திங்கள், 24 அக்டோபர், 2011

black & white

கருப்பு வெள்ளை

இம்மாதிரி பழைய படங்களில் ஒரு உயிரோட்டம் இருப்பதென்னவோ நிஜம். இப்போது பார்த்தாலும் அது உறைக்கிறது.

குறிப்பாக சிவாஜியின் படங்கள். எம்ஜியாரின் சில குறிப்பிட்ட படங்கள்.

என் தங்கை என்னும் படத்தில் எம்ஜியார் தங்கையின் உடலைத்தோளில்
சுமந்தபடி கடலை நோக்கிச்செல்லும் கடைசிக்காட்சி இருக்கிறதே....

பார்த்தால் பசி தீரும் படத்தில் லேசாக ஊனமான ஒருகாலால் சிவாஜி
நடந்து வரும் ஒவ்வொரு காட்சியும்....

இவைகள் சின்ன உதாரணம் மட்டும்.

பாலச்சந்தரின் அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை படங்களில்
படம் நெடுக ஒரு சோகம், பயம் பின் தொடர முக்கிய காரணமே
கருப்பு வெள்ளையின் ஒளிப்பதிவுதான்.

கருப்பு வெள்ளை ஒளிப்பதிவில் அன்றைய நாயகிகள் அழகாகவே
காட்சியளித்தார்கள்.

சில படங்களின் கதையின் ஆழம் கருப்பு வெள்ளை ஒளிப்பதிவில்
நன்றாகவே ஒளிர்ந்தது.

அது போல் அன்றைய நடிகர்களின் பண்பட்ட நடிப்பும் கருப்பு வெள்ளை
படங்களில் மிகச்சிறப்பாகவே இருந்தன.

மயாபசாரில் தந்திரக்காட்சிகள் சிறப்பாக அமைந்ததின் காரணமும்
க.வெ ஒளிப்பதிவுதான்

சின்னத்திரையில் வரும் இது போன்ற க.வெ படங்கள் இப்பவும்
ரசிக்கக்கூடிய ஒரு அனுபவம்.




வெள்ளி, 21 அக்டோபர், 2011

தப்பும் சரியும்

தப்பும் 'சரி'யும்

நான் செய்தால் தப்பில்லை
நீ செய்தால் சரியில்லை

அமெரிக்கா செய்தால் தப்பில்லை
மற்ற நாடுகள் செய்தால் சரியில்லை

கம்யுனிஸ்ட் செய்தால் தப்பில்லை
காங்கிரஸ் செய்தால் சரியில்லை

திமுக செய்தால் தப்பில்லை
அதிமுக செய்தால் சரியில்லை

மற்ற நாடுகள் செய்தால் தப்பில்லை
அமெரிக்கா செய்தால் சரியில்லை

காங்கிரஸ் செய்தால் தப்பில்லை
கம்யுனிஸ்ட் செய்தால்  சரியில்லை

அதிமுக செய்தால் தப்பில்லை 
திமுக செய்தால் சரியில்லை 

ஆண் செய்தால் தப்பில்லை 
பெண் செய்தால் சரியில்லை 

நீ செய்தால் தப்பில்லை 
நான் செய்தால் சரியில்லை 

பெண் செய்தால் தப்பில்லை 
ஆண் செய்தால் சரியில்லை 

ஆக மொத்தம்  total

எதுவும் தப்பில்லை 
எதுவும் சரியில்லை 


ஞாயிறு, 16 அக்டோபர், 2011

நப்பாசை

நப்பாசை


அரசியல் சொல்கிறது
தலைவனை, தலைவியை
பின்பற்று என்று 

ஆன்மிகம் சொல்கிறது 
ஆண்டவனை 
பின்பற்று என்று 

மனைவி ஆணையிடுகிறாள் 
என்னை மட்டுமே 
பற்று என்று 

தாய் கண்டிக்கிறாள் 
அவளை 
பற்றாதே என்று 

ஆசைகள் இழுக்கின்றன 
என்னையே பற்றி 
வாழ் என்று 

கம்பெனி சொல்கிறது 
என்னைப்பற்றாவிட்டால் 
உனக்கேது வாழ்வு என்று 

முதியோர் சொன்னது 
'பற்றுக பற்றற்றான் பற்றினை 
அப்பற்றினை பற்று விடற்கு' என்று 

'ஆசை அறுமின்கள் ஆசையறுமின்கள் 
ஈசனோடாயினும் 
ஆசையறுமின்கள்'

என்றோ சித்தர் சொன்னது 
இன்னமும் புத்தியில் 
ஏறவில்லை. 

சனி, 15 அக்டோபர், 2011

வானுயர 2

பொருளாதார நிபுணர், ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைமை அதிகாரி,
தற்போது நாட்டின் தலைமைப்  பொறுப்பில் இருப்பவர் என்று அழைக்கப்படும் மன்மோகன் சிங்.

முன்னாள் நிதியமைச்சர், தற்போது பாதுகாப்பு? அமைச்சர், பொருளாதார
நிபுணர் என்றும் அழைக்கப்படும் சிதம்பரம்.

தற்போதைய நிதி அமைச்சரும், பொருளாதார நிபுணருமான பிரணாப்
முகர்ஜி.

இந்த மும்மூர்த்திகளின் கண்காணிப்பிலும் நாட்டின் பொருளாதாரம்
ஏனோ தானோ என்றுதான் இருக்கிறது.

விலைவாசி உயர்வு, பங்கு சந்தைகளின் சரிவு, தெலுங்கானா மற்றும்
ஊழல் பிரச்சனைகள் எதுவும் மகிழ்ச்சியைத்தருவதாக இல்லை.

2 ஜி பிரச்சனை பற்றி கேட்டால் பிரதமர் 'எனக்கு சோனியா 'ஜி', ராகுல்'ஜி' -
இந்த '2 ஜி' க்களை மட்டும்தான் தெரியும் என்கிறார்'

மேற்கொண்டு ஏதாவது கேட்டால் 'எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. நான் 
வெளியூரு ' என்று நழுவி விடுகிறார்.

எங்கோ சொந்த ஊரில் மணியடித்து பூஜை நடத்திகொண்டிருந்த பாவம்
பிரணாப் முகர்ஜி எல்லாம் 'பராசக்தியின்' லீலை என்றபடியே உள்ளூரில்
நடக்கின்ற சம்பவத்துக்கு வெளிநாட்டில் போய் மீட்டிங்கில் இருக்கும்
பிரதமரிடம் விளக்கம் சொல்கிறார்.

நம்ம ஊரு சிதம்பரம் 'இனிமேல் சத்தமில்லாத. அதிகம் வீர்யமில்லாத, ஏதோ நகம் மட்டும் பேந்து போறாப்புல பட்டாசை வெடிக்கச்சொல்லி
தீவிரவாதிகளிடம் கேட்டுக்கொள்ளப்போவதாகக்  கேள்வி.

ஒரு படத்தில் கவுண்டமணி கள்ளக்காதலியை பார்க்க அவள் வீட்டுக்கு வருவார்.
திடீரென அவள் கணவன் வந்துவிட கவுண்டமணி பயந்து பரண் மேல் ஏறி 
ஒளிந்து கொள்வார். வந்த கணவனிடம் அவள் 'என்னங்க அரிசி இல்ல, பருப்பு இல்ல என்று ஒவ்வொரு குறையாக சொல்ல 
'எல்லாம் மேலே இருக்கறவன் பார்த்துப்பான்' என்று கணவன் சொல்ல 
கவுண்டமணி கடுப்படைந்து 'யோவ் எல்லாம் மேல இருக்கறவன் பார்த்துப்பான்,
பார்த்துப்பான்னா நீ எதுக்குயா அவளை கொஞ்சிக்கிட்டுருக்கே'!!!

நம் மும்மூர்த்திகளும் 'எல்லாம் மேலே இருக்கறவன் பார்த்துப்பான்'
என்னும் மன நிலையில்தான் இருக்கிறார்கள் போலிருக்கிறது.











Sneha Veedu

சிநேக வீடு

மோகன்லாலின் சமீபத்திய மலையாளப்படம்.
சத்யன் அந்திக்காடின் இயக்கம்.

ஒரு சிறு கதை போன்ற இந்தப்படத்தின் கதையை ஒருசில வரிகளில்
அடக்கி விடலாம்.

பாலக்காடு கிராமத்தில் விவசாயம் செய்து அம்மாவுடன் நிம்மதியாக
வாழும் முதிர் காளையாக ஊரை வலம் வரும் மோகன்லால்.

விவசாயப்பணிகள் முடிந்து நண்பர்களுடன்  தன் பழைய சென்னை
வாழ்க்கையில் பல பெண்கள் தன்னையே சுற்றி வந்த கதைகளை ' பீலா' 
விட்டுக்கொண்டும், அவர்களுக்கு மத்தியில் ஹீரோவாக தன்னை முன் 
நிறுத்தி பல கலை நிகழ்சிகளை நடத்தியும் நேரம் போக்கும் லால் இரவில் 
நேரம் கழித்துதான் வீடு திரும்புவார் .

அப்படி ஒரு முறை வீட்டிற்கு வரும்போது வீடு இருளடைந்து கிடக்கிறது.
வாசலில் ஒரு 15 வயது பையன் உட்கார்ந்திருக்கிறான் . ஒன்றும் புரியாமல் 
உள்ளே செல்லும்  மோகன்லால்  அம்மா கோபமாக உட்கார்ந்திருப்பதைக்கண்டு காரணம் கேட்க, வாசலில் உட்கார்ந்திருக்கும்
பையன் தன்னை அப்பா என்று குறிப்பிட்டான் என்பதைக்கேட்டு அதிர்ச்சி
அடைகிறார்.
கல்யாணம் ஆகாத தனக்கு எப்படி மகன் என்று குழம்ப, லாலின் 'பீலா'
கதைகளை கேட்டுப்பழகிய ஊரார் சந்தேகிக்கின்றனர் .

அம்மாவும் தன்னை சந்தேகிப்பதைக்கண்டு , வெகுண்ட மோகன்லால் அந்த 
பையனை ஊரை விட்டு அனுப்ப பல முயற்சிகளும் செய்கிறார் .
ஆனால் அம்மாவுக்கு அது பிடிக்காமல் அவனை பேரனாக ஏற்றுக்கொள்கிறார் .
தன் மீது இருக்கும் களங்கத்தை போக்க சென்னைக்கு , அந்தப்பையனின் 
வேர்களைத்தேடிச்
செல்கிறார் மோகன்லால்.

சென்னையில் பழைய நண்பரைக்கண்டு பிடித்து விஷயத்திச்சொல்ல,
நண்பரோ, தான்தான் பையனிடம் மோகன்லாலின் பழைய போட்டோவைக்கொடுத்து , இவர்தான் உன் அப்பா என்று சொல்லி அனுப்பியதாகவும் சொல்கிறார்.

இனி flash back


படப்பிடிப்புக்காக துணை நடிகைகளை சப்ளை செய்யும் நண்பர் தவறான
உறவால் தாய்மை அடையும் ஒரு துணை நடிகைக்கு அடைக்கலம்
கொடுக்கிறார். அவரின்  உதவியோடு மகனை பள்ளி இறுதி வரை
படிக்க வைக்கிறாள் துணை நடிகை. ஒரு முறை படப்பிடிப்பில்
விபத்துக்கு ஆளாகி நடிகை இறக்க, இதைக்கேள்விப்படும் பையன்
மனமுடைந்து தற்கொலைக்கு முயல்கிறான்

அதை தடுக்கும் நண்பர் ' நீ அநாதை இல்லை. உனக்கொரு அப்பா இருக்கிறார். நீ அவரிடம் போ. என்று சொல்லி மோகன்லாலின் போட்டோவையும்  விலாசத்தையும் கொடுத்து விடுகிறார்

திகைக்கும் மோகன்லால் 'என் போட்டோவை கொடுத்து அவனை அனுப்பி
ஏன் என் நிம்மதியை கெடுத்தீர்கள் என்று கேட்க ' அவன் சின்னப்பையன்
தற்கொலை செய்யத்துணிந்த அவனுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்க
இதைத்தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை என்கிறார் நண்பர் .

சரி ஊருக்கு வந்து என் அம்மாவிடம் உண்மையை கூறுங்கள் என்று
அவரை அம்மாவிடம் அழைத்து வருகிறார் லால் .

இங்கு வந்தால் பையனைக்காணவில்லை. அம்மாவிடம் கேட்டபோது '
உனக்கு அவனை பிடிக்கவில்லை என்று மனம் நொந்து கிளம்பி  விட்டான்
என்கிறாள்.

நண்பருடன் ஸ்டேஷனுக்கு வந்து பார்க்கும் லால் பையன் தனியாக 
உட்கார்ந்திருப்பதைக்கண்டு சட்டென்று தோன்றும் ஒரு உணர்ச்சிப்பெருக்கோடு 
பையனை கட்டி அணைத்து 'நீ நீ என் மகன்தான்' என்று விதும்பலோடு
கூறுகிறார். இருவர் கண்களும் கலங்குகின்றன.

சாதாரண  கதை. தெளிவான இயக்கம்.

இசை இளையராஜா. பாடல்கள் எல்லாமே முத்து.

சிம்பிளான நிறைவான படம்.









  


வெள்ளி, 14 அக்டோபர், 2011

Rape-O

இப்படித்தான் அழைக்கத் தோன்றுகிறது இதை.

பண வீக்கம் கூடும்போது ரிசர்வ் வங்கி மேலாளர்களில் சிலர் சொட்டைத்
தலை பளீரிட முகமெல்லாம் பல்லாக, வட்டி விகித்தத்தை கால் சதவீதம்
கூட்டிவிட்டு காலாற நடந்து, ஏசி காரில் ஏறி போயே விடுவார்கள்.

Repoரிவர்ஸ் repo என்று கூறப் படும் வங்கிகளின்- பணப் பரிமாற்றங்களின் 
வட்டி விகிதக்கூடுதல், வீட்டுக் கடன், வாகனக் கடன், கோமணக் கடன் என்று
வாங்கிய  சாதாரண மக்களின் தலையில் தான் விழுகிறது.

கேட்டால் மற்ற வங்கிகள் சொல்வது 'ரிசர்வ் வங்கி எங்களை ரேப்பினால்
நாங்கள் வாடிக்கையாளர்கள் மீது தான் ரேப்ப முடியும்'. என்று.

சமீபத்தில் ஒரு தனியார் வங்கி வாடிக்கையாளர் முணு முணுத்துக் கொண்டே சொன்னது ' என்ர பணத்த என்ர காலால நடந்து வந்து என்ர
கணக்குல கட்டறதுக்கு சார்ஜ் கொடுக்கணுமாம்'.

மேலாளரிடம் கேட்டபோது ' இதுவும் அந்த 'ரேப்போ' வட்டி விகித கணக்கு
தான் சார். ஒரு மாதத்தில் 5 தடவை மட்டும் தான் சொந்த சேமிப்பு
கணக்கில் பணம் கட்ட அனுமதி. அதற்கு மேல் கட்ட வேண்டும் என்றால்
தனி சார்ஜ் கொடுக்க வேண்டும். ரிசர்வ் வங்கி இப்படி வட்டி விகிதத்தை 
கூட்டி கொண்டே சென்றால் நாங்கள் எங்கு போவது? சமாளிக்க வேண்டாமா ?
கூடிய விரைவில் எல்லா வங்கிகளும் எங்கள் வழியை பின்பற்றும்,
பாருங்கள்' என்றார்.

அதென்னவோ எல்லா வியாழக்கிழமையும் இந்த மாதிரி கால் சதவீதம்
பயமுறுத்தல்   தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.






ஞாயிறு, 9 அக்டோபர், 2011

தெளிவு

தெளிவு


எந்த ஒரு புரிதலும்
நம்மை அடைய
எடுத்துக்கொள்ளும் நேரம்
முழுமையானது

நமக்கான நேரம் கட்டமைக்கப்படின்
அதுவே துல்லிய தியான கட்டம்

எனினும்-
விடுபட்ட சிறகடி பதற்றங்கள்
மீண்டும் மீண்டும்
அலைக்கழிக்க முடிவில்
புரிதலே இல்லை.