்லிளிப்பு. இதற்கா 50 கோடி செலவானது?

3D யாம். நம்பமுடியவில்லை கண்ணாடியை கழட்டிவிட்டு பார்த்தாலும்
படம் அதைவிட பளிச்சென்று இருக்கிறது. 30 வருடங்களுக்கு முன்
பார்த்த மை டியர் குட்டிச்சாத்தான் இதை விட நல்ல 3D effect கொடுத்ததாக
நினைவு.

மொத்தத்தில் படம் ஒட்டவில்லை. பார்த்தவர்களே வாஷ் அவுட் பண்ணிவிட்டார்கள்.


http://subramanian-thamirabharani.blogspot.com/
.

சனி, 12 நவம்பர், 2011

KF

கிங் பிஷரின் தலைவர் மல்லையா நெருக்கடியில் இருக்கிறாராம்.
உதவச்சொல்லி பிரதமரிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

கண்டிப்பாக பிரதமர் உதவுவார் என்றே தோன்றுகிறது. கார்ப்பரேட்
முதலைகளை காங்கிரஸ் என்றுமே கை விட்டதில்லை. முதலில்
மறுப்பது போல் நாடகமாடி வேறு பிரச்சனைகளுக்கு மக்களை திசை திருப்பி சத்தமேயில்லாமல் காரியத்தை முடித்து விடுவார்கள்.

கோடிக்கணக்கான பணத்தில் புரளும் மல்லையாவின் உதவி அடுத்த
தேர்தலுக்கு கண்டிப்பாகத்தேவைப்படுமே.

அதற்காகவாவது காங்கிரஸ் தலைமை இப்போதைய நெருக்கடியிலிருந்து
மீள மல்லையாவிற்கு உதவி செய்யும். சாதாரண மக்களின் துன்பங்களைக்கண்டு முகத்தை திருப்பிச்செல்லும் பிரதமர், மல்லையா
போன்ற முதலைகள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார்.

இந்த உதவி மட்டும் மல்லையாவிற்கு கிடைத்துவிட்டால் இதையே ஒரு
உதாரணமாகக்கொண்டு அம்பானி போன்ற கார்பரேட் பெரு முதலைகள்
நாளையே ஒரு நீளமான நஷ்டக்கணக்கை காண்பித்து அரசின்
உதவியைக்கோரும் நிலைமையும் வரலாம்.

எதையும் தாங்கும் இதயம்தான் இந்திய மக்களுக்கு உண்டே!!!