வெள்ளி, 17 ஜூன், 2016

இணக்கம்

பிணக்கத்துக்கு முன்னால்
இருந்தது

பின்னால் தானே வருவது
அல்லது வரவழைப்பது

பிணக்கத்துக்குப் பின்
வரும் இணக்கம் -
சுணக்கமின்றி கிடைப்பது

இணக்கத்துக்காகத்தான்
வணக்கமே!

ஞாயிறு, 12 ஜூன், 2016

சம்மதம்

சில நேரங்களில் மட்டுமே
சம்மதம் முழுமையாகிறது

மிதமான சம்மதம் மட்டுமே
பல கருத்துக்களில்....

திணிக்கப்படும் சம்மதம்
மதம் பிடிக்க வைத்துவிடுகிறது

எம்மதமாயினும்
சம்மதம் முக்கியம்

முக்கியமான சம்மதம்
எம்மதத்தையும்
காயப்படுத்துவதில்லை

மதமில்லா மனதே
மிதமான பூரண

சம்மதம்!

திங்கள், 6 ஜூன், 2016

இருவர்

பாதிப்பேர் கூத்தாடிகள்
மீதிப்பேர் பார்வையாளர்கள்

அவர்களால் சூழ்ந்த உலகமிது
அபூர்வ சந்தர்ப்பங்களில்
இவை இடம் மாறலாம்

கூத்தாடிகள் பொறுப்பைச்
சுமப்பது போல் நடிப்பவர்கள்

பார்வையாளர்களும் வேடிக்கை
பார்ப்பது போல் நடிப்பவர்கள்

இருவரும் ஏதோ ஒரு விதத்தில்
கூத்தாடிப் பார்வையாளர்களே!


சனி, 4 ஜூன், 2016

நல்ல யோசனை

அத்தனை யோசனைகளும்
ஏதோ ஒரு பேர் தெரியாத
யோசனைக்குள்
புகுந்து விட்டது

அதை மீட்டெடுக்க
மீள் யோசனையின்
சுவடொற்றினேன்

ஒற்றிய சுவடின் யோசனையில்
உதித்ததொரு யோசனை -

இனி யோசனையேயின்றி
இருக்க!



வியாழன், 2 ஜூன், 2016

புரிதல்

எதுவும் புரியாமலிருப்பதே
சுகம்

புரிந்தால் சுமையாகிவிடும்
சுமைகள் புரியாமலிருப்பது
லேசாக இருப்பதின்
துல்லியம்

சுமை அடையாளமல்ல
அது தேவையுமல்ல

இருந்தும் சுமைகளால்
மட்டுமே வடிவமைக்கப்பட்ட
வாழ்க்கை

அதைப் புரிந்து கொள்ளச்
சென்றால் ஏறிக் கொள்ளும்
பாரம்

வெறும் பார்வை
பாரத்துடன்
கட்டமைக்கப் படுவதும்

ஏதோ ஒரு
விதத்தில்
சுமையே!

செவ்வாய், 31 மே, 2016

நவ ரசம்

ஒவ்வொரு கணமும்
உரசிச் செல்லும்
பயங்கள் -
ஏதோ ஒரு விதத்தில்

உள்ளிலும் வெளியிலுமாய்
சுற்றித் திரிவதொன்றே என
கண் கட்டும்

ஆற்றொணா நினைவழுத்தல்கள்
தொக்கி நிற்பதும் - வேற்றுணர்வின்றி
வேராய் ஓடுவதும் நாராசமெனினும்

அது ஏனோ நவரசமும் கலந்தது!

சனி, 28 மே, 2016

அப்படித்தான்.....

பின் தொடர்வதெல்லாம்
பின்னலாகத்தான் தோன்றும்

எதற்கும் கலங்காத உள்ளம்
என்பது நடிப்பன்றி
வேறொன்றுமில்லை

நிறைவு என்பது 
நாள் பட்டுப் போகும்போது
சோர்ந்துவிடும் ஒன்று

விரைவில் தீர்மானிக்கப்படலாம்
அரைமனதாகத்தான்
செயலாற்ற வேண்டுமென்று

தொடங்கும்போதே
தப்பித்துக் கொள்ளும்
எண்ணமே மேலோங்கும்
எதிலும்!

வெள்ளி, 27 மே, 2016

அது அவ்வாறு

அவ்வாறு இருப்பது மட்டுமே
அவ்வாறான காரணங்களைத்
தோற்றுவிக்கிறது

பாதைகள் முடிவில்லாமல்
சென்றாலும் பயணங்கள்
என்றாவது முடிந்துதான்
தீரவேண்டும்

விரக்தி எதிலும்
ஒட்டுவதில்லை

தெரிந்து ஒன்றும்
செய்யப்போவதில்லை
தெரிவது மட்டுமே

தீர்வுமில்லை

அப்படியே நகரட்டும்
வாழ்க்கையின்
நிகழ்வுகள்

மாற்றங்கள் தானே
மாறிக் கொள்ளும்

அவ்வாறான காரணமும்
அவ்வாறே!

வியாழன், 26 மே, 2016

ஒன்றுமில்லை

ஒன்றுமில்லை -

எதுவும் நடந்து
முடிந்தபின்

அன்றன்றைக்கு
நடப்பதும்

பின்
ஒன்றுமில்லை

என்றுமில்லை -
எப்போவாவதுதான்
என்பதன் உத்தேசமும்

ஏனோ
ஒன்றுமில்லை

சரி! வேறொன்று
மில்லையே என்றாலும்

எனக்கொன்றுமில்லை!



வெற்றிடம்

வெற்றிடம்


வேறு வேறு இடமும்
வெற்றிடமே

இடம் மாறினால் மனதில்
முதலில் வருவது
வெற்றிடமே

வேறிடம் பார்த்துச்
செல்வதும் வெற்றிடம்
தேடியே

அமைதி வேண்டுமெனில்
உள்ளத்தில் வரவேண்டியதும்

அதே வெற்றிடமே!

சனி, 25 ஜூலை, 2015

எளிமை

மகத்தான
ஆனால்
யாராலும்

இப்போது
செயல்படுத்த
முடியாத
ஒன்று!

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

ஏலே!

லே! நான் தின்னேலி லே!

திருநெல்வேலின்னா  லே ஒரு மெதப்புதாம்   லே!



அந்த லே க்கு அப்படி ஒரு இணைப்பு பாசம்! சென்ற வாரம் நெல்லைக்குச் சென்று வந்த பிறகும் மனசு அங்ஙனயேதான் சுத்திக்கிட்டிருக்கு. தாமிரபரணியில் நல்ல குளியல். கல்லிடையில் தாமிரபரணிக் குளியலுக்கு அப்படி ஒரு சுகம். வயது 70 ஐத் தாண்டியவர்களும்
தினமும் ஆற்றில் குளித்து ஆரோக்கியத்தைப் பேணுகிறார்கள்! வற்றாத ஜீவ நதி! நெல்லை மக்களின் தாய் தாமிரபரணி!

இருட்டுக் கடை அல்வாவின் தனிச்சுவைக்கே தாமிரபரணிதான் காரணம்! அந்த நதி ஓடும் பாதையெல்லாம் செழிப்புக்குப் பஞ்சமில்லை! புராணம் ராமாயண மகாபாரத காலத்திலும் தாமிரபரணியின் புகழ் ஓங்கியிருந்தது.

அதன் கரைகளில்தான் எத்தனை புகழ் வாய்ந்த புராதன கோயில்கள்! சைவமும் வைணவமும் தழைத்து வளர்ந்த நதிக்கரை! 

அரசியல் மற்றும் பணமுதலைகளிடமிருந்து அந்த நதியைக் காப்பாற்றுவது நெல்லை மக்களின் தலையாய கடமை! தாமிரபரணியை மறந்தால் நம் வாழ்வை மட்டுமல்ல எதிர்கால சந்ததியையே நாம் மறக்கிறோம்!

தாமிரபரணியை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்!


லே! தாமிரபரணி லே!

ஞாயிறு, 6 ஜூலை, 2014

பாதை

யாரோ யோசித்து
யார் யாரோ போட்ட
பாதை!

போவதும் வருவதும்
யாராரோ

யாரும் யாரையும்
நினைவில்
கொள்வதில்லை -
லாபமிருந்தாலொழிய!

இருந்தும் ஏதோ ஒரு
பாதை தேவைப்படுகிறது

வாழ்க்கைப் பாதையை
நடத்த..........

சனி, 28 ஜூன், 2014

தென்றல்

நினைவுகளிலும்
செயல்களிலும்
இதன் தாக்கம்
இருப்பின் -

விளைவுகளும்
அப்படியே
இருக்கும்!

நமக்குத் தேவை
எப்போதும்
இதன் வருடலே!

யோசித்துப்
பாருங்கள்

அப்போது
புரியும்

இதன்
நிரந்தர

சுகம்!

ஞாயிறு, 22 ஜூன், 2014

அது அப்படித்தாங்க......

அது அப்படித்தாங்க.......

இந்த முறை பருவ மழை பொய்க்குமோ என்ற கவலை. பொய்த்தால் அதன்
காரணங்களைக் கூறியே விலைவாசி ஏற்றப்படும்! (இப்ப மட்டும் என்ன வாழுது?) இப்பொழுது கேரளாவில் தினமும் இரவில் 75 நிமிடங்களுக்கு மின் வெட்டு அமல் படுத்தப் பட்டிருக்கிறது. மழை இல்லாவிட்டால் இதன் நேரம் இன்னமும் அதிகமாக்கப்படும் என்று தகவல்.

வள்ளுவன் சொன்னது எல்லாக் காலத்துக்கும் பொருந்தும்!

வான் பொய்த்தால் வாழ்வு பொய்த்துவிடும்!

பொய்க்காமல் பெய்யட்டும் மழை!
----------------------------------------------------------------------

அரசாங்கத்துக்கு உலக வங்கி என்பது என்றும்
தம் மக்களே............
----------------------------------------------------------------------

பெரும்பான்மை இருந்தால் எதையும்
தைரியமாகச் செய்யலாம்!
-----------------------------------------------------------------------


சனி, 21 ஜூன், 2014

புதுசு

பதுசு

எது என்று தெரிவதில்லை
எதுவும்!
ஆசையோடு நெருங்குகையில்
தோன்றுமது!

முடிந்ததும் தோன்றும் -

அது சென்ற கணத்தின்
புதுசென்று

வெந்த சோறு புதுசு

அடுத்த நாள் தண்ணி
ஊற்றிய அதே சோறு
அப்போதைய பசிக்கு
புதுசு!

ஒவ்வொரு முறை
வரும் பசியும்
புதுசு.

அடங்கிப் பின்
வருவதும்

அதே பழைய
புதுசு.........

சனி, 1 டிசம்பர், 2012

பின்னோக்கி...........

அடிக்கடி கொஞ்சம் பின்னோக்கிச் செல்வது சுகமே!
நிகழ்வுகளில் கனவு மட்டுமே இதம்.
இப்போது கிடைத்ததை விட முன்பு 
உறுத்திய முட்கள் இன்று 
மலர்களெனத் தோன்றும்!

பழைய உறவுகள் இளமைத் தோழமைகள்-
இன்றளவும் சாகா வரம் பெற்று
பின் தொடரும் - நினைவில் மட்டும்!

மானிட இலக்கியத்தில் ஒவ்வொரு
அத்தியாயமும் புலம்பல் சுவையே!

நிரப்பப் படாத தாள்கள் மெதுவாக
முதுமையின் கைப்பிடித்து -
பின்னோக்கிப் பார்த்தவாறே.............







ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

மலை

மலைப்பான விஷயங்கள் வாழ்வில் பலமுறை நடக்கும்.
மலைகளைக் காணும்போதெல்லாம் மலைத்திருக்கிறேன் பலமுறை. அதன் அழகு, கம்பீரம் அமைதி என்னை மலைக்க வைத்திருக்கின்றன.இன்னமும்.
உண்மையில் மலைகள் மனிதனின் இயற்கையான வாழ்வுக்கு பெருமளவு துணை புரிகின்றன. காற்றையும் மேகங்களையும் தடுத்து மழை பொழிவிப்பதில் பெரும்பங்காற்றுகின்றன!

 இந்த மலைகளைத்தான் இன்று உடைத்து கிரானைட் கற்களாக்கி பண மலைகளை உருவாக்குகிறார்கள் பண முதலைகள்.
இதற்கு அரசு அதிகாரிகளும் துணை போவதாகக் கேள்வி!

என்று மனிதன் பிழைப்புக்காக கிராம வாழ்வைத் தொலைத்தானோ அன்றே இயற்கை வளங்களையும் கொஞ்சங் கொஞ்சமாகத் தொலைக்கத் தலைப்பட்டு விட்டான்.அவனுக்குத் தேவை செயற்கைச் சுகங்கள். அதை அடைய அதிக பணம் தேவை. அதற்கு இயற்கையைக் கொன்றாவது அவன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும்! ஆடம்பர வாழ்க்கை, துரித உணவு, குளிர்பதன சிற்றூர்தி, வெளிநாட்டு மோகம், எங்கு போவதாக இருந்தாலும்
முதுகில் ஏசியைச் சுமந்து செல்ல வேண்டும். இதற்கெல்லாம் சில பேருக்கு
எந்த வழியிலாவது பணம் ஈட்ட வேண்டும்.
உண்மையில் இப்படிப் பட்டவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு சொத்தைச் சேர்த்து வைக்கவில்லை. நஞ்சைத்தான் சேர்த்து வைக்கிறார்கள்.

இயற்கையை ஒதுக்கி வாழும் இப்படிப் பட்ட வாழ்வில் அவர்கள் வாரிசுகளை
நாளை இயற்கையே ஒதுக்கிவிடும். அதற்கு பெரும் விலை கொடுக்கும் நாள் வெகு தூரத்திலில்லை!





ஞாயிறு, 8 ஜூலை, 2012

புரிந்தபோது...

பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் - என்னை
ஆழமாகக் காதலித்ததாக ஒரு உண்மையைச் சொன்னாள் அவள்.

நான் அன்று போல் இன்றும் வெளிக்காட்டாமல்
மௌனமாகவே......

அவள் கையில் இருந்த குழந்தை என்னிடம் தாவியது.
கேட்டபோது நவின்றாள்.

--- பேரனாம்.........


புதன், 13 ஜூன், 2012

ஆங்காங்கிலம்

அந்த மொழியை இணைப்பு மொழி என்கிறார்கள்
எதை எதை இணைக்க என்றுதான் தெரியவில்லை

அந்த மொழியை இங்கே கொண்டு வந்தவர்கள் -
பிரித்தாளும் பிரித்தானியச் சூழ்ச்சியைத்தானே
விதைத்தார்கள்

கற்றுக்கொண்டவர்கள் தங்களை உயர்நிலை வேந்தனாகக் -
காட்டிக் கொண்டார்கள்
திகைத்து நின்றவனை பாமரன் என்றழைத்து -
பிரித்துப் பார்த்தார்கள்.
எதை எதை இணைத்தார்கள் என்று இன்னும்
தெரியவில்லை

பிரித்துப் பேதம் பார்க்கும் ஒரு மொழியை - இணைப்பு மொழி
என்பதன் நோக்கம் என்னவென்றே இன்னமும் -
புரியவேயில்லை!அ